சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Saturday, December 22, 2012

21ஆம் திகதி...


உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை ஏற்படுத்திக்கொண்டிந்த 21ஆம் திகதி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையின் நாளாக விடிந்திருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

கடந்த சில வாரங்களாகவே அனைத்து நாடுகளிலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி மக்களை ஆட்டிப் படைத்த 21.12.2012 தினமான நேற்று என்னதான் நடந்நது என்றால் வடிவேலுவின் பாணியில் கையை விரித்துக்கொண்டு ஒண்ணுமே இல்லை என்கிறார்கள் அனைவரும்.

எதிர்பார்ப்புக்கள் பலவற்றை ஒன்று சேர்த்து நடந்தேறிய சில சம்பவங்களுடன் முடிச்சுப் போட்டு 21ஆம் திகதி உலக அழிவு என்ற மாயை அனைவரிடத்திலும் மாயா இனத்தவர்களின் பெயரில் தோற்றுவித்ததில் யார் இலாபமடைந்தார்களோ இல்லையோ சில ஊடகங்கள்; தங்களை பிரபல்யப்படுத்திக்கொண்ட வகையில் அவர்களுக்கு இலாபமே.

சாதாரணமாக நடைபெறும் சிறிய சம்பவங்கள் கூட சில வாரங்களாக 21ஆம் திகதியுடன் இணைத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விண்ணிலிருந்து பறக்கும் கற்கள், பூமியதிர்ச்சி, கடல் பாம்புகளின் படையெடுப்பு, மீன் மழை, சிவப்பு மற்றும் மஞ்சள் மழை என அத்தனையும் பூமியில் நிகழவிருக்கும் பாரிய அழிவின் அறிகுறிகள் என்பது போல சித்தரிக்கப்பட்டு மக்களை பயமுறுத்தச் செய்தது.

ஆனால் நடந்தேறிய அத்தனை சம்பவங்களும் சாதாரணமானவையே அன்றி அவை எதுவும் அசாதாரண நிகழ்வுகள் அல்ல.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் அனைத்து பாகங்களிலும் நடைபெறும் சிறிய விடயங்களைக் கூட தெரிந்துகொள்ளும் அளவிற்கு தொடர்பாடல் வளர்ந்து உச்சத்தை அடைந்திருப்பதனால் நடைபெறும் சம்பவங்களை இலகுவில் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறதே தவிர அவை எதுவும் விசித்திரமாகவோ புதுமையாகவோ நடைபெறுகின்ற சம்பவங்கள் அல்ல.

இதுவரையிலான தகவல்களின் படி உலகின் எந்த பாகத்திலும் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பதை இந்த செய்தியினை வாசித்துக்கொண்டிருக்கும் போதே உணர முடிகின்றதல்லவா?

பெரும்பாலானவர்களின் மனதில் வேரூன்றியிருந்த உலக அழிவை பொய்யாக்கி மாயன்களுக்கு புதிய நாட்காட்டியை உருவாக்க வேண்டிய நாளே இது என்பதை உண்மையாக்கிய நாளாக மாறியிருக்கின்றது இந்த 21ஆம் திகதி.

3 நாள் தொடர்ச்சியான இருள்

நிலைமை இவ்வாறிருக்க புதிதாகவொரு கட்டுக்கதையை மீண்டும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் சிலர். அதாவது துருவமாற்றத்தின் காரணமாக பூமியில் அசாதாரண சுழற்சி ஏற்பட்டு தொடர்ச்சியாக இம்மாதம் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் புவியை இருள் சூழ்ந்துகொள்ளும் என கிளப்பிவிட்டிருக்கிறது சில மத அமைப்புக்கள்.

இப்போதுதான் உலக அழிவு பீதியிலிருந்து மக்கள் விடுபட்டிருக்கிறார்கள் அதற்கும் மீண்டும் ஒரு புரளியா என அலுத்துக்கொள்ள வேண்டியதொரு சமாச்சரமே அன்றி வேறேதுமில்லை என்று நம்பிக்கை தருகிறார் நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், உலகம் அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும் தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.

அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி.

இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களிலும் எதுவித உண்மையும் இல்லை. இது தொடர்பாக நாசா கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானது. எனவே மக்கள் இது தொடர்பில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மாயா இனத்தவரின் கொண்டாட்டங்கள்

உலக அழிவுக்கு பிரதான ஆதாரமாக மாயன் நாட்காட்டியே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால் மாயா இனத்தவரோ 21ஆம் திகதியை வெகு சிறப்பாக தங்களது பாரம்பரிய நிகழ்வுகளுடன் கொண்டாடி மகிழ்ந்து மாயன் நாட்காட்டிக்கு விடைகொடுத்துள்ளனர்.

