Total Pageviews

Monday, September 3, 2012

இனி இங்கேயும் தொலைக்காட்சியா ? இன்டெல் நிறுவனத்தின் அதிரடி திட்டம்!



குதிரை பயணிப்பதற்கு சிறப்பாக இருக்கின்றது என்பதனால் அனைவரும் அனைத்து குதிரைகளிலும் அவ்வளவு இலகுவில் பயணித்து விட முடியாது என்பதனை உணர மனம் மறுப்பது சாதரணம் தான். உண்மையில் நினைத்த குதிரையில் ஏறி பயணிப்பது சாதாரண விடயமல்ல. குதிரை வாங்கியவுடன் குதிரைக்காரர் சில நாட்களுக்கு சிறிய கூட்டினுள் அக்குதிரை திரும்ப முடியாத படி அடைத்து வைத்து அதனைப் பராமரிப்பார்.

இதில் குதிரைக்காரருக்கும் அதனை பார்க்கும் ஏனையோருக்கும் பெரும் மனவேதனை ஏற்படுவது சகஜம். இருந்தாலும் குதிரையை கட்டவிழ்த்து விடுவது முடியாத காரியம் ஏனெனில் இவ்வாறு அடக்கி வைத்திருக்கும் போதுதான் குதிரைக்காரருக்கு ஏற்ற வகையில் அக் குதிரை இசைவாக்கம் அடைந்து அவருக்கு அடங்கி சுகமான சவாரிக்கு அந்த குதிரை இடங்கொடுக்கும் இல்லையெனில் தகாத  இடங்களில் கவிழ்த்து விடும் என்பது நிஜம்.

உண்மையில் அந்த கட்டுக்கடங்கா குதிரையை போன்ற ஒன்றுதான் தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும். சுகமான சவாரிக்கு குதிரைக்காரரின் பொறுமையுடனாக காத்திருப்பின் அவசியத்தினை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் நாமும் பழகிக்கொள்ள வேண்டும்.

தற்போது அனைவரினாலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படுவதும் மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுவதுமான கணனியின் வருகைக்கு முன்னரே தொலைக்காட்சிப் பெட்டிகள் எமக்கு உற்ற தோழனாகிவிட்டது. அது கறுப்பு வெள்ளையாக இருந்த போதும் அதில் பசுமையான கதைகள் பல இருந்தன.

மேலும் அக்கதைகளில் உண்மைகள் பலவும் இருந்தது ஆனால் கணனி, டெப்லட், ஸ்மார்ட் போன் வருகை மக்களினை பெரிதும் மயக்கி, மயக்கம் தெளிய இடமளிக்காமல் அதில் பல விந்தையான விடயங்களை புகுத்தி குறிப்பாக இணையம் மூலம் தகவல் தொடர்பாடலினை அதிகரித்து பல போலியான கதைகளையும் தந்து கொண்டு இருக்கிறது என்பதனை அவ்வளவு எளிதில் யாரும் மறுத்து விட முடியாது.



இதனாலேயே என்னவோ இன்னும் தொலைக்காட்சி என்ற சாதனம் அழிவிலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் தொலைக்காட்சியின் மேல் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக மக்கள் மனங்களை தவறான பாதையில் இட்டுச்செல்கின்றது அதிலும் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது என்பதே பலரதும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதனை முற்றாக மறுக்க முடியாவிட்டாலும் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இன்று தொலைக்காட்சியினை விட மிகப் பெரும் தாக்கம் செலுத்தும் கணனியின் பயன்பாட்டினால் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இணையத்தினால் ஏற்படும் தீங்குகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்பதுதான் உண்மை.

