Total Pageviews

Thursday, March 21, 2013

சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லுகிறது வொயஜர் - 1?



வொயஜர் 1 என்ற ஆளில்லா விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கழித்து சூரியத் தொகுதியை விட்டு வெளியேறியுள்ளதா? இல்லையா? விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1977ஆம் ஆண்டு நாசாவினால் விண்ணுக்கு அனுப்பபட்ட வொயஜர்-1 என்ற ஆளில்லா விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை நன்கு ஆராய்ந்து அரிய பல படங்களையும் அனுப்பி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக வேலையாக வேற்றுக்கிரகவாசிகளை தேடி கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் (இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு) வரை சென்று சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லியுள்ளதாக எட்வட் ஸ்டோன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது  மீண்டும் இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வொயஜர் 1 விண்கலத்தின் நாசா ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கையில், வொயஜர் சூரியத் தொகுதியை விட்டு வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

வொயஜர்-1 விண்கலத்தில் ஒரு இறுவட்டு (CD) உள்ளது. இதில் ஞாயிற்றுத் தொகுதி குறித்த விடயங்களும் ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் படங்கள், 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி மற்றும் பூமியிலுள்ள பல்வேறு வகையான இசை வடிவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வொயேஜரில் மூன்று அணுசக்தி மினகலங்கள் (Batteries) உள்ளதாகவும் இவை 2025ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆகவே அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான கிரகங்களில் எங்கோ ஒரு கிரகத்தில் எம்மை விட அறிவில் மிஞ்சிய அல்லது குறைந்த வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கிறார்கள் என நம்பிக்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தின் மூலம் புவியையும் மனிதர்களையும் அவர்கள் அடையாளம் காண வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


BY: AM. Rizath / Metronews