400 வருட காலம் நிறைவடைந்து புது யுகம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டே மாயா இனத்தவர்களின் பாரம்பரிய வழிமுறையில் தங்களது மகிழ்ச்சியை ஆடிப்பாடி வெளிப்படுத்தியுள்ளனர்.

பேர்காஜ் கிராமத்தில் கூடியோருக்கு ஏமாற்றம்

இதேவேளை மாயன் நாட்காட்டியின் படி உலகம் அழியப்போவதனை நம்பி பிரான்ஸிலுள்ள பேர்காஜ் கிராமத்தில் கூடியிருந்த மக்கள் பலத்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து தங்களது சொந்த இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் அழியும் போது பேர்காஜ் கிராமத்திற்கு வேற்றுக்கிரக வாசிகளால் விண்கலம் அனுப்பப்படும் அதில் ஏறியோர் உயிர் பிழைக்கலாம் என்ற வதந்தியால் அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவ்வூருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பெரும்பாலான மக்கள் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அங்கு சென்றுள்ளனர். இறுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதனால் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கைகொட்டி மகிழ்ந்துள்ளனர்.

ஆனாலும் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அமைந்த இந்த உலக அழிவு சர்ச்சையில் சில உயிர்கள் பலியானதுடன் சிலர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டதும் வருத்தமே.

மாயன் நாட்டியின் படி உலகம் அழிவது உறுதி எனவே அதற்கு முதல் கூட்டாக இறந்துவிடலாம் என சமூக வலைத்தளங்களில் வெளியான போலி வார்த்தைகளை நம்பி ஆர்ஜென்டீனாவில் சுமார் 150 பேர் கூட்டாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

இதற்காக மாயன் கோவில் அமைந்துள்ள மலைகளின் உச்சியை தேர்ந்தெடுத்து ஆங்காங்கே படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆர்ஜென்டீனா அரசு பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு பாதுகாப்புப் படையின் உதவியுடன் மலைகளுக்கு செல்வோரை தடுத்து நிறுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி சீனாவில் சில மத அமைப்புக்கள் உலகம் அழியப் போவதனால் உங்களது சொத்துக்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என மக்களை ஏமாற்றியவர்கள் என 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உலகின் பல பாகங்களிலும் வௌ;வேறு வகையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

மக்கள் கொண்டாட்டம்

எது எவ்வாறான போதும் உலக அழிவு என்பது தற்போதைக்கு இல்லை என்ற நிம்மதிப் பெருமூச்சை பல நாடுகளில் வெளியாகியுள்ளதை அவர்களது கொண்டாட்டங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

இங்கிலாந்தில் சில பகுதிகளில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் மழை பெய்தமையினால் அதனை அண்டிய இன்னும் சில பகுதிகளில் காரிருள் சூழ்ந்ததில் அங்கு சில மணி நேரம் அச்சம் நிலவியுள்ளது. பின்னர் அங்கும் மக்கள் வழமைக்கு திரும்பி தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் கொண்டாடியுள்ளனர்.

இதேபோல உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக மெக்ஸிகோ, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற இடங்களிலும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் கொண்டாட வேண்டி இந்நாள் வதந்திகள் பரப்பியோரை வெட்கிட்கச் செய்துள்ளதுடன் இனி வரப்போகும் இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அச்சுறுத்தி விழிப்படையச் செய்திருக்கிறது இந்த 21.

-அமானுல்லா எம். றிஷாத்



Monday, December 17, 2012

உலக அழிவு தொடர்பில் அச்சத்தில் அனைவருமிருக்க, சாதாரணமாகப் பொழுதைக் கழிக்கும் மாயா இனத்தவர்கள்!

வீரகேசரி இணையத்தளத்திலிருந்து சண்முகராஜா கவிந்தனிடமிருந்து பெறப்பட்ட செய்தி இது

எதிர்வரும் 21 ஆம் திகதி உலகம் அழியுமா? அழியாதா? என்ற விடயம் இவ்வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஏன் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனை நினைத்துப் பலர் அச்சம்கொண்டுள்ளதுடன், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் அழியும் என்பதற்குப் பல விசித்திரமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றனஇ வரலாற்றுக் குறிப்புகள் அலசி ஆராயப்படுகின்றனஇ நாம் முன்னர் அறிந்திராத பல கதைகள் சொல்லப்படுகின்றன.

இவற்றில் முக்கியமானதொன்று மாயன் நாட்காட்டி பற்றியதாகும். அதாவது 'மாயா' நாகரீகத்தின் வழித் தோன்றிய மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த மக்களின் நாட்குறிப்பானது நாம் பாவிக்கும் நாட்காட்டியின் 2012-12-21 திகதியுடன் முடிவுக்கு வருகிறது என்பதாகும்.

