Total Pageviews

Tuesday, September 4, 2012

விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 மைக்ரோசொப்டின் எழுச்சியா? வீழ்ச்சியா?


காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் என்பார்கள் ஆனால் மைக்ரோசொப்ட்டின் விடயத்தில் இது பொய்யாகிவிடும் போலிருக்கிறது. இங்கு நிலைமை குருத்தோலை விழ காவோலை சிரிப்பது போல தோற்றமளிக்கின்றது.

கணனி உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களின் நிலைமை இன்றைய நிலவரப்படி வெற்றிப் படிக்கட்டுக்களிலேயே பயணிப்பதாக எண்ணத்தோன்றுகின்றது. இத்தனைக்கும் மைக்ரோசொப்டின் இயங்கு தளங்களுக்கு போட்டி என எந்தவொரு இயங்கு தளமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உலகில் மொத்த கணனி பாவனையாளர்களில் 80% இற்கும் அதிகமானோர் பயன்படுத்துவது மைக்ரோசொப்ட்டின் இயங்கு தளங்களே எனக் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தடுத்தடுத்த இடங்களில் இருக்மு; மெக் மற்றும் லினக்ஸ் முறையே 9%, 5% என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் இயங்குதளங்களுக்கு முன்னோடியாகவும் தனிக்காட்டு ராஜாவாகவும் இருந்து வந்த விண்டோஸ் எக்ஸ்.பீ என்ற இயங்குதளத்திற்கு பின்னர் வெளியான விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பீ அளவிற்கு மக்களிடம் நற்பெயரினை எடுக்க தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும். அதேவேளை விண்டோஸ் எக்ஸ்.பீயின் தரத்திற்கும் இவை ஈடுகொடுக்கவில்லை. இவ்வாறானதொரு இறுக்கமான நிலையிலேயே விண்டோஸ் 8 பீட்டா வெளியிடப்பட்டுள்ளது.



விஸ்டா வெளியாகிய போது பெருவாரியான கணனிப் பயனர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியது. என்றாலும் அந்த அலை மைக்ரோசொப்டின் உற்பத்தி என்பதாலே ஏற்பட்டது என்பது காலப்போக்கில் வெகுசீக்கிரமாகவே உணரப்பட்டது.

விண்டோஸ் எக்ஸ்.பீ வெளியாகி சுமார் ஐந்தரை வருடங்களின் பின்னரே விஸ்டா இயங்கு தளம் வெளியானது ஆனால் விஸ்டா ஒன்றரை வருடம் கூட மக்கள் மத்தியில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிதற்கு, விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் வெகு சீக்கிரமான வரவே சாட்சியாகிவிட்டது.

உண்மையில் விஸ்டாவில் மாற்றங்கள் பல இடம்பெற்றிந்தாலும் அம்மாற்றங்கள் மாற்றத்தை விரும்பிய பயனர்களை மிகப் பெரியளவில் அதிருப்தியை ஏற்படுத்தி மைக்ரோசொப்டின் இன்னுமொரு இயங்குதளத்தின் வரவினை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருந்தது.

விஸ்டா இயங்கு தளத்தின் பார்வை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் இதற்கு முன் வெளியான மைக்ரோசொப்ட்டின் எந்தவொரு இயங்குதளத்திலும் இல்லாத அளவிற்கு உயர்தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இவற்றை தாண்டி பல்வேறு பிரச்சினைகளையும் தொல்லையையும் பயனர்களுக்கு தந்தது. குறிப்பாக இணைய அமைப்பில் பிரச்சினைகளை தோற்றுவித்ததனால் பயனர்களுக்கும் விஸ்டா இயங்குதளத்திற்குமான தூரம் அதிகரித்தது.

இதனால் விஸ்டா இயங்குதளங்களுடன் வெளியான பல கணனிகள் விண்டோஸ் எக்ஸ்.பீ யை நாடிச்செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. விஸ்டாவின் வன்பொருள் தேவைகளை வின்டோஸ் எக்ஸ்.பீயுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் என்றே சொல்லவேண்டும்.

