Total Pageviews

Monday, May 16, 2016

புறூஸ் லீயின் தனித்துவமான ஒரு அங்குல குத்து : கேமராவில் படம் பிடிக்க முடியாத வேகம்



எந்த துறையானாலும் அந்த துறையில் தனித்துவமாக செயற்படுகின் றவர்களுக்கான இடம் என்பது என்றைக்கும் நிரந்தரமாகிவிடுகின்றது.

அந்த வகையில் தற்காப்புக் கலையினை தனக்கான பாணியில் மக்களை கவர்ந்த உன்னதமான கலைஞன் புறூஸ் லீ. உலகின் பல பாகங்களிலும் தற்காப்புக் கலை வளர்வதற்கு பிரபல்யமடைவதற்கும் நடிகரும் தற்காப்புக் கலைஞருமான புறூஸ் லீயின் பங்கு அளப்பரியது.


குங்பூ, கராத்தே, வில்வித்தை, வாள் சண்டை போன்ற ஏராளமான தற்காப்புக் கலைகள் இன்று பல நாடுகளில் பல விதமான முறைகளில் பிரபல்யடைந்துள்ளன. ஆனால் அனைத்து தற்காப்பு கலை விரும்பிகளுக்கும் பொதுவான ஒரு முன்னுதாரணமாய் இன்றும் இருப்பவர் புறூஸ் லீ.

எந்த ஒரு தற்காப்புக் கலைஞனை விடவும் வேகமாகவும் விவேகமாகவும் தனித்துவமான தற்காப்பு நகர்வுகளை புறூஸ் லீ கையாண்டிருந்தமையும் அதற்கான காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஒரு அங்குலம் மற்றும் 6 அங்குலம் இடைவெளியிலான புறூஸ்லியின் குத்து இன்றும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தற்காப்பு கலையை விட பிரபல்யமும் அச்சரியமிக்கதுமான குத்து அவை. இந்த குத்து கில் பில் எனும் ஹொலிவூட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த புறூஸ் லீயை ஆராதிக்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர். ஒரு வகையான வலிப்பு மற்றும் தலைவலி காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் இவரது மரணத்தின் மர்மம் புதிராகவே நீடிக்கின்றது. அது போலவே புறூஸ் லீயின் தனித்துவமான சிறிய இடைவெளியிலமைந்த குத்துக்களும்.

இதனால் புறூஸ் லீயின் நகர்வுகள் குறித்து இப்போதும் ஆய்வு செய்யப்படுகின்றது. உலகின் மிக குறைந்த வெப்பமளிக்கா காலம் கொண்டவராக புறூஸ் லீ கருதப்படுகின்றது. இதுவே அவரது வேகமான செயற்பாட்டுக்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் தனித்துவமான குத்துக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு அங்குல இடைவெளி குத்தானது தசையை விட அதிகளவில் மூளையுடன் தொடர்புடையதாக உள்ளது ஏன் என அறிந்து கொள்ள வேண்டும். இச்சிக்கலான முழு உடல் அசைவில் அமைந்து குத்து மில்லி செக்கனில் இடம்பெறும் செயற்பாடு. இருப்பினும் புறூஸ் லீ எவ்வாறு அதனை மேற்கொள்கிறார் என அறிய அவதானிப்பு முக்கியமானது என்கிறது இந்த ஆய்வு.

இவ்வாய்வினை அமெரிக்காவின் ஸ்டேன்போர் பலகலைக்கழக உயிரியல் இயந்திரவில் ஆய்வாளரான ஜேஸிக்கா ரோஸ் மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஜெஸிகா கூறுகையில், 'குத்துக்கான அசைவு கால்களில் இருந்து ஆரம்பமாகின்றன. ஒரு அங்குல குத்தினை உன்னிப்பாக அவதானிக்கும் போது புறூஸ் லீயின் முன் மற்றும் பின் கால்கள் விரைவில் நேராக வந்து அதிவிரைவில் வந்து செல்வதை உங்களால் காண முடியும்' என்கிறார் ரோஸ்.