இதன் முடிவின் பின் மாயன்களின் படைப்புக்கும் யுத்தத்துக்கும் (God of war and creation) பொறுப்பான கடவுளான போலோன் யோக்தே (BOLON YOKTH) இன் வருகை இடம்பெறும் என மாயன்கள் கணித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதிலும் சில வரலாற்று சான்றுகள்  பூதாகரமாக்கப்பட்டதால் உலகம் அழியப்போகின்றது என்ற எண்ணமானது பலரின் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.

சாதாரண விதையாக இருந்த பய உணர்வானது தற்போது வேரூன்றி விருட்சமாக மாறியுள்ளது. 

பலர் இன்று இவ்விடயத்தினை எண்ணி அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் மெக்ஸிக்கோவில் வசித்து வரும் சுமார் 800இ000 மாயா  இனத்தைச் சேர்ந்தவர்கள் தமது பொழுதினை எவ்வித பதற்றமும் இன்றிக் கழித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பப்பகுதியில் வாழும் மக்களும் தமது அன்றாடக் கடமைகளை எவ்வித பதற்றமும் இன்றி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21.12.2012 இ அதாவது நீண்ட மாயன் நாட்காட்டியின் 5இ125 ஆவது ஆண்டு சுழற்சி ஏற்படும் தினம் தொடர்பில்  மாயா இனத்தவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது அவர்கள் இது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம்.

உலகம் அழியப்போவது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதெனவும்இ கடந்த 2006 ஆம் ஆண்டும் '6-6-6' (June 6. 2006) இன் போதும் பலர் இதனையே தெரிவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Friday, December 14, 2012

நிபிறு போனாலென்ன...? அஸ்டரொய்ட் வருதே!


உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 22ஆம் திகதி காலையில் விழித்தெழும் போது அந்த வதந்திகள் எல்லாம் கனவாய் கலைந்துவிடும்.

21ஆம் திகதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இருப்பினும் இதுவரையில் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு கோளும் தென்படவில்லை எனவே நிச்சயம் நிபிறு என்பதெல்லாம் நிச்சயிக்கத்தக்க வதந்திகளே என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூவியை நோக்கி வரும் எரிகற்கள், கோள்கள், வால்நட்சத்திரங்ளை கண்டுபிடிக்கப்பிடிக்க முடியுமென்றால் அண்மையில் பூமியை தாக்கவிருக்கும் நிபிறு மட்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விடயமா? என்று எதிர்க் கேள்வி எழுப்பிகிறார்கள் ஆய்வாளர்கள்.

சரி அவ்வாறெனில் டிசம்பரில் ஏதாவது அசம்பாவிதங்கள் பூமியில் இடம்பெறுமா என்றால் நிச்சயமாக இல்லை என அடித்துக் கூறுகிறது நாசா. நிபிறு பிரளயம் மூலம் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆசாமிகள் பரப்பாத உண்மையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. 

அதாவது பிறக்கவிருக்கும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி பூமியை தொடாத குறையாக அஸ்டரொய்ட் ஒன்று மிக நெருக்கமாக புவியை கடந்து செல்லவிருக்கிறது. ஆனால் இந்த அஸ்டரொய்ட் புவியுடன் நிச்சயமாக மோதாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் புவியைக் கடந்து செல்வது சாதாரண விடயம்தான் என்றாலும் கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டரொய்ட்டும் இப்போது வரவுள்ள அஸ்ட்ரொய்டினை போன்று மிக நெருக்கமாக கடந்து சென்றதில்லை என்பதுவே அசாதாரணம். 

ஒவ்வொரு மாதமும் பல அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. நடப்பு மாதத்தில் கூட 3 அஸ்டரொய்ட் புவியை கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் அஸ்டரொய்ட்டுக்கள் என்பது கோள்களிலிருந்து பல்வேறு காரணங்களால் பிளவடைந்து அண்டவெளியில் சுற்றித் திரிகின்ற கற்கள் போன்றவொரு அமைப்பே. சில வேளைகளில் புவியின் ஈர்ப்புசக்தியினால் புவியை நோக்கி வரவும் பிளவடைவதற்கும் சாத்தியமுண்டு. 

இவ்வாறு உடைபடும் கோள்கள் ஒரு சுற்று பாதையில் சுற்றி வரும் அப்போது புவிக்கு அண்மையாகவோ தூரமாகவோ அமையும், சில வேளைகளில் பூமியில் வந்து விழும். இவை பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. 

