பால்மா உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் சூர்யாக்களின் தந்தையான சச்சின் கடேகர் தவறான பதையில் பணம் சம்பாதிப்பது பிள்ளைகளுக்கு தெரியவர தந்தையின் தவறுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே கதை. இதற்காக ஜெனட்டிக், ஒட்டிப்பிறந்த சகோதரர்கள், உக்வேனியா, காதல், உறவுகள் என சினிமா சாயம் பூசியிருக்கிறார் இயக்குனர்.
ஓர் இயதம் ஈருடலாக பிறக்கும் குழந்தைகளில் ஒருவர் உயிர்பிழைக்க ஒருவரை கொல்ல வேண்டி ஏற்படுட தாயின் விருப்பத்தினால் பிரிக்கப்படாமல் ஓருயிர் ஈருடலாக அகிலன் மிளகு ரசம் குடிக்கும் பிள்ளையாக வளர விமலன் சரக்கடிக்கும் பிள்ளையாக வளர்கிறார்.
படத்தில் கொமடியன் இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் சூர்யா. நகைச்சுவை காட்சிகளில் சூர்யாவின் டைமிங் கொமடிகள் அத்தனையும் அரங்கத்தை சிரிப்பொலியில் அதிரச் செய்கிறது. இதனால் முதல் பாதி நீளமானபோதும் ரசிக்கும்படி வேகமாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது திரைக்கதை.
ஒரு கட்டத்தில் சீரியஸான சூர்யாவிற்கு அப்பாவின் தவறுகள் தெரியவரும் போது அவரை வில்லன்கள் கொன்றுவிட இதயமாற்று சிகிச்சை மூலம் விமலன் பிழைக்க அதிலிருந்து திரைக்கதை ரசிகர்களை ரசிகர்களை கொல்ல ஆரம்பிக்கின்றது. மேலும் விமலன் இறந்தபோதும் அது பெரிதாக இதயங்களை கனக்கச்செய்யவில்லை இத்தனைக்கு அந்த இடங்களில் சூர்யாவின் நடிப்பு அபாராம் என்றாலும் இயக்குனர் கோட்டை விடுவது ரசிகர்களுக்கு சோகம்.
பின்னர் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஒரு சூர்யாவுடன் பயணிக்கிறது கதை. விமலன் இன்றிய அகிலனின் தவிப்பு மட்டுமே இரண்டாம் பாதியில் ரசிக்கக்கூடியதாக உள்ளது. இன்னொரு நாட்டின் மனச்சாட்சியே இல்லாத தீர்மானங்கள், ஜெனட்டிக் என புதுக்களத்தில் கதை சென்றாலும் படம் எப்போது முடியும் என நீண்ட நேரமாக எம்மை சோதிக்கும் திரைக்கதையில் கே.வி. ஆனந்த் இயக்குனராக தோற்றுப்போகிறார். அது எப்படி என்பதை நீங்களே திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் இது எம்.ஜி.ஆர் படங்களை போன்ற படம் என சூர்யா தெரிவித்திருந்தார் அது உண்மை என நிரூபிப்பது போல இரண்டாம் பாதியில் காட்சிகள் அமைந்துள்ளமை ஒரு பழைய படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதை தடுக்க முடியவில்லை.
உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் எங்கே போனாலும் அங்கே வில்லனில் அடியாட்கள் அசோகனிடம் பாஸ் அவங்க வந்துட்டாங்க, பாஸ் அவங்க போய்ட்டாங்க என வில்லனிடம் தகவல்கொடுப்பது போன்ற அடியாட்கள் சிலரையாவது தவிர்த்திருக்கலாம். மேலும் அதில் இடம்பெறும் வசனங்களையாவது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். எனக்கு இதயம் இல்லைன்னாலும் ஈரம் இருக்கும்மா என ஓரிரு வசனங்களே மனதை வருடுகிறது.
