ஊடகங்கள் உண்மையில், உண்மைகளை மக்களிடத்தில் சேர்ப்பதை விட மக்களை ஊடகங்களை நோக்கி சேர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது என்பது அண்மைய கால பல செய்திகள் உறுதி செய்கின்றது.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையச்செய்திகள் என எவ்வகை செய்தி ஊடகங்களை எடுத்துக்கொண்டாலும் கடந்த ஒரு வாரமாக தங்களது ஊடகங்களின் பக்கம் எம்மை ஈர்க்க பெரும்பாலான ஊடகங்கள் பயன்படுத்தி வருகின்ற விடயம் 'காலநிலை மாற்றம்' என்பதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.
வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் இதனால் மக்கள் பீதி, நாடுபூராகவும் அடை மழை அடுத்த 3 நாட்களும் காற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை என்ற பாணியிலமைந்த செய்திகள் இடம் பெறாத ஊடகங்களே இல்லை எனலாம் அதுவும் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்து... என்பது போல ஹை பிட்ச்சில் உச்சரித்து நல்லாத்தான் கௌப்புறாய்ங்கடா பீதிய... (ஆனா எங்களுக்கிட்ட நடக்குமா? நாங்கெல்லாம் சுனாமியில ஸவிம்மிங் போடுறவங்க ஆச்சே)
காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் இருப்பினும் இவை சீரற்ற காலநிலை மாற்றமோ அச்சத்தை ஏற்படுத்தும் மாற்றங்களோ என்றால் இல்லை என்பதே நிதர்சனம். சாதரணமாக பருவப்பெயர்ச்சிக் காலத்தில் ஏற்படுகின்ற சீரான மாற்றங்களும் மழையுமே.
ஆனாலும் குறிப்பாக இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் இக்காலநிலை மாற்றத்திற்கு அளவுகடந்த முக்கியத்துவம் கொடுத்து அலாட்டாகிக்கடா ஆறுமுகம் என்று அலார்ட் பண்ணுறதுதான் கொஞ்சம் ஓவரா தெரியுது.
இதனால் மக்கள் அநாவசியமாக அச்சத்திற்குள்ளாகி இருப்பதே வருத்தமாக உள்ளது. இதற்கா காலநிலை மாற்றம் பற்றிய செய்திகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. நடைபெறும் மாற்றங்களை மட்டும் தெரியப்படுத்தினால் போதும் ஏனெனில் ஒன்றை ஒன்பதாய்ச் சொல்ல ஏற்கனவே பலர் இங்கே இருக்கிறார்கள்.
2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் எம்மவர்கள் கடலினை அதிகமாகவே அவதானிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். காரணம் கடலிலிருந்து சிறிய சிப்பி கரையொதுங்கினால் போதும் அதிசயம், ஆச்சரியம் என்று சொல்லிக்கொண்டு அதனை பார்க்க சும்மா கூட்டம் பிச்சுக்குது.
2004 இற்கு முன்னரும் பலமுறை வெள்ளமும், பாரிய மழை, பாரிய வெயில், பெரிய காற்று, வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறியாகிவிட்டது. ஆனால் அப்போது இப்போதுள்ள அளவிற்கு மக்கள் அச்சம் கொள்ளவில்லை. காரணம் அப்போது நிறைய ஊடகங்களும் இல்லை போட்டியும் இல்லை.
ஆனால் இன்று ஊடகங்களிடமிருந்து அறிவுறுத்தல்களுக்கு பதில் அச்சுறுத்தல்கள் வெளிவருவது ஊடகங்களின் வளர்ச்சி அல்ல செய்திகளுக்கான வரட்சி என்பது தெளிவாகின்றது.
மேலும் காமச் செய்திகளில் சிக்கியிருந்த ஊடகங்கள் காலநிலைச் செய்திகளிற்கு தாவி ஆறுதலளிப்பார்கள் என்ற நினைப்பில் மழையை அள்ளிப்போட்டு மக்களிடையே பீதிய கௌப்புறாய்ங்களே...
கோடை என்டா வெயிலடிக்கிறதும் மாரி என்டா மழையடிக்கிறதும் சகஜம்தானே... இதுக்கெதுக்கு புதுப் புரளிய கௌப்புறீங்க...