வரும் பெப்ரவரி 15ஆம் திகதி 2 அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து செல்லவுள்ளது. இதில் 1999 YK 15 எனப்பெயரிடப்பட்ட ஒன்று புவியிலிருந்து 2 கோடி கிலோ மீற்றர் தொலைவில் செல்லும் அதேவேளை, 2012 DA 14 என பெயரிடப்பட்டுள்ள 48 மீற்றர் நீளமான மற்றய அஸ்டரொய்ட் ஒரு கட்டத்தில் புவிக்கு அண்மையில் அதாவது 24 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் பயணிக்கவுள்ளது. இதுவே சற்று பீதியை கிளப்புகிறது.

24 ஆயிரம் கிலோ மீற்றர் என்பது அதிக தூரமாச்சே! மேலும் இதன் அளவினை பூமியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதன் நீளம் வெறும் 48 மீற்றர்களே எனவே இதனால் என்ன பாத்திப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என எமக்கு தோன்றினாலும் விண்வெளி அலகினைப் பொறுத்தவரையில் இது மிக மிக குறைந்த தூரம். அத்துடன் புவியிலிருந்து அண்ணளவாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் ஏராளமான இணைச்சுற்று செயற்கைக் கோள்கள் (Geostationary satellites) வலம்வருகிறது. 

இவ்வாறு வலம் வரும் கோள்களுக்கும் புவிக்குமிடையில் குறித்த அஸ்டரொய்ட் பயணிக்கும் போது அதன் வேகம் மணிக்கு ஏறத்தாள 22 ஆயிரம் கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் இதன்போது மோதல்கள் இடம்பெற்றால் பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என அச்சப்படுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் ஒரு வேளை இந்த அஸ்டரொய்ட் பூமியுடன் மோதுண்டால்... உண்மையில் அது மோதலாக இருக்காது அதாவது ஒரு குட்டையில் கூழாங் கல்லொன்று விழுவதற்கு ஒரு மனிதன் குதிப்பதற்கு இடையிலான வித்தியாசத்தை போன்றதே அது. எனவே இந்த அஸ்டரொய்ட்டின் பருமனின் அடிப்படையில் நோக்கினால் பூமியில் விழுந்தால் என்னவாகும் என்பதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஆனாலும் இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட் பயணிக்கும் வேகம் பல்லாயிரக் கணக்காக மீட்டராக இருக்கும் மேலும் இதன் நிறை சுமார் 5 இலட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் நிலப்பகுதியில் விழுந்தால் ஒரு கிராமம் அழியலாம் தவிர வேறு எந்த பாதிப்பும் வராது என எதிர்வுகூறப்படுகிறது.

இதுவரையில் 1353 அஸ்டரொய்ட்டுகளை பற்றிய முழுமையான தகவல்களை தன்வசம் வைத்துள்ளது நாசா. இருப்பினும் பெப்ரவரியில் வரவிருக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்கள் தொடர்பாக ஸ்பெயின் நாட்டிலுள்ள விண்வெளி ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமாக உள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என சும்மாவா சொன்னார்கள் என்பது போல அமைந்திருக்கிறது இந்த சம்பவம்.

பூமியைப் போலவே, இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட்டும் சூரியனைச் சுற்றிவருகிறது. இதற்கு முறையே 365.24 நாட்களும் 365.24 நாட்களையும் எடுத்துக்கொள்கிறது. மேலும் இவற்றின் சுற்றுப்பாதைகளும் அருகருகே உள்ளது.

இதனால் ஆண்டுக்கு இருமுறை புவியை கடந்து செல்லுகின்றது. கடந்த முறை புவியை கடந்து செல்லும் போது பூமிக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்குமிடையிலான தூரம் சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் கிலோ மீட்டராக இருந்தது. 

இவ்வாறு பல்லாண்டு காலமாக புவியைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டானது இப்போது பூமியில் வந்து விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. மேலும் இந்த அஸ்டரொய்ட்டினால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அடித்துக் கூறுகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

2012 DA 144 அஸ்டரொய்ட்டு பூமியை கடந்து செல்லும் காட்சியைக் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தில் ஒன்றுகூடி காண்பத்றகு ஆயத்தமாகவுள்ளனர். இந்த அஸ்டரொய்ட்டினை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. இதனால் சக்திமிக்க பைனகுலர்ஸ் மற்றும் டெலஸ்கோப்பினூடாகவே காண முடியும் எனக் கூறப்படுகிறது.

தொடரும் உலக அழிவு தொடர்பான பீதிகள்... 

முடியுமானால் பார்த்து ரசிக்க வேண்டிய இந்த அரிய காட்சியை உலக அழிவு என்ற வதந்தியுடன் சேர்த்து பீதியை கிளப்ப இப்போதே சிலர் ஆயத்தமாகிவிட்டார்கள். 

இவ்வாறனவர்களினால் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இன்னும் சில ஐரோப்பா நாடுகளிலும் மக்களிடையே வீணான அச்சத்தினால் சில மூடநம்பிக்கைககள் தளