பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவரான ஆசாத் ரவுப் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் சூதாட்டங்களில் தொடர்புபட்டிரக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சம்பியன்ஸ் போட்டித் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு ஊழல் மற்றும் சூதாட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஐ.பி.எல் கேளிக்கை கிரிக்கெட்டில் முதன் முறையாக நடுவர் ஒருவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதன் எதிரொலியாக சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரிலிருந்து அதிரடியாக அசாத் ரவுப் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், நடுவர் அசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலிசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டின் நலனுக்காகவும், சம்பியன்ஸ் தொடரிலிருந்து அவரை நீக்குவது என தீர்மானித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டில் மும்பை மொடல் அழகி லீனா கபூருடன் அசாத் ரவுப் பாலியல் தொடர்பு குறித்த சர்ச்சையில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.
By : AM. Rizath/Metronews