உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை ஏற்படுத்திக்கொண்டிந்த 21ஆம் திகதி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையின் நாளாக விடிந்திருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
கடந்த சில வாரங்களாகவே அனைத்து நாடுகளிலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி மக்களை ஆட்டிப் படைத்த 21.12.2012 தினமான நேற்று என்னதான் நடந்நது என்றால் வடிவேலுவின் பாணியில் கையை விரித்துக்கொண்டு ஒண்ணுமே இல்லை என்கிறார்கள் அனைவரும்.
எதிர்பார்ப்புக்கள் பலவற்றை ஒன்று சேர்த்து நடந்தேறிய சில சம்பவங்களுடன் முடிச்சுப் போட்டு 21ஆம் திகதி உலக அழிவு என்ற மாயை அனைவரிடத்திலும் மாயா இனத்தவர்களின் பெயரில் தோற்றுவித்ததில் யார் இலாபமடைந்தார்களோ இல்லையோ சில ஊடகங்கள்; தங்களை பிரபல்யப்படுத்திக்கொண்ட வகையில் அவர்களுக்கு இலாபமே.
சாதாரணமாக நடைபெறும் சிறிய சம்பவங்கள் கூட சில வாரங்களாக 21ஆம் திகதியுடன் இணைத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விண்ணிலிருந்து பறக்கும் கற்கள், பூமியதிர்ச்சி, கடல் பாம்புகளின் படையெடுப்பு, மீன் மழை, சிவப்பு மற்றும் மஞ்சள் மழை என அத்தனையும் பூமியில் நிகழவிருக்கும் பாரிய அழிவின் அறிகுறிகள் என்பது போல சித்தரிக்கப்பட்டு மக்களை பயமுறுத்தச் செய்தது.
ஆனால் நடந்தேறிய அத்தனை சம்பவங்களும் சாதாரணமானவையே அன்றி அவை எதுவும் அசாதாரண நிகழ்வுகள் அல்ல.
கடந்த சில ஆண்டுகளாக உலகின் அனைத்து பாகங்களிலும் நடைபெறும் சிறிய விடயங்களைக் கூட தெரிந்துகொள்ளும் அளவிற்கு தொடர்பாடல் வளர்ந்து உச்சத்தை அடைந்திருப்பதனால் நடைபெறும் சம்பவங்களை இலகுவில் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறதே தவிர அவை எதுவும் விசித்திரமாகவோ புதுமையாகவோ நடைபெறுகின்ற சம்பவங்கள் அல்ல.
இதுவரையிலான தகவல்களின் படி உலகின் எந்த பாகத்திலும் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பதை இந்த செய்தியினை வாசித்துக்கொண்டிருக்கும் போதே உணர முடிகின்றதல்லவா?
பெரும்பாலானவர்களின் மனதில் வேரூன்றியிருந்த உலக அழிவை பொய்யாக்கி மாயன்களுக்கு புதிய நாட்காட்டியை உருவாக்க வேண்டிய நாளே இது என்பதை உண்மையாக்கிய நாளாக மாறியிருக்கின்றது இந்த 21ஆம் திகதி.
3 நாள் தொடர்ச்சியான இருள்
நிலைமை இவ்வாறிருக்க புதிதாகவொரு கட்டுக்கதையை மீண்டும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் சிலர். அதாவது துருவமாற்றத்தின் காரணமாக பூமியில் அசாதாரண சுழற்சி ஏற்பட்டு தொடர்ச்சியாக இம்மாதம் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் புவியை இருள் சூழ்ந்துகொள்ளும் என கிளப்பிவிட்டிருக்கிறது சில மத அமைப்புக்கள்.
இப்போதுதான் உலக அழிவு பீதியிலிருந்து மக்கள் விடுபட்டிருக்கிறார்கள் அதற்கும் மீண்டும் ஒரு புரளியா என அலுத்துக்கொள்ள வேண்டியதொரு சமாச்சரமே அன்றி வேறேதுமில்லை என்று நம்பிக்கை தருகிறார் நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், உலகம் அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும் தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.
அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி.
இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களிலும் எதுவித உண்மையும் இல்லை. இது தொடர்பாக நாசா கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானது. எனவே மக்கள் இது தொடர்பில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாயா இனத்தவரின் கொண்டாட்டங்கள்
உலக அழிவுக்கு பிரதான ஆதாரமாக மாயன் நாட்காட்டியே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால் மாயா இனத்தவரோ 21ஆம் திகதியை வெகு சிறப்பாக தங்களது பாரம்பரிய நிகழ்வுகளுடன் கொண்டாடி மகிழ்ந்து மாயன் நாட்காட்டிக்கு விடைகொடுத்துள்ளனர்.
400 வருட காலம் நிறைவடைந்து புது யுகம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டே மாயா இனத்தவர்களின் பாரம்பரிய வழிமுறையில் தங்களது மகிழ்ச்சியை ஆடிப்பாடி வெளிப்படுத்தியுள்ளனர்.
பேர்காஜ் கிராமத்தில் கூடியோருக்கு ஏமாற்றம்
இதேவேளை மாயன் நாட்காட்டியின் படி உலகம் அழியப்போவதனை நம்பி பிரான்ஸிலுள்ள பேர்காஜ் கிராமத்தில் கூடியிருந்த மக்கள் பலத்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து தங்களது சொந்த இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் அழியும் போது பேர்காஜ் கிராமத்திற்கு வேற்றுக்கிரக வாசிகளால் விண்கலம் அனுப்பப்படும் அதில் ஏறியோர் உயிர் பிழைக்கலாம் என்ற வதந்தியால் அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவ்வூருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பெரும்பாலான மக்கள் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அங்கு சென்றுள்ளனர். இறுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதனால் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கைகொட்டி மகிழ்ந்துள்ளனர்.
ஆனாலும் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அமைந்த இந்த உலக அழிவு சர்ச்சையில் சில உயிர்கள் பலியானதுடன் சிலர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டதும் வருத்தமே.
மாயன் நாட்டியின் படி உலகம் அழிவது உறுதி எனவே அதற்கு முதல் கூட்டாக இறந்துவிடலாம் என சமூக வலைத்தளங்களில் வெளியான போலி வார்த்தைகளை நம்பி ஆர்ஜென்டீனாவில் சுமார் 150 பேர் கூட்டாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
இதற்காக மாயன் கோவில் அமைந்துள்ள மலைகளின் உச்சியை தேர்ந்தெடுத்து ஆங்காங்கே படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆர்ஜென்டீனா அரசு பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு பாதுகாப்புப் படையின் உதவியுடன் மலைகளுக்கு செல்வோரை தடுத்து நிறுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி சீனாவில் சில மத அமைப்புக்கள் உலகம் அழியப் போவதனால் உங்களது சொத்துக்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என மக்களை ஏமாற்றியவர்கள் என 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உலகின் பல பாகங்களிலும் வௌ;வேறு வகையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
மக்கள் கொண்டாட்டம்
எது எவ்வாறான போதும் உலக அழிவு என்பது தற்போதைக்கு இல்லை என்ற நிம்மதிப் பெருமூச்சை பல நாடுகளில் வெளியாகியுள்ளதை அவர்களது கொண்டாட்டங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
இங்கிலாந்தில் சில பகுதிகளில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் மழை பெய்தமையினால் அதனை அண்டிய இன்னும் சில பகுதிகளில் காரிருள் சூழ்ந்ததில் அங்கு சில மணி நேரம் அச்சம் நிலவியுள்ளது. பின்னர் அங்கும் மக்கள் வழமைக்கு திரும்பி தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் கொண்டாடியுள்ளனர்.
இதேபோல உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக மெக்ஸிகோ, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற இடங்களிலும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் கொண்டாட வேண்டி இந்நாள் வதந்திகள் பரப்பியோரை வெட்கிட்கச் செய்துள்ளதுடன் இனி வரப்போகும் இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அச்சுறுத்தி விழிப்படையச் செய்திருக்கிறது இந்த 21.
-அமானுல்லா எம். றிஷாத்