அப்படியானதொரு பாரிய இலக்கை நோக்கிய பயணமொன்று டச்சு நிறுவனமொன்றினால் திட்டமிட்டபடி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன உலகை தாண்டும் திட்டம் என எண்ணுகின்றீர்களா?
அப்படியெனில் உங்கள் எண்ணம் சரியானதே. ஏனெனில் புவியிலிருந்து செவ்வாய்க் கிரகத்திற்கு குடியேறும் திட்டம் ஒன்றே அது.
அதாவது, புவியிலுள்ள அனைத்துப் பாகங்களிலுமுள்ள மக்களில் செவ்வாய் கிரகத்திற்கு சென்று, வாழ்ந்து அங்கேயே இறக்க விரும்பும் மனிதர்களை இலவசமாக அழைத்துச் செல்ல "Mars One" என்ற இலாப நோக்கற்ற டச்சு நிறுவனமொன்று தயாராகியுள்ளது. இத்திட்டத்திற்கும் அந்நிறுவனம் "Mars One" எனப் பெயரிட்டுள்ளது.
கடந்த 2011ஆம் நெதர்லாந்தைச் சேர்ந்த பாஸ் லேண்ட்ஸ்டோப் மற்றும் அர்னோ ஏ. வீல்டர்ஸ் என்பவர்கள் பல முன்னணி அறிவியலாளர்களின் ஆலோசனைகளுடன் "Mars One" திட்டத்தினை உருவாக்கினர். இவர்களே இந்நிறுவனத்தின் நிறுவனர்களாவர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழலாம் என்ற நம்பிக்கை வலுவடைந்து வருகிறது. எனவே இந்நிறுவனமானது மனிதர்கள் செவ்வாயில் வாழ குடியிருப்பை நிறுவி அங்கு மனிதர்களை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இதனை முற்றிலும் இலவசமாக செய்யவும் முன்வந்துள்ளது.
இதற்கான பயணம் 2022ஆம் ஆண்டில் புவியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு புதியதோர் கிரகத்தில் தரை இறங்கி புதிய தடம் பதிக்கும் மனிதர்கள் புதியதோர் சந்ததியினரையும் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
இது குறித்த தகவல்களை முதன் முதலில் கடந்த வருடன் 2012 ஆண்டு மே மாதம் 31ஆம் திகதியே அதிகாரபூர்வமாக ஊடகங்கள் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தினர்.
அதிகரிக்கும் ஆர்வலர்கள்
இதற்காக http://applicants.mars-one.com எனும் இணையத்தளம் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளத்தின் மூலம் பயணம் தொடர்பான தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் செவ்வாய் கிரகம் செல்லும் ஒரு வழி டிக்கட்டினை இலவசமாக வழங்குவதற்காக ஆர்வமிக்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. முதற்கட்டத் தேர்வு இவ்விண்ணப்பங்களிலிருந்தே இடம்பெறவுள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் விண்ணப்பங்களை அனுப்ப ஆர்வலர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அன்றிலிருந்த அடுத்த 4 நாட்களில் உலகின் பல பாகங்களிலிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. இதுவே "Mars One" திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதற்கான வித்தினை விதைதுள்ளது. இந்த ஆர்வ வித்துக்களை செவ்வாயில் மரமாக்குவதே "Mars One" இன் திட்டம்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் இளவயதினரே அதிகளவில் செவ்வாய் செல்வதற்கு நாட்டம் காண்பிக்கின்றனர். குறிப்பாக 18--30 வயதிற்கிடைப்பட்டவர்கள். மேலும் சீனாவிலிருந்தே அதிகமான விண்ணப்பங்கள் இதுவரையில் கிடைத்துள்ளது. இது தவிர அமெரிக்கா, ஜேர்மன், கனடா, ஸ்வீடன், ஸ்பெய்ன் உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் அதிகளவில் வருவதனை "Mars One" இணையத்தளம் காட்டுகின்றது. இலங்கையிலிருந்து கடந்த மாதம் 30ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் எதுவும் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் திகதி எப்போது முடிவடையும் என தெரிவிக்கப்படாத இந்நிலையில் ஆரம்பகட்டமாக விண்ணப்பிப்போரின் தொகைக்கொண்டு பார்க்கையில் மேலும் பல்லாயிரக்கணக்கணக்கானேர் இப்பணயத்திற்கு ஆர்வம் காட்டி விண்ணப்பிப்பார்கள் என "Mars One" நிறுவுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இத்தனைக்கும் இப்பயணம் ஆபத்தும் பலத்த சவால்மிக்கதும் என தெரிந்த பின்னர் கிடைக்கப்பெற்றதே.