இதனாலேயே இன்று பெற்றோர்கள் மத்தியில் தொலைக்காட்சி சார்ந்த பிரச்சினைகளை விட அதிகளவில் கணனி, கையடக்கத் தொலைபேசிகள், இணையம், சமூகவலைத்தளங்கள் போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது.
நீல் ஆம்ஸ்ட்ரோங்க் நிலவில் கால் வைத்ததை முதலில் காட்டிய தொலைக்காட்சியே ஆகாயத்தில் பாய்ந்து ஆயிரம் பேரை அடித்து நொறுக்கும் திரைப்பட நாயகர்களையும் எமக்கு அறிமுகம் செய்து வைத்தது. இதில் தேவையானது எது என பிரித்தறியும் திறன் இல்லை எமக்கு இல்லை என்பதற்காக அச்சாதனத்தின் திறமையை இழிவுபடுத்துவது எந்த வகையில் நியாயமாகத் தோன்றுகின்றது.

ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் தேவையை உணர்ந்திருந்த போதிலும் அதன் தீமைகள் பற்றியே அதிகம் பேசித் தீர்த்தனர். எந்தவொரு விடயத்திலும் இரண்டு தெரிவுகள் காணப்படுவது ஒன்றும் அதிசயிக்கத்தக்கதல்ல. இல்லை என்ற மறுப்பின் பிரதிபலிப்பே உண்டு என்பதற்கான தேடலின் முடிவாக அமையும். இருப்பினும் இன்னும் இதனை உணராத மனங்களால் அன்று பலிக்கடாவான தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு பதிலாக நாம் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியினால் உருவான தொலைக்காட்சி பெட்டிகள் விடுத்து ஏனைய சாதனங்களின் மேல் அளவுக்கதிகமான வெறுப்பை உமிழ்கின்ற அளவிற்கு மாற்றம் அடைந்து நிற்கின்றோம்.

இவ்வாறு எமது சிந்தையில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் தொலைக்காட்சி மீதான மோகம் மட்டும் இன்னும் குறையவில்லை என்பது திண்ணமாக தெரிகிறது. காரணம் என்னவெனில் எங்கும் எதிலும் இணையம் என்ற நிலை காணப்படும் இந்த காலத்தில் இணைய தொலைக்காட்சியினை ஆரம்பிக்க இன்டெல் நிறுவனம் முன்வருகின்றது என்றால் மக்கள் மனங்களில் தொலைக்காட்சி பிடித்திருக்கும் இடத்தின் முக்கியத்துவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இனி என்ன தொலைக்காட்சியும் இணையமும் ஒரே இடமான கணனியில் கிடைக்கும் என்பதே இதன் சிறப்பு. என்னவொன்று இந்த தொலைக்காட்சி மற்றும் இணையம் அமைக்கவுள்ள கூட்டணி மீதான வெறுப்பு அதிகமாகவே இருக்கும் என நம்பலாம். ஆனால் தொலைக்காட்சி மற்றும் இணைய ஆர்வலர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்.
தற்போது சிலர் கணனியினை விட்டு சற்று நகருவது என்றால் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் கண்டுகளிக்கவே என்ற நிலையில் இந்த இன்டெர்நெட் தொலைக்காட்சியின் வருகை இனி அவர்களை கணனியின் முன்னே கட்டிப்போட்டுவிடும் போலிருக்கிறது.

இன்டெர்நெட் தொலைக்காட்சி திட்டத்திற்காக இன்டெல் நிறுவனம் தற்போது மீடியாக்களிடம் வெர்ச்சுவல் கேபிள் நெட்வேர்க் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும் பட்சத்தில் இன்டெல் நிறுவனத்திற்கு வெற்றி கிட்டும் என நம்பப்படுகிறது.

மேலும் இத்திட்டம் எந்தளவிற்கு சாத்தியப்படும் என தெரியாத நிலையிலும் இன்டெல் நிறுவனம், தொலைக்காட்சி செனல்கள் அனைத்தையும் இணையம் மூலம் வழங்கும் வெர்ச்சுவல் கேபிள் நெட்வேர்க் திட்டத்தின் கீழ் முழு மூச்சாக செயற்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டம் வெற்றி பெறுமேயானால் தொலைக்காட்சிக்கான கேள்வி வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே கணனிகளுக்கான கேள்வி சந்தையில் அதிகரித்துச் செல்லலாம். இதனூடாக இன்டெல் தனது சந்தையை மேலும் விரிவுபடுத்த வாய்ப்பாக அமையும்.

