அண்டங்களை உருவாக்கி தன்கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருக்கும் மிகப்பெரிய சக்தியே கடவுள் என்கிறார்கள் தெய்வ நம்பிக்ககை கொண்டோர். ஆனால் தற்போதைய நவீன உலகை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விஞ்ஞானமோ பெரு வெடிப்பிலே (Big Bang) அண்டங்கள் உருவானதாக ஸ்டேன்டர்ட் மொடல் தியரி (Standard Model Theory) ஊடாக சொல்கின்றது.
இருப்பினும் கடவுள் நம்பிக்கையினடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்டதுடன் ஏற்றுக்கொள்ள முடியாததும் கூட. நம்பிக்கைகள் என்பது மாறுபட்டிருப்பதில் ஒன்றும் தவறில்லை. ஏனெனில் விஞ்ஞானத்திலும் நம்பிக்கைகளுண்டு அவை கொள்கைகளாவே இருக்கும் ஆனால் குறித்த கொள்கை உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே விதியாகும். அவ்வாறே தற்போதுள்ள அண்டம் உருவானதன் அடிப்படையை விளக்கும் கோட்பாடும் கொள்கையளவிலேயே உள்ளது எனவே இதிலுள்ள நம்பிக்கைளும் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம்.
உயிரின் படைப்பு, கருந்துளை (Black Hole) போல இன்று வரையில் விஞ்ஞானத்திற்கு சவால்விட்டுக்கொண்டிருக்கும் அம்சங்களில் ஒன்றுதான் இந்த அண்டம் உருவான விதம். இருப்பினும் இதற்கெல்லாம் சோடை போகவில்லை தற்கால விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞானிகளும் எனவே விரைவில் தீர்வினை வழங்குவர் என எதிர்பார்க்கும் அளவிற்கு இன்றைய கண்டுபிடிப்புக்களும் ஆராய்ச்சிகளும் அமைந்துள்ளது.
அவ்வாறு நம்பிக்கையளிக்கும் கண்டுபிடிப்புக்களில் ஒன்றுதான் 'ஹிக்ஸ் பொஸன்' எனப்படும் அடிப்படைத்துகளின் கண்டுபிடிப்பும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மனிதனின் ஆளுகைக்கு எப்போது ஒரு அம்சம் அடங்கவில்லையோ அப்போதிலிருந்து அது கடவுள் சார்பாக நோக்க ஆரம்பிப்பது மனிதர்களின் வழக்கமாகிவிட்டது. இதனை தகர்த்தெறிவென்பது இயலாத காரியம். இவ்வாறான வழக்கம் விஞ்ஞானத்திலும் உண்டென்பதை உணர்த்தும் ஒரு அம்சம்தான் இந்த ஹிக்ஸ் பொஸன் எனும் அடிப்படைத் துகள்.
இந்த அடிப்படைத் துகளின் மறுபெயர் 'கடவுளின் அணுத் துகள்'. இவ்வாறானதொரு பெயரமைந்ததிலிருந்தே இது ஆராய்ச்சியாளர்களின் எண்ணங்களிலிருந்தும் ஆளுகையிலிருந்தும் எவ்வளவு தூரத்தில் உண்டென்பதை நாமும் புரிந்துகொள்ளலாம்.
உண்மையில் 'கடவுளின் துகள்' என்றால் என்ன? ஏன் இதற்கு இத்தனை தூரம் ஆராய்ச்சியாளர்கள் தங்களது மூளையை கசக்கிப் பிளிகின்றனர் என்றெல்லாம் எமக்கு கேள்விகள் எழலாம் ஒரு வகையில் அது நியாயமும் கூட.
கடவுளால் ஆக்கப்பட்டது உலகம் என்ற அடிப்படையின் அடிமடியில் கை வைக்கும் வியடம்தான் இந்த ஹிக்ஸ் பொஸன். காரணம் ஹிக்ஸ் பொஸன் எனப்படும் கடவுளின் துகள்களிலிருந்தே இந்த பேரண்டம் தோன்றியதாக விஞ்ஞானம் வியாக்கினம் கூறுகின்றது.