பென்டியம் II புரொசசர்களுக்கே ஒத்துளைக்கும் தன்மை வாய்ந்தது எக்ஸ்.பீ. விஸ்டாவின் தேவைகள் சற்று அதிகம். விஸ்டாவின் இயங்கு தளத்தின் உச்சபயன்பாடுகளை பெற வேண்டுமாயின் பென்டியம் IV புரொசசர், 1 ஜீ.பீ நினைவகம், 128எம்.பீ. வீ.ஜீ.ஏ, டீ.வீ.டி ரொம் மற்றும் 40 ஜீ.பீ வன்தட்டு என இதன் தேவைகள் ஒப்பீட்டு ரீதியில் அதிகம் ஆனாலும் விண்டோஸ் எக்ஸ்.பீ இயங்கு தளத்தின் வேகத்தினை விஸ்டாவினால் வழங்க முடியவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது.

மேலும் குறித்த வன்பொருட்கள் தேவைகளை பூர்த்தி செய்திருந்த கணனிகளில் கூட விஸ்டா ஒத்திசையவில்லை காரணம் பல வன்பொருட்களுக்கான ட்ரைவர்ஸ் இதில் கிடைக்கவில்லை. இதில் குறிப்பாக ஒலி வன்பொருட்களுக்கான ஒத்திசைவு மிகக் குறைவாக காணப்பட்டது. இதனால் கையிருப்பில் இருந்த கணனிகளுக்கு விஸ்டாவினை பூட் செய்யமுடியாமல் போனது.

மேலும் இதுபோல் இன்னும் பல சிறு சிறு குறைபாடுகளை தோற்றுவித்து பயனர்களின் வெறுப்புக்குள்ளாகியது. இதன்போது பெரும் நெருக்கடிக்குள் சிக்கிய மைக்ரோசொப்ட் வித்தியாசமாகவும் அதேவேளை நிலைக்கக்கூடியதுமான ஒரு இயங்கு தளத்தினை களம் நுழைக்க வேண்டி ஏற்பட்டது.

இவ்வாறனதொரு சந்தர்ப்பத்திலேயே விஸ்டாவின் தோல்வியினால் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்தாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது அடுத்த அஸ்திரமான விண்டோஸ் 7 இயங்கு தளத்தினை 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிட்டது.

இந்த விண்டோஸ் இயங்கு தளமே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பயனர்களை விஸ்டாவிலிருந்து சற்று ஆறுதல் அளித்து வருகின்றது. தற்போது உலகளவில் அதிகம் பயன்படுத்தும் இயங்கு தளமும் இதுவே. இருப்பினும் இன்றளவிலும் டெக்ஸ்டொப் கணனிகளில் 60% இற்கும் அதிகமானோரும் மொத்தத்தில் 30% அதிகமானோரும் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்.பீ என்றே தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இணையத்தளங்களில் நடாத்தப்படும் கருத்துக் கணிப்புக்களில் இதுவரை வெளியான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிறந்த படைப்பாக பலரும் ஆதரவாக வாக்களிப்பது விண்டோஸ் எக்ஸ்.பீ என்பதே. இதிலிருந்தே அறியமுடியகின்றது விண்டோஸ் 7 காலத்தின் தேவையிலிருந்து சற்று பின் நிற்பது.

இருந்தபோதும் இன்னும் சில நிறுவனங்கள் விண்டோஸ் எக்ஸ்.பீ மற்றும் சில அரிய நிறுவனங்களில் விண்டோஸ் 98 இயங்கு தளங்களும் கூட பயன்படுத்துகின்றது. எமது நாட்டினை போன்று மேற்கத்தேய நாடுகளில் தடைசெய்யப்பட்ட (Pirate) பதிப்புக்களை பயன்படுத்த முடியாது. எனவே செலவீனங்களை கருத்திற்கொண்டும் சில நிறுவனங்கள் புதிய இயங்கு தளங்களினை கொள்வனது செய்வதினை தவிர்த்து வருகின்றது. விண்டோஸ் 7 இன் பரவலுக்கும் இதுவும் ஒரு தடையாக அமைந்துள்ளதென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் விண்டோஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. காரணம் இதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பயனர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

64 பிட் கணனிகளுக்கு சிறந்த பயன்பாட்டினை காட்டும் விண்டோஸ் 7 இல் கோம் குரூப், ஸ்னெப், ஜம்ப் லிஸ்ட், விண்டோஸ் லைவ் எஸ்ஸென்சியல், விண்டோஸ் சேர்ச், விண்டோஸ் சேர்ச் பார் மற்றும் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்ட விண்டோஸ் பார் என தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சாதகமான பல புது அனுபவங்களை தரும் விடயங்கள் காணப்பட்டது.

