Total Pageviews

Sunday, March 3, 2013

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்


காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதை அண்மைய திருட்டுகள் பல நிரூபிக்கின்றன.

அடுத்தவர் உடைமையை அனுமதியின்றி கையகப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் திருட்டாகவே அமைகிறது. இதில் பொருள் மட்டுமே என்றல்ல. பிறர் வார்த்தைகள் கூட சில நேரங்களில் திருட்டாக அமைந்துவிடலாம். அண்மைக் காலமாக பொருள்சாரா திருட்டுகள் குறிப்பாக இணையத்தில் மிக அதிகமாகவே அதிகரித்துவிட்டது.

இணையவாசிகள் அத்தனை பேரும் தற்போது அதிகம் அதிகமாய் உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒன்றாய் மாறியுள்ளது 'ஹெக்' என்ற சொல். இணைப் பாவனையாளர்கள் பலருக்கும் இது சாதரண சொல்லாக இருந்தாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய 'ஷெல்'லாகவே மாறிவிட்டது.

காரணம் இணையத்தின் ராஜா, மந்திரியாக கூகுள், பேஸ்புக்குடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஈரான், போட்டியாக பல விடயங்களில் களமிறங்க ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்களை குறி வைத்து நடக்கும் 'சைபர் க்ரைம்' தாக்குதல்கள் அளவுக்கதிகமாகவே தற்போது நடைபெற்ற வண்ணமுள்ளது. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 'ஹெக்' செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஹெக் என்பது உரிமையாளர் அனுமதியின்றி அவருடைய செயற்பாடுளில் இயங்குதளம் மற்றும் வலையமைப்பின் குறைபாடுகளைப் பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும். அவை தேவைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்து பல்வேறு வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றில் குறிப்பாக வைட் ஹெட் மற்றும் பிளக் ஹெட் என்ற பிரிவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதில் வைட் ஹெட் என்பது கணனிகளையும் தரவுகளையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுபவை இதன் மூலம் எவ்வாறு ஹெக் செய்யாமல் தடுப்பது என்பது குறித்து ஆராயப்படுவதன் ஹெக்கர்ஸிடமிருந்து தப்பிக்க பிரத்தியேமான மென் பொருட்கள் உருவாக்கப்படும்.

ஆனால் பிளக் ஹெட் என்பது வைட் ஹெட்டுக்கு எதிரானது. தனி நபரோ குழுவோ இணைந்து சுய இலாபத்திற்காக கணனி இயங்குதளம் மற்றும் இணைய வலையமைப்பிலுள்ள ஓட்டைகளில் புகுந்து தங்களுக்கு தேவையான தகவல்களை களவாடுவதை குறிப்பதே பிளக் ஹெட். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. ஹெக்கிங் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ஹெக்கர்ஸ் என அழைக்கப்படும்.

இன்றைய நாட்களில் இணையம் நுழையாத துறையே இல்லை எனலாம். இதனால் ஒவ்வொரு துறையினரது தகவல்களையும் இணையத்தில் களவாட அவற்றின் எதிரிகள் புறப்பட ஆரம்பித்தனர். அது தற்போது ஒரு உயர் எல்லையினைத் தொட்டு சைபர் க்ரைமாக மாறி நாடுகளிடையேயான மோதல்கள் வரை சென்றுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டினதும் அரசியல், பாதுகாப்பு என அனைத்து மட்ட விடயங்களும் இணைத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் அவற்றினை களவாடவென பலர் முயற்சிக்கும் போது அவை நாடுகளுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.

இதில் ஒரு அங்கமே ஜுலியன் அசேன்ஜ். இவர் உலகின் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் முக்கிய விடயங்களை ஹெக் செய்து வெளியிட்டார். ஆனால் இவர் இதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை எனத் தெரிவித்தார். ஆனால் இடைத்தரகர்களாக செயற்பட்டு நாடுகளின் முக்கிய தகவல்களை ஹெக் செய்து அவற்றை விற்பனை செய்யும் ஹெக்கர்ஸும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க அமெரிக்க நிறுவனங்கள் மக்களின் தகவல்களை திருடவும் மேலும் அவர்களை உளவும் பார்க்கவுமே கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற மேலும் பல இணையத்தளங்கள் செயற்படுவதாக பரவலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காவே ஈரான் தனக்கென பிரத்தியேகமான உள்வலையமைப்புகளை (iவெசயநெவ) உருவாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனனில் ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியது. இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.

குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின. இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியிருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.

இவ்வானதொரு நிலையில் தற்போது அமெரிக்கா மீதே சைபர் தாக்ககுதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பென்டகன் கணனிகளையும் ஹெக்கர்ஸ் பதம்பார்ந்தமை அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரமே அமெரிக்காவின் பிரபலமான நிறுவனங்களான நிவ்யோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட், அப்பிள், பேஸ் புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் ஹெக் செய்யப்பட்டமை அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக, இங்குள்ள பிரதான நிறுவனங்களை குறி வைத்து ஹெக் செய்வது சீனா எனவும் இதற்காக அந்நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் பலர் பின்னணியில் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் பல ஹெக் செய்யப்பட்டது உண்மைதான் ஆனால் எதுவிதமான தகவல் திருட்டுகளும் இடம்பெறவில்லை என மாதம் கழிந்த நிலையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் தங்களது 250 ஆயிரம் பயனர்களின் முழுமையான தகவல்களும் களவாடப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தது.

திடீரென இவ்வாறு அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல் அதிகரித்தமையின் பின்னணி பற்றி எதனையும் எவரும் இதுவரையில் கூறவில்லை. மேலும் பாதிக்கப்படுகின்ற அமெரிக்காவும் மிகப்பெரிய அளவில் வெளியுலகிற்கு தெரியும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.

உண்மையில் ஈரான் குற்றம் சுமத்துவது போல தேள் கொட்டுப்பட்ட திருடனாய் அமெரிகக்கா விழி பிதிங்கி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமலில்லை.

-அமானுல்லா எம். றிஷாத்