பெரு வெடிப்பு (Big Bang) மூலம் எவ்வாறு அண்டங்கள் உருவானதென விஞ்ஞானிகள் இவ்வாறு விளக்குகிறார்கள் ஒரு சிறு மணி அளவிலான அணுவாகவே இந்த பேரண்டம் காணப்பட்டது இந்நிலையில் அவ்வணுவில் ஏற்பட்ட பெரு வெடிப்பினைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், இந்த பூமி, சூரியன்கள், எரிகற்கள், கிரகங்கள் மற்றும் இந்த பேரண்டமும் (Universe) உருவானது.
மேலும் இன்னும் இவை பிரிந்துகொண்டே இருக்கிறது இதனால் மேலும் பல அண்டங்கள், கூடவே கருந்துளைகளும் உருவாகிக்கிக்கொண்டுதான் இருக்கிறது. பெரு வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒளியை விட அதி வேகத்தில் அனைத்து திசைகளிலும் சிதறுண்டன. அப்போது வெளியான எந்த அணுக்களுக்கும் நிறை (Mass) இல்லை. ஆனால், ஹிக்ஸ் பொஸன் எனப்படும் அடிப்படை துகளுடன் இணைந்து கொண்ட பிறகே, வெளியான அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இதுவே இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை இதனை விளக்கும் கொள்கையே ஸ்டேன்டர்ட் மொடல் தியரி.
இக்கோட்பாட்டின்படி பேரண்டம் உருவாக 12 வகையான அணுத்துகள் அடிப்படையாக இருந்துள்ளது. இதில் 11 அணுக்கள் ஏற்கனவே ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் அந்த ஒரு அணுவே கடவுளின் துகள் என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.
இதனை நிரூபணமாக்க விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் முயற்சியின் வடிவமே ஹிக்ஸ் பொஸன் ஆராய்ச்சிகளின் ஆரம்பம். இதற்காகவே கொள்கையிலுள்ளதைப் போன்ற அமைப்பை செயற்கையாக பிரான்ஸ் - சுவிஸ் எல்லைக்கு ஜெனீவாவிற்கு கொஞ்சம் பக்கத்தில் அமைத்து கடவுளின் துகளுக்கான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அதாவது பெரு வெடிப்பு கொள்கையில் சொல்லப்பட்டுள்ளதை நடைமுறைக்கு சாத்தியமானதாக மாற்றும் ஆபத்து மிக்க சோதனையே இது. இதனால் ஆரம்பத்திலிருந்தே இந்த ஆராய்ச்சிக்கு பெரும் எதிர்ப்பு காணப்பட்டது. இந்த சோதனை மூலம் கருந்துளை உருவாகலாம் மேலும் கடவுளுக்கு சவால் விடும் ஆராய்ச்சி என்பதால் பலரும் தங்களது எதிர்ப்பினை இச்சோதனை மேல் கொட்டித் தீர்த்தனர்.
ஆரம்பத்திலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றையும் எதிர்த்ததோடு அதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் உயிரையும் குடித்த அறிவுமிக்க சமூகமாயிற்றே எம் மனித சமூகம் அவ்வாறிருக்கையில் நேரடியாக கடவுளுடன் சம்மந்தப்பட்ட இந்த சோதனைக்கு அத்தனை இலகுவில் பச்சைகொடி காட்டிவிடுவோமா? என்றிருந்தது அந்த எதிர்ப்புக்கள் யாவும்.
பின்னர் அத்தனை எதிர்ப்புக்களையும் மீறி சோதனைகள் 2008 இல் ஆரம்பமானது. தற்போது வரை இந்த சோதனை திட்டத்திற்காக 7.5 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் 100 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொயியலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சோதனைகளை மேற்கொள்வென கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் புரோத்திரன்கள் மற்றும் நியூத்திரன்கள் மோதிக் கொள்ளுவதற்கென Large Hadron Collider (LHC) என்ற வட்ட வடிவ குழாயினை 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு 5 ஆயிரம் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் அணு மற்றும் கதிர்வீச்சுக்கள் என பலவற்றை தாங்கும் வல்லமையுடன் உருவாக்கப்பட்டது.
