வண்டியோட சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
என்ற கண்ணதாசனின் கவி வரிகள் வாழ்க்கையில் எந்தளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு தமிழக அரசியலுக்கும் தமிழ் சினிமாவிற்குமான உறவில் உண்மை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.
அறிஞர் அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்திலிருந்து தமிழக அரசியலில் சினிமா துறையினரே ஆதிக்கம் செலுத்தி வருவதை யாரும் அறிந்திராமலில்லை. அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலிதா என வரிசையாக தமிழக முதலமைச்சர்களாக சினிமா துறையை சார்ந்தவர்களே ஆட்சியை கைப்பற்றி சாட்சியாகின்றனர்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கான பாதையில் எம்.ஜி.ஆர் வழி தனி வழியாகவே இருந்தது என்றால் ஆச்சரியம் ஏதுமில்லை. இவரின் ஆதிக்கம் இன்றளவிலும் தமிழக அரசியலில் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஜெயலலிதாவின் வெற்றியே பறை சாற்றி நிற்கின்றது.
இவரைப் பின்பற்றி அன்று முதல் இன்று வரை சினிமா நடிகர்கள் பலரும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதுவரையிலும் அந்தக்கனவு எந்த நடிகர்கருக்கும் நனவனாகமல் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தினை அடைந்தவுடன் கூடவே தமிழக முதல்வர் கனவும்நடிகர்களுக்கு ஆரம்பமாகிவிடுகிறது. காரணம் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளே. இதனாலேயே தமிழ் சினிமாவில் ஜெயித்த பலரும் தமிழக அரசியலிலும் களம் இறங்கி வந்தனர் இன்னும் வருகின்றனர் மேலும் வரவுள்ளனர். இதில் முதல்வராக வெற்றி பெற்ற நடிகர்கள் எவருமே இல்லை.
எம்.ஜி.ஆர் சாதித்ததை ஒரு வெற்றிப்படத்தின் மூலம் சாதிக்க நினைப்பது எவ்வளவு நகைப்புக்குரிய விடயம் என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம் தான். இன்றைய தலைமுறை நடிகர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விடவா புகழ்பெற்ற நடிகர்களாக மாறிவிட்டனர்.
குறித்த காலப்பகுதியில் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனாலும் சினிமாவில் கிடைத்த மக்கள் கூட்டத்தினால் அரசியலில் இவரால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டதே. இதுதான் எம்.ஜி.ஆருக்கும் ஏனனய நடிகர்களுக்குமான வித்தியாசம்.
சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிவாஜி முதல் ரித்திஸ் வரை எத்தனையோ நடிகர்கள், தங்களின் அரசியல் முகங்களைக் காட்டினர். இவர்களில் எத்தனை முகங்கள் வெற்றி பெற்றன என்றால் கேள்விக்குறிதான்!
இவ்வாறு நடிகர்கள் பலரும் தமிழக முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாலும் குறித்த சில நட்சத்திர அந்தஸ்து நடிகர்கள் அரசியலில் தங்களின் முகங்களைக் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழகத்தின் உச்ச நடிகர் அந்தஸ்து பெற்ற சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் குறிப்பிடத்தக்க நடிகர்.
தமிழக அரசியல் அலையில் ஒரு முறையல்ல ஒவ்வொரு முறையும் சிக்குபவர் என்றால் அது ரஜினி காந்த் தான். 1990ஆம் ஆண்டிற்கு பிறகு விரும்பியோ விரும்பாமலோ அரசியல் சாயம் ரஜினி மீது பூசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
'அம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை அந்தக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது' என்று ரஜினி கூறியதன் பின்னர் அம்மா ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.
சினிமாவில் வெற்றி பெற்ற அனைவரினாலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு உணர்த்திருக்கிறார் ரஜினி. ஏனெனில் இன்று வரை அரசியலுக்கு வருவீர்களா? வரமாட்டீர்களா? என்ற கேள்விக்கு ரஜினியின் பதில் வருவேன் ஆனால் வரமாட்டேன் என்ற பாணியில் தான் அமைந்துள்ளது.
தமிழக மக்கள் இன்னுமொரு எம்.ஜி.ஆரைத்தான் எதிர்பார்க்கிறார்களே தவிர ரஜினியை அல்ல என அவருக்கு நன்கு தெரியும். இதனாலேயே என்னவோ 'கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது கஷ்டப்படாமல் கிடைக்கிறது என்றைக்குமே நிலைக்காது 'என்ற அவரது 'பன்ச்' வசனத்தினை படத்தில் மட்டுமல்ல அவரது அரசியல் வாழ்க்கையில் எடுத்தியம்புகிறார் போல தெரிகிறது.
ஆனாலும் ரஜினிக்கு அரசியலில் ஆசை இல்லை என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் 1990ஆம் ஆண்டிற்கு பின்னரான அவரது படங்களில் அதிகளவில் அரசியல் நெடி பறக்கும். பாடல்களிலும் தன் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார். இருப்பினும் நேரடியாக இதுவரை அரசியல் பிரவேசம் குறித்து ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததே இல்லை.
இருப்பினும் ரஜினி பேசிய, சாமானிய மனிதனும் பேசக்கூடிய அரசியல் கருத்துக்களை பெரிது படுத்தியதில் தமிழக ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. 1996ஆம் ஆண்டில் ரஜினியின் வார்த்தையே ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்ற தொனியில் அன்று ஊடகங்கள் பலவும் ரஜினியின் அரசியல் வருகையின் எதிர்பார்ப்பை உணர்த்தின.
