கணனி உலகில் மென்பொருட்களுக்கு மைக்ரோ சொப்ட் நிறுவனத்தினைப் போன்று ஹார்ட்வெயார் உற்பத்திகளுக்கு தனக்கென தனிமுத்திரை பதித்து தனிக்காட்டு ராஜாவா திகழும் இன்டெல் (Intel) நிறுவனம் தனது அடுத்த கட்ட நகர்வை திறம்பட செயற்படுத்தவுள்ளது.
இன்றைய தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சிகளின் காரணமாக உருவான முக்கிய கண்டுபிடிப்புக்களில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்களான டெப்லட், ஸ்மார்ட் போன் (Tablet, Smart Phone) போன்றவற்றில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் புரசசர்களுக்கு (Processors) போட்டியாக இன்டெல் நிறுவனம் தங்களது புரசசர்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போதைய கணனிகளில் பயன்படுத்தப்படும் புரசசர்களின் ஆதாரமாக கருதப்படும் எக்ஸ்86 (X86) தொடர் மைக்ரோ புரசசர்களில் உருவாக்கி அதில் தங்களை அசைக்க முடியாத அளவிற்கு மாற்றங்களையும் படைப்புக்களையும் உருவாக்கி ஏனைய நிறுவனங்களுக்கு என்றுமே சவாலாக விளங்குகிறது இன்டெல் நிறுவனம்.
டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களின் உலகிலும் தன்னை நிலைநிறுத்த அண்மைக்காலமாக இன்டெல் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக எல்.ஜீ (LG) நிறுவனத்துடன் இணைந்து கையடக்கத் தொலைபேசிகளை தயாரித்து வெளியிடுவதற்கென மேற்கொண்ட முயற்சிகள் தோல்வில் முடிந்தமையினால் இன்டெல் நிறுவனத்தினால் தன்னை கையடக்கத் தொலைபேசிகளின் சந்தையில் அறிமுகம் செய்ய முடியாமல் போய்விட்டது.
தற்போது உலகையே தன் வசப்படுத்தி வைத்திருக்கும் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் ஏ.ஆர்.எம் என்ற வகைப் புரசசர்களே பயன்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் சந்தையைப் பொறுத்தளவில் ஏ.ஆர்.எம் புரசசர்களுக்கு (AMR Processors) போட்டியாக சந்தையில் இன்றைய காலகட்டத்தில் எதுவித போட்டியும் இல்லை. இதனால் இன்டெல் புரசசர்களினை அறிமுகம் செய்வதன் மூலம் இன்டெல் நிறுவனத்தினை டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன் சந்தையில் தமக்கான இடத்தினை கைப்பற்றிக்கொள்ள முடியும் என்பதுடன் அறிமுகம் செய்வதற்கான சரியான தருணமாகவும் இதனை இன்டெல் நிறுவனம் கருதுகின்றது.
ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் மதிப்பினை பெற்று விளங்கும் சம்சுங் (Samsung) மற்றும் அப்பிள் (Apple) நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாகிவரும் மொடொரொலா (Motorola) மற்றும் லெனோவா (Lenova) நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் ஸ்மார்ட் போன்களில் ஏ.ஆர்.எம் புரசசர்களுக்கு பதிலாக இன்டல் நிறுவனத்தின் புரசசர்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளமையானது ஸ்மார்ட் போன் சந்தையில் இப்போது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுவரும் லெனோவா நிறுவனத்தின் இன்டெல் புரசசர் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் போன் ஒன்றின் மாதிரியை அண்மையில் லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் இன்னும் சில நாட்களில் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்டெல் புரசசர்களை கொண்டு உருவாக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் அன்ரொயிட் இயங்குதளங்களே பயன்படுத்தப்படவுள்ளதாக மொட்ரொல்லா நிறுவனம் தெரிவிக்கின்றது. தற்போது ஸ்மார்ட் போன்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க இயங்குதளங்களில் ஒன்றான அன்ரொயிட்டுடன் இணைவது இன்டெல்லுக்கு நிச்சயமாக சிறப்பாக அமையும் என கருதப்படுகிறது. காரணம் நாளொன்றுக்கு சராசரியாக ஏறக்குறைய 70 ஆயிரம் அன்ரொயிட் சாதனங்கள் புதிதாக செயற்படுத்தப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிக்கின்றமையே.
இது மட்டுமல்லாமல் உயர் தொழில்நுட்பத்தினை கொண்ட மிகவும் எடை குறைந்த டெப்லட் ஒன்றினையும் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது இன்டெல் நிறுவனம். இதன் முதற்கட்டமாக அண்மையில் அல்ட்ராபுக் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த அல்ட்ராபுக் செய்கைகள், அசைவுகள் மற்றும் குரல் வழியினால் கட்டுப்படுத்தப்படுத்த கூடிய முறையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கொண்டு உருவாக்கப்பட்டுளமையே இதன் சிறப்பம்சம். குறித்த குரல் வழி தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்த அப்பிள் நிறுவனமும் முயற்சித்து வருகின்றது.