கால் இவ்வாறு நேராகும் போது இடுப்பினூடாக தோட்பட்டைக்கு சக்தி கடத்தப்பட்டு கைக்கு செல்கின்றது. இதனால் மில்லி செக்கன் இடைவெளியில் கையில் கிடைக்கும் ளூஒன்று சேர்க்கப்பட்ட சக்திளூயால் எதிரியை ஒரேயொரு, ஒரு அங்குல குத்தினால் புறூஸ் லீயினால் வீழ்த்த முடிந்துள்ளது என விளக்களித்துள்ளார் ஆய்வாளர் ரோஸ்.

குறைந்த நேர இடைவெளியில் இடம்பெறும் இந்த குத்து குறித்து ரோஸ் கூறுகையில், 'இந்த ஒருங்கிணைப்பில் தசை நார்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அத்துடன் ஒரு அங்கு இடைவெளி போன்ற குத்துக்களுக்கு பிரதான பின்னணி காரணியாக ஒருங்கிணைப்பும் நேரமைப்புமே முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன' என்கிறார் ரோஸ்.


2012ஆம் ஆண்டிலும் இந்த உடலமைப்பு முறையில் சிறிய இடைவெளியில அமைகின்ற குத்து குறித்து லண்டன் இம்பெரியல் கல்லூயின் நரம்பியல் விஞ்ஞானியான எட் ரொபேர்ட்ஸ் என்பவரும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதேபோன்று புறூஸ் லீயின் வேகம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வம்சாவளியான புறூஸ் லீ, 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கலிபோர்னியாவில் பிறந்து ஜுலை 20ஆம் திகதி 1973ஆம் ஆண்டு தனது 32ஆவது வயதில் ஹொங்கொங்கில் மர்மமாக மரணமானார்.


அமெரிக்க ஆசிரியையான லிண்டா எமிரியை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரண்டன் லீ என்ற ஆண் குழந்தையும் ஷனொன் லீ என்ற பெண் குழந்தையும் பிறந்தனர். புறூஸ் லீயைப் போன்று செயற்பட்ட அவரது மகனும் ஹொலிவூட் நடிகருமான பிரண்டன் லீ படப்பிடிப்பின் போது தவறுதலாக சுடப்பட்டு 28ஆவது வயதில் 1993ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சிறு வயது முதல் தற்காப்புக் கலையில் நாட்டம் கொண்டிருந்த புறூஸ் லீ தற்காப்புக் கலையை ஐபி மேன் என்பவரிடம் கற்றார். தனது தனித்துவமான திறனால் 1969 முதல் 1973ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மார்லோவ், த பிக் பொஸ், பிஸ்ட் ஒப் பியூரி, வே ஒப் ட்ரகன், எண்டர் த ட்ரகன் மற்றும் கேம் ஒப் த டெத் (முழுமையாக முடிக்கப்படவில்லை) ஆகிய 6 படங்களில் மட்டுமே நடித்து நாயகனாகவும் பெரு வெற்றி பெற்றார். புறூஸ் லீயின் படங்கள் இன்றும் அவரது சண்டைகளுக்காக ரசிக்கப்படுகின்றது.





இக்காலப் பகுதியில் கெமராவின் செக்கனுக்கான பிரேம் தற்போதைய கெமராவுடன் ஒப்பிடுகையில் பல ஆயிரம் மடங்கு குறைவு. இதனால் படப்பிடிப்பில் இவரது அதிவேகமான சண்டைகளை படம் பிடிக்க முடியாமல் அவரது நிஜமான வேகத்தினைக் குறைத்து படம்பிடிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.


அதி திறன்மிக்க இக்கலைஞனால் குறித்த காலப் பகுதியில் சீனப் பிராந்தியங்களில் தற்காப்புக் கலை நிலையங்கள் வெகுவாக அதிகரித்ததாகக் கூறப்படுகின்றது. புறூஸ் லீயின் மரணத்தின் பின்னர் அவரது மனைவி தற்காப்புக் கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அவரது மகள் தற்போதும் ஈடுபடுகின்றார்.

புறூஸ் லீ தனது 32 வயதில் மரணமடைந்த போதிலும் இன்னும் 32 தலைமுறைகளானாலும் மறக்க முடியாத தனித்துவக் கலைஞராக வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பார்.

-ஏ.எம்.ஆர்