1800 'சுப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோத்திரன்களை ஒளியின் வேகத்தில் 27 கி.மீ. வளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலய்டரில் சுற்றவிடப்பட்டு அது முழு வேகத்தை அடைந்தவுடன் புரோத்திரன்களையும் நியூத்திரன்களையும் விநாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப்பட்டுள்ளது. அதாவது ஒரு விநாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோத்திரன்கள் 11,245 முறை சுற்றி வந்துள்ளது. இந்த வேகத்தினை பெற சுமார் ஒன்றரை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுரங்க ஆய்வகத்தின் உள் வெப்பநிலை, -271.3 பாகை செல்சியஸ் ஹீலியம் வாயுவைக் கொண்டு கிரையோஜெனிக் அமைப்பை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறு காரணமாக ஆராய்ச்சிகள் 1 வருடம் தள்ளிப்போனது.
உண்மையில் இந்த குளிர்ச்சியை பேண ஏன் விஞ்ஞானிகள் இத்தனை சிரத்தை எடுத்துக்கொண்டார்களென்றால் புரோத்திரன்கள் மோதும்போது சுரங்க ஆய்வகத்தின் உள்ளே சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும் அதற்காகவே 1 ஆண்டுகாலம் விஞ்ஞானிகள் உழைத்திருக்கின்றார்கள்.
ஏனெனில் உண்மையில் இதுவே சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெரு வெடிப்பு உருவான போது இருந்த சூழல் என நம்பப்படுகிறது. அதனை ஒத்த சூழலையே இந்த சுரங்க ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கிப் பார்த்துள்ளனர். முன்னேற்பாடுகள் தவறானால் சில வேளை கருந்துளைகள் உருவாகலாம் என்ற அச்சம் நிலவியது அதற்காகவே விஞ்ஞானிகள் ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் சிரத்தையுடன் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கருத்து வெளியிடுகையில், இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி கருந்துளை எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.
என்ன இருந்தாலும் ஏன்? எதற்காக இந்த கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற முயற்சியில் ஈடுபடவேண்டும் என சாதாரணமாக நாம் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞானிகளுக்கு அண்டங்கள் உருவானதை நிரூபிக்ககூடிய வழி இதுவே என பூரணமாக நம்புகின்றனர்.
உண்மையில் அந்த நம்பிக்கை வெற்றிபெறும் தருணத்தினை தற்போது விஞ்ஞானிகள் அடைந்திருக்கின்றார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழக (CERN) விஞ்ஞானிகள் நடத்திய மேற்படி சோதனையில் நியூத்திரோன்-புரோத்திரன்களின் அதி பயங்கர மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் பொஸனையும் அதன் நிறையையும் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்டேன்டர்ட் மொடல் கொள்கையில் படி ஹிக்ஸ் பொஸனின் நிறை 125 ஜிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (புநஏ) என்ற அளவில் இருக்க வேண்டும் ஆனால் ஊநுசுN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.310 புநஏ நிறை கொண்ட வழக்கத்துக்கு மாறான ஒரு வகை துகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இது 99.999மூ ஹிக்ஸ் பொஸனே என்று அடித்துக்கூறுகிறார்கள் ஆய்வாளர்கள் ஏனென்றால் இதே அமைப்பு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளுக்காக இன்னுமொரு குழுவை ஏற்பாடு செய்திருந்தது அந்த குழுவிற்கும் இதே முடிவு கிடைத்திருக்கின்றது. அதுவே ஆய்வாளர்களின் நம்பிக்கை மேலோங்க காரணம்.
ஆனபோதும் இன்னும் மிகச் சிறியளவிலான சந்தேகங்கள் காணப்பட்டாலும் ஹிக்ஸ் பொஸன் எனும் கடவுளின் துகள் இருப்பதினை உறுதி செய்து கடவுளை அடைந்திருப்பதாகவே பல அறிவியலாளர்கள் நம்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே அவ்வாறான நம்பிக்கையாளர்களின் கடவுள், ஹிக்ஸ் பொஸன் இருப்பதினை கூடிய விரைவில் விஞ்ஞானிகள் உறுதிசெய்வார்கள் என்பதே தற்போதைய அறிவியல் உலகின் நம்பிக்கை!
-அமானுல்லா எம். றிஷாத்