Total Pageviews

Tuesday, September 25, 2012

Innocence of Muslims படத்தின் எதிரொலி : ஒஸ்காரை புறக்கணிக்கிறது ஈரான்


இஸ்லாம் மார்க்கத்தினையும் அதன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இன்னசென்ஸ் ஒப் முஸ்லிம்ஸ் திரைப்படத்திற்கு தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் ஒஸ்கார் விருது விழாவினை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

உலகின் பல பாகங்களிலும் குறித்த அமெரிக்க திரைப்படத்திற்கு முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை பல்வேறு வழிகளில் வெளியிட்டு வரும் இந்நிலையில் ஈரானும் குறித்த திரைப்படத்திற்கு கண்டனத்தை வெளியிடும் வகையில் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஒஸ்கார் விருது விழாவிற்கு தங்கள் நாட்டிலிருந்து படங்களை அனுப்பப்போவதில்லை என அந்நாட்டு கலாச்சாரத் துறை அமைச்சர் முஹம்மது ஹொஸ்னி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை ஈரான் புறக்கணிக்கிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். இதே போன்று மற்ற முஸ்லிம் நாடுகளும் ஒஸ்கhர் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒஸ்காருக்கு அனுப்புவதாக இருந்த ஈரானிய படம் 'எ க்யூப் ஆப் ஷுகரை' நிறுத்தி வைப்பது என்று அதன் தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் இது குறித்து ஈரானிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை என்று ஒஸ்கர் விருது விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஒஸ்கார் விருதினை ஈரானிய படங்கள் பல தடவைகள் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.