இதனால் சிறிது சிறிதாக பயனர்கள் விண்டோஸ் 7 இல் கவரப்பட்டனர். மேலும் இதன் வன்பொருட்களின் தேவைகளை நிறைவு செய்ய தற்போது இலகுவாக உள்ளது. விஸ்டாவின் வருகையிருந்து விண்டோஸ் 7 இன் வருகையிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வன்பொருட்களின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இதனால் பழைய கணனிகளின் சில வன்பொருட்கள் சந்தையில் மறைந்துவிட்டது.

இதன் பொருட்டு கணனிகளின் வன்பொருட்களின் தரம் உயர்ந்தது. இதனால் விண்டோஸ் 7 இன் வன்பொருட்களின் தேவையை இலகுவில்; நிறைவேற்றக்கூடிய பயனர்கள் அதிகரித்தது விண்டோஸ் 7 இற்கான பரவலுக்கு வாய்ப்பாக அமைந்தது. மேலும் தற்போது மடிக்கணனி, நெட்புக், நோட் புக் மற்றும் டெப்லட் என்பவற்றின் பாவனை டெக்ஸ்டொப் கணனிகளை மிஞ்சுவதும் விண்டோஸ் 7 இன் தேவையினை அதிகரித்துள்ளது.

இவ்வாறிருந்த போதும் இதிலும் குறைபாடுகள் காணப்படவே செய்தது. குறிப்பாக ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த மென்பொருட்கள் இதற்கு ஒத்திசையவில்லை, வேகம் குறைவு, விண்டோஸ் ஏரோ இயக்கம் தடைப்பட்டிருத்தல் மற்றும் டீ.வீ.டீ ரொம் இனை கணனியிலிருந்து விலக்குதல் என சில பல குறைபாடுகளை கொண்டிருந்தது. இவற்றுடன் சேர்த்து மேலும் சில குறைகளும் காணப்பட்டது.

விஸ்டாவில் ஏற்பட்ட குறைபாடுகளை போலல்லாமல் இக்குறைபாடுகளை நிவர்த்திசெய்யக்கூடியதாக இருந்தது. அதற்கான தீர்வுகளை மைக்ரோசொப்ட் நிறுவனமே வழங்கியமையால் பயனர்களை மெல்ல மெல்ல கவர்ந்தது.

மேலும் விண்டோஸ் 7 இயங்கு தளத்தின் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான கணனிகளில் முதன்மை இருப்பாக விண்டோஸ் 7 இயங்கு தளமே காணப்பட்டது.

இவ்வாறான பல சாதகமான காரணிகளை விஸ்டாவினை விட அதிகளவில் விண்டோஸ் 7 கொண்டிருந்தமையினால் விண்டோஸ் 7 இரண்டரை ஆண்டினை தாண்டி மக்களிடத்தில் நிலைத்திருக்க முடிந்து.

இனி வரும் காலங்களில் விண்டோஸ் 8 இயங்கு தளம் இந்த விண்டோஸ் 7 இன் பாவனை கட்டுப்படுத்தும் அளவிற்கு அற்புதமான பல புதிய தொழில்நுட்ப அம்சங்களினை கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பீட்டா வெளியிட்டு இந்த குறுகிய காலப்பகுதியிலே மிகச் சிறப்பான பெயரினை விண்டோஸ் 8 அள்ளியிருப்பது மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு மட்டுமன்றி மாற்றத்தை விரும்பிய பயனர்களையும் உற்சாகப்படுத்தும் என நம்பலாம்.

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகமான மாற்றங்களுடன் வெளிவந்திருக்கும் விண்டோஸ் 8 இன் குறிப்பிடத்தக்க மிக முக்கிய அம்சமாக தொட்டு இயக்கும் வசதி என தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் தற்போது அனேகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் என தொடுதிரை வசதியினை பயன்படுத்துவதனால் கணனியிலும் இதனை வெகுவாக எதிர்பார்க்கின்றனர்.