தேர்வு முறை
இதேவேளை அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்வதென்பது சாத்தியமில்லை. காரணம் இது மிகவும் சவால்மிக்க பயணம் என்பதுடன் செலவுமிக்க பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே வரும் விண்ணப்பங்களிலிருந்து சிறந்த ஆரோக்கியம், மொழித் தேர்ச்சி, குழுவாக செயற்படுத்தும் தன்மை, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் மேலும் பல திறமைகளை அடிப்படையாகக் கொண்டே ஆட்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 7 வருடங்கள் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பயணத்திற்கு தயார் செய்யப்படவுள்ளனர். இத்திட்டத்தில் ஆங்கிலம், ஸ்பானிஸ், டச், அரபு, இந்தோனேஷியன், ஜப்பான், சீன மொழிகள் போன்றவை பயன்படுத்துவதற்கு திட்டமிட்டாலும் ஆங்கிலமே பொது மொழியாகக் கொள்ளப்படவுள்ளது.
பணம் திரட்டும் நடவடிக்கைகள்
செலவு அதிகமிக்க இப்பயணத்திற்காக முதற் கட்டமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்காக செவ்வாய் கிரகத்திற்கு சென்றன் பின்னர் அங்குள்ள நடவடிக்கைகளை படம்பிடித்து வெளியிடும் தொலைக்காட்சி உரிமத்தை அதிக விலைக்கு விற்கவுள்ளது.
மேலும் "Mars One" திட்டத்தின் பிரத்தியேக இணையத்தளத்தின் மூலம் நன்கொடை பெறவும் ஏற்பாடு செய்துள்ளது. இலவசமாக ஒரு வழி டிக்கெட்டினை செவ்வாய் கிரகத்திற்கு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மட்டும் கட்டணம் அறவிடப்படுகின்றது. விண்ணப்பிக்கும் நாட்டினைப் பொறுத்து விண்ணப்ப கட்டணம் 7-25 அமெரிக்க டொலர்கள் வரை அறவிடப்படுகின்றது.
செவ்வாயில் குடியேறுவது சாத்தியமா?
சாத்தியமா? முடியுமா? என்பதெல்லாம் முயற்சியற்ற மூடர்களுக்கே வரும் என்பது போல உள்ளது "Mars One" இன் திட்டங்கள். ஏனெனில் செலவுமிக்க இத்திட்டத்தினை செலவுகளை குறைத்து நேரத்தை மீதப்படுத்தி, அங்குள்ள வளங்களின் மூலம் மீள புவிக்கு வராது செவ்வாயிலேயே வாழும் மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை எதுவித அரசியல் தலையீடுகள் இன்றி செயற்படுத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர் "Mars One" திட்டத்தினை முன்னெடுப்பவர்கள்.
இதற்கு மேலும் இதுவெல்லாம் சாதரணமான வீண் முயற்சிகள் என்பதுடன் செவ்வாயில் குடியேறுவதெல்லாம் சாத்தியமா? என்று அறிவியலையும் அறிவியலாளர்களையும் கிண்டல் செய் யும் ஒரு வகையான சமூகமும் இருக் கத்தான் செய்கிறது. அவர்களுக்கு புரி யவா போகிறது. முயற்சிகளினதும் தேட லினதும் முடிவில் கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி.
மூச்சு எடுப்பதும் விடுவதும் சாதாரண மாகத்தான் தோன்றும் ஆனால் அவற்றை நிறுத்திவிட்டால்.... ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு பின்னர் சிந்திந்தால் புரியும் அதன் தேவை. அதுபோலவே அறிவியலில் எடுக்கப்படும் முயற்சிகளும் தேடல்களும. அது முயற்சிகள் மூலம் தேடல்களின் சுவாரஸ்யத்தினை உணர்ந்தவர்களுக்கே புரியும்.
எனவே விரைவில் செவ்வாயில் குடியேறி புவியிலுள்ளவர்களை வாய் பிளக்க வேடிக்கை பார்க்க வைக்கும் திட்டமாகவே அமையும் இந்த MARS ONE என்பதே ஏற்பாட்டாளர்களினதும் ஆர்வலர்களினதும் தற்போதைய நம்பிக் கையாக உள்ளது.
-அமானுல்லா எம்.றிஷாத்
இக்கட்டுரையானது 03.05.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
இதன் தற்போதைய நிலவரம் -
இலவசமாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப் பயணமாக செல்ல உலகின் பல பாகங்களிலிருந்தும் 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பத்துள்ளனர். இதில் சுமார் 10 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் அடக்கம்.