இதன் பின்னர் தமிழகத்தில் இடம்பெற்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளின் போதும் ரஜினின் பெயர் பெரியளவில் பேசப்பட்டது. காவேரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, ஓகேனல் குடி நீர்த்திட்டம் என வரிசையாக தமிழகத்தில் இடம்பெற்ற அனைத்து பிரச்சினைகளின் போதும் ரஜினியை அரசியலுக்குள் கொண்டு சென்றது.
மேற்படி குறித்த சில சமூக பிரச்சினைகளின் போது ரஜினி வெளியிட்ட கருத்துக்கள் சிலவற்றுக்கு தமிழக மக்கள், கேரள மக்கள் மற்றும் கன்னட மக்கள் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ரஜினி மன்னிப்புக் கோரி தனது பெருந்தன்மையினை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் தேர்தல்களின் போது ரஜினி யாருக்கு வாக்களித்தார் என்பது முதல் கொண்டு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் வெளிப்படையாகவே 1996ஆம் ஆண்டில் ரஜினி தனது ஆதரவினை தி.மு.க விற்கு வழங்கியதால் ஏற்றபட்ட குழப்பம் காரணமாக தேர்தல்களின் போது அவரது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதை சில காலம் தவிர்த்து வந்தார்.
பின்னர் 2004ஆம் ஆண்டில் தான் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க விற்கு வாக்களித்ததாக தெரிவித்து அரசியல் அலையை மீண்டும் ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் காலங்களின் போது சற்று அவதானமாகவே இருந்து வந்தார் ரஜினி.
2007ஆம் ஆண்டு இடம்பெற்ற 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்சியில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி முன்னிலையில் 'சமூக பிரச்சினை சார்ந்த விடயங்களுக்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைக்கிறார்கள்' என அஜித்தின் வெளிப்படையான பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டி ஆதரித்தார் ரஜினி. இதனால் மறுபடியும் அரசியல் சர்ச்சைகளில் மாட்டிகொண்டார். இருப்பினும் இதனை அரசியலாக்க முயன்ற பலரின் முயற்சிகளுக்கு கலைஞர் கருணாநிதியுடனான நட்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.
இவ்வலை ஓய்வதற்குள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ரஜனி வாக்களித்ததைப் படம் பிடித்து வெளியிட்டதனால் பெரும் பரபரப்பில் சிக்கித் தவித்தார். இவ்வாறு தமிழக அரசியலில் இவரது செயற்பாடுகள் தொடர் கதையானது.
இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ரஜினி எந்திரன் படத்திற்கு பின்னர் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசுவேன் எனக் கூறியிருந்தார். ஆனால் வழக்கம் போல எந்திரன் வெளியாகி ஓராண்டு கடந்தும் மௌனம் காத்தே வந்தார். இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிகிச்சைகளுக்கு பின்னர் பூரண குணமடைந்த நிலையில் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தவுடன் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளும் ஆரம்பமாகின.
அதேவேளை சென்னையில் இடம்பெற்ற அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு ராகவேந்திரா மண்டபத்தை வழங்கியதனையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரபான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தது.
ஏனெனில் பொதுவாக ராகவேந்திரா மண்டபத்தில் தான் சம்பந்தப்படாத எந்த நிகழ்வுகளிலும் ரஜினி கலந்து கொள்வதில்லை. இருப்பினும் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு அவர்களது தேவைகளை அறிந்து செயற்பட்டு இன்ப அதிர்ச்சி அளித்தார் ரஜினி.
இது போதாதென்று உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவும் தயாராக இருந்தாராம் ரஜினி. ஆனால் தேவையில்லாத பரபரப்பு உண்டாகும் என்ற காரணாத்தால் ரஜினி கலந்து கொள்ளாமல் தவிர்த்தகாகக் கூறப்படுகிறது. மேலும் இம்முறை எழும் அரசியல் அலை கண்டிப்பாக தலைவரை அரசியல் எனும் கடலுக்குள் இழுத்துவரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனபோதும் ரஜினி வழக்கமான தனது மௌனத்தையே இதுவரையிலும் பதிலாக்கிக்கொண்டிருக்கிறார். ரஜினியின் அரசியலும் சினிமாவும், முள்ளில் சிக்கிய சேலை போல இருப்பதனால் பக்குவமாக அதனை பிரித்தெடுக்கவே முயற்சிக்கிறார். ஆனால் ரஜினியின் ரசிகர்களின் ஆதங்கமோ, விஜயகாந்தினால் எதிர்க்கட்சித் தலைவராக வர முடியுமென்றால் ரஜினியால் முடியாதா? என்பதே.
மேலும் புதிய கட்சியின் சேவை தமிழகத்திற்கு தேவைதானா என ரஜினி சிந்திப்பதாக வைரமுத்து பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தற்போது கருணாநிதியின் வீழ்ச்சி ரஜினிக்கு எழுச்சியாகக் கூட அமையலாம் என்பதால் இனிவரும் தேர்தல்களில் ரஜினியின் முடிவு அரசியலுக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு என எதிர்பார்க்கலாம்
விரைவில் எம்.ஜி.ஆர் வழியில் அரசியலில் களம் புகுந்து தமிழக ஆட்சியை கைப்பற்ற முனைவாரா? இல்லை தன் பாணியில் விரலை மேலே உயர்த்திவிடுவாரா? காலத்தின் மாற்றத்தில் ரஜினிதான் பதில் கூறவேண்டும்.
-அமானுல்லா .எம்.றிஷாத்