எனவே விண்டோஸ் 8 இல் இவ்வசதி காணப்படுவதனால் பலரும் இந்த அனுபவத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனாலும் பலரினால் இப்போது இவ்வசதியினை அனுபவிக்க முடியவில்லை இருப்பினும் பலரும் இணையத்தளங்களினூடாக இவ்வசதி சிறப்பாக இருக்கும் என பீட்டா பயனாளர்கள் தெரிவித்துவருகின்றனர். தொடுதிரையுடன் கூடிய கணனிகள் விண்டோஸ் 8 இயங்கு தளத்துடன் வெளியாகி அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

தொடுதிரை தவிர்த்து விண்டோஸ் 8இல் பயனர்களை கவர்ந்துள்ள அம்சங்களாக விளையாட்டுக்கள், சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையத்தளங்களுடன் குறுந்தகவல் அனுப்பும் செயல்பாட்டில் இணைந்து இயங்கும் சேவை, ஸ்டர்ட் பாருக்கு பதிலாக அமைந்துள்ள மெட்ரோ என்ற அமைப்பினூடாக விண்டோஸ் எப்ளிகேசன் ஸ்டோரிலிருந்து அப்ளிகேசனை தரவிறக்கும் வசதி, மெட்ரோ அப்ளிகேஷன்கள் அமைந்துள்ள WinRT API கட்டமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்திரத்தன்மை, க்ளவ்ட் இணைப்பு, ஒருங்கிணைந்த பிற தள சேவைகள், ஒருங்கிணைக்கப்பட்ட மின்னஞ்சல் வசதி எல்லாவற்றுக்கும் மேலாக எளிமையான அமைப்பு என்பன பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விண்டோஸ் 8 பயனர்களை சென்றடைவதற்கான வாய்ப்பு அதிகமாவே உள்ளது எனலாம் காரணம் இதுவரையிலும் டெக்ஸ்டொப் கணனிகளில் அதிகளவில பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் எக்ஸ்.பீ இயங்கு தளம் ஒத்திசையக் கூடிய வன்பொருட்களுடைய கணனியிலும் இந்த விண்டோஸ் 8 இனை நிறுவிக்கொள்ளும வண்ணம் அமைக்கப்பட்டள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சாதகத் தன்மைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள விண்டோஸ் 8 இயங்கு தளமானது விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஏற்படுத்திய சறுக்கலை நிவர்த்தி செய்து மைக்ரோசொப்டினையும் மற்றும் பயனர்களையும் நிச்சயம் மகிழ்ச்சியுறச் செய்யும்.

அத்தனை எளிமையான விண்டோஸ் எக்ஸ்.பீ எத்தனை ஆடம்பரமான பதிப்புக்களுக்கும் சவால்விட்டுக்கொண்டுதான் இருக்கிறது இவற்றை மீறி தன்னை நிலைநிறுத்தும் முனைப்புடன் களமிறங்கும் விண்டோஸ் 8 காலத்தின் தேவையை பூர்த்தி செய்யுமானால் விண்டோஸ் எக்ஸ்.பீ என்ற காலத்தை தாண்டி வாழும் வீரனை வீழ்த்த முடியும்.

விண்டோஸ் 95, விண்டோஸ் 98, விண்டோஸ் எக்ஸ்.பீ என்ற வரிசையில் இன்னுமொரு வெற்றியை ஏற்படுத்தக் காத்திருக்கும் மைக்ரோசொப்ட்டிற்கு கைகொடுக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் பொதிந்த இயங்கு தளமே விண்டோஸ் 8.

விரைவில் கணனி உலகில் புதியதொரு பரிணாமத்தினை ஏற்படுத்த களமிறங்கவுள்ள மைக்ரோசொப்ட்டின் புதிய இயங்கு தளமான விண்டோஸ் 8 இன் புதுமைகளை அனுவத்திட பீட்டா பதிப்பினை இன்றே தரவிறக்கி புதியதோர் பாதையை நோக்கிய புதிய பயணத்திற்கு தயாராகுங்கள்.

-ஏ.எம்.ஆர்