இதில் விசேட அம்சம் என்னவென்றால் இவ்வகை லெப்டொப்களை ஒத்த டெப்லட்களையே உருவாக்கப்படவுள்ளமையே. இந்த உயர் தொழில்நுட்பத்தினை புகுத்தவென இன்டெல் நிறுவனமானது நுவான்ஸ் கொமியூனிகேசன் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இவ்வகை லெப்டொப் மற்றும் டெப்லட் வருகையானது தொழில் நுட்பவளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது திண்ணம். எனவே இவ்வுயர் தொழில் நுட்பத்தினை அமைத்து ஏனைய டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டியை நிச்சயம் இன்டெல் நிறுவனம் ஏற்படுத்த வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. இதனாலேயே இவ்வகை டெப்லட்டுக்களை இவ்வாண்டு முதலே குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டுவர இன்டெல் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பல வழிகளை தங்களை பலபடுத்தி உலகை தன்பக்கம் திருப்ப இன்டெல் நிறுவனம் சிறந்த அடித்தளத்தினை போட்டுள்ளது. இன்டெல் நிறுவனத்தின் வருகையானது ஏ.ஆர்.எம் புரசசர்களுக்கு நிச்சயமாக போட்டியாக அமையும்.
கணனிகளில் பயன்படுத்துகின்ற புரசசர்களில் 4004 என்ற வகை புரசசர்களுடன் தங்களது புரசசர்களின் உற்பத்தியை ஆரம்பித்த இன்டெல் நிறுவனம் இன்று 'கோர் ஐ 7' வகை புரசசர்களில் வந்து நிற்கின்றது. இதற்கிடைப்பட்ட காலத்தில் இன்டெல் இன் வளர்ச்சி அபாரமானது. கணனியின் வேகத்தையும் செயற்பாட்டையும் அதிகரிக்கவென புரசசர்களில் ஏராளமான தொழில்நுட்பங்களை புகுத்தி இன்று அந்த முயற்சியில் இறுதியாக கோர் ஐ7 வந்து சேர்ந்துள்ளது. விரைவில் இதன் அடுத்தடுத்த பதிப்புக்களை விரைவில் என்பதில் சந்தேகமே இல்லை.
4004, 8008, 8080, 8086, பென்டியம் 1, பென்டியம் 2, பென்டியம் 3, பென்டியம் 4, டுயல் கோர், கோர் டு டுயல், கோர் ஐ3, கோர் ஐ5, கோர் ஐ7 (4004, 8008, 8080, 8086, Pentium I, Pentium II, Pentium III, Pentium IV, Dual Core, Core to Duo, Core I3, Core I5, Core I7 ) இது தவிர இன்டெல் செலரோன் (குறைந்த விலையில் விற்பனை செய்யவென உருவாக்கப்பட் இன்டெலின் இன்னொரு படைப்பு) வகை புரசசர் என மிக குறுகிய காலத்திற்கிடையில் ஏராளமான தயாரிப்புக்களை வெளியிட்டு கணனிப் பயனாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது இன்டெல் நிறுவனம்.
உண்மையில் இன்டெலின் வேகத்திற்கு பயனாளர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை எனலாம் காரணம் கோர் ஐ தொடர் புரசசர்களின் வருகை அவ்வளவுக்கு வேகமானது டுயல் கோர் மற்றும் கோர் டு டுயல் புரசசர்களினை பயனை அனுபவித்த அனுபவிக்கின்ற பயனாளர்கள் மிகக் குறைவானவர்களே. எம்மில் பலரும் இதனை உணர்ந்திருக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது பென்டியம் வகை கணனியினை டுயல் கோர் மற்றும் கோர் டு டுயல் கணனியாக மாற்றியமைத்ததை விட அதிகமாக கோர் ஐ தொடராக மேம்படுத்தியதனை காணமுடிகிறது.
இவ்வாறு பயனாளர்களின் தேவைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயற்படக்கூடிய இன்டெல் (Intel) நிறுவத்தின் வருகை நிச்சயமாக ஏனைய நிறுவனங்களுக்கு பீதியை ஏற்படுத்தும். அதே போல இன்டெல் மீதுள்ள நம்பிக்கையினால் பலரும் அதன் பால் ஈர்க்கப்படவும் வாய்ப்புக்கள் அதிகமாவே உள்ளது.
இதற்கேற்போலவே குரல் வழி கட்டளைகள் மூலம் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களை இயங்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது குரல் வழி இயங்கும் டெப்லட்டுக்களுடனயே களமிறங்க முயற்சிக்கும் இன்டெலின் வருகை வெற்றி நடை போட உதவியாக இருக்கும்.
இவ்வாறு இன்டெல் நிறுவனம் தன்னகத்தே பல சாதகமான காரணிகளை கொண்டுள்ளதால் ஏ.ஆர்.எம். புரசசர்களுக்கு சவால் விடுத்து கணனி உலகின் நம்பிகையின் நாமமாக திகழும் இன்டெல் நிறுவனம் தனது புதுமையான கண்டுபிடிப்புக்கள் மூலம் மக்கள் மனம் வென்று டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன் சந்தையிலும் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டுமா? என்பதனை காலம் விரைவில் பதில் சொல்லும்...!!!
-ஏ.எம்.ஆர்