இதுவரையில் எத்தனையோ சாதனங்கள் தொலைக்காட்சிக்கு சாவாலாக களமிறங்கிய போதும் அவையெல்லாம் தொலைக்காட்சிக்கு பெரிய சவாலாக விளங்கவில்லை. இருப்பினும் இத்திட்டம் தொலைக்காட்சிக்களுக்கு சற்று அச்சுறுத்தலாக அமைய சாதகமான காரணிகள் உண்டுபண்ணலாம்.
இருப்பினும் இணைய தொலைக்காட்சி திட்டத்தினால் இன்டெல் நிறுவனம் எதிர்கொள்ளும் பிரதான சவால்களாக இனங்காணப்படுவது இணைய பேண்ட் வித் மற்றும் இதற்கான விலை சாதாரண மக்கள் மத்தியில் எந்தளவிற்கு போய்ச் சேரும் என்பதுதான்.

தொழில்நுட்பத்தின் முன்னோடியான இன்டெல் நிறுவனமே இத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது என்பதனால் இதன் ஆரம்பம் நிச்சயம் சிறப்பாகவே அமையும் என நம்பலாம். எனினும் இவ்வாறான புது முயற்சிகளுக்கான வெற்றி மக்கள் கைகளிலேயே இருக்கிறது என்பதனால் பொறுத்திருந்துதான் இந்த இணைய தொலைக்காட்சியின் சந்தை வாய்ப்புக்களை பற்றி இன்டெல் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.

ஏற்கனவே இதனை ஒத்த திட்டம் ஒன்றினை அண்மையில் கூகுள் நிறுவனம் கூகுள் தொலைக்காட்சி என்று ஆரம்பித்திருந்தது ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. ஆனாலும் இன்டெல் நிறுவனத்தின் இத்திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என அதன் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டிலேயே ஆரம்பிக்கப்படும் என கூறப்படும் இந்த இன்டெர்நெட் தொலைக்காட்சி சேவை வெகு விரைவில் எம்மை வந்தடைய வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. எனவே இதுவரையில் தொலைக்காட்சி முன்னால் அழுதுகொண்டிருக்கும் பெண்கள் கூட்டம் இனி கணனிகளுக்கு முன்னால் அழுதாலும் ஆச்சரியமில்லை!.

இருந்தாலும் அனைவரின் வீடுகளிலும் கணனியும் இணையமும் வந்தடையும் வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கும் என்ற நேர்மறை எண்ணத்தின் மூலம் மனதினை திடப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். இனி இங்கேயும் தொலைக்காட்சியா என அலுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் இது இன்டெலின் திட்டம் என்பதால் வெற்றி வாகை சூடவே வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.



கணனி மற்றும் இணையத்தினை விட தொலைக்காட்சி பாதிப்பில்லை என்ற தற்போதைய சமூகம் மறைந்து வேறு ஏதாவது ஒன்றுக்கு பதில் கணனி மற்றும் இணையம் பாதிப்பில்லை என்று சொல்லும் சமூகமும் வரத்தான் போகின்றது.

எனவே சவால் மிக்க தொழில்நுட்பம் என்ற குதிரை சவாரியினை சுகமாக அமைப்பது ஒவ்வொருவரினதும் கைகளிலேயே உள்ளது என்பதால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை குறை சொல்வதை விட்டுவிட்டு அதனை எவ்வாறு பயனுள்ள விதத்தில் பயனர்களை இட்டுச் செல்வது தொடர்பில் சிந்திப்தே சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
மேலும் தொலைக்காட்சி என்ற சாதனத்தினை மறைந்த நண்பனின் சுகமான நினைவுகளாக மாற்றும் வல்லமையுள்ள வெர்ச்சுவல் கேபிள் நெட்வேர்க திட்டத்தின் புதுமையான அனுபவங்களினை விரைவில் அனுபவிக்க தயாராக காத்திருங்கள்.

-ஏ.எம்.ஆர்