முழுப்படத்தையும் கடைசிவரை இழுத்துச்செல்வது படத்தின் நாயகன் சூர்யா மட்டுமே. ஒவ்வொரு சீனிலும் மனிதன் அசத்துகிறார். நகைச்சுவை உட்பட அனைத்து விதமான நடிப்பிலும் பட்டையை கிளப்புகிறார். சின்ன சின்ன அசைவுகளும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. சில காட்சிகளில் எத்தனை இலகுவாக எம்மை அழச்செய்கிறாரோ அத்தனை இலவுவாக சிரிக்கவும் செய்வதுடன் இரட்டையர்களாகவே வாழ்ந்திருப்பது சூர்யாவின் அபார உழைப்பு ஆனாலும் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கிறது திரைக்கதை என்பதே வருத்தம்.
நாயகி காஜலுக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரம் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவ்வப்போது தமிழ் படங்களில் தலைகாட்டினாலும் பழகிய முகமாக கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார். ரொமன்ஸ் காட்சிகளும் ரசிக்கலாம். படம் முடியும் வரை மொழிமாற்றம் செய்துகொண்டே இருப்பதுவே உறுத்தல்.
நாயகன் சூர்யாக்களுடன் சேர்த்து முதல் பாதி முழுக்க மூன்றாவது நாயகனாக கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணை உறுத்தாது பயணிப்பது பாராட்டும் விதமாக உள்ளது. இதுவே ஒட்டிப்பிறந்த சகோரர்களை சூர்யாவுடன் சேர்த்து எம்மை நம்ப வைக்கிறது.
இந்த மூவரையும் தாண்டி ஒளிப்பதிவாளர் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். நோர்வேயின் அழகை மேலும் அழகுபடுத்துகிறது சௌந்தரின் கைவண்ணம். அயனில் பார்த்த பல கோணங்கள் இயக்குனரின் கெடுபிடியாக இருக்கலாம். உச்சிகளில் பாடல்களை படமாக்குவதை தவிர்த்திருக்கலாம் காரணம் கே.வி. ஆனந்தின் படங்களில் ஏற்கனவே இடம்பெற்ற பாடல்களை நினைவுபடுத்துகிறது.
நாயகன் நாயகி தவிர சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் மட்டுமே மனதில் நிற்கிறார் ஏனையவர்கள் எவரும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.
அடுத்தது சண்டைக்காட்சிகள் சூர்யாவின் முயற்சிகளை சிதறடிக்கிறது அவற்றின் நீளம். இரண்டாம் பாதி கிட்டத்தட்ட சண்டை காட்சிகள் மட்டுமே உள்ளது போல் தோன்றச்செய்கிறது. 3 படங்களின் சண்டைக்காட்சிகளை ஒரே படத்தில் பார்த்த உணர்வு.
இசை ஹாரீஸ் ஜெயராஜ் பாடல்கள்தான் எதுவும் மனதில் நிற்கவில்லை என்றால் பின்னணி இசையும் எரைச்சலால் எரிச்சலூட்டுகிறது. சுட்டாச்சும் நல்லாத்தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் அண்மைக்காலமாக என்னாச்சு என்றே புரியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் பின்னணியில் நிஜமான நாயகனாக இருக்க வேண்டிய இயக்குனரே படத்திற்கு வில்லனாகிவிட்டார். படத்தின் கதை சிறப்பாக அமைந்தபோதிலும் திரைக்கதையில் கோட்டை விட்டதில் சினிமா ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டார் கே.வி. ஆனந்த். மேலும் முந்தைய படங்களின் பாதிப்பிலிருந்தும் மீளவில்லை என பல இடங்களில் நிரூபிக்கிறார்.
4 வருடங்கள் உட்கார்ந்து எழுதிய கதை என்றார்கள் ஆனால் 4 வருடங்களில் ஏகப்பட்ட படங்களை பார்த்து எழுதிய கதை என்பது இப்போது புரிகின்றது. போதாதற்கு சூர்யாவின் கடைசித் தோல்வி 7ஆம் அறிவு போலவும் சில காட்சிகள். சூர்யாவுக்கு படம் முடிந்து எழுத்தோட்டத்துடன் விருது வழங்கும் இரண்டாவது படம் இது. சூர்யாவின் வெற்றியே வித்தியாசமான கதைத்தேர்வுகளே எனவே அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் சூதானமாக அமையட்டும் சூர்யா!
மாற்றான் வழக்கத்துக்கு மாற்றமான கதையானாலும் ரசிகர்களின் ரசனையை மாற்றான்!
- அமானுல்லா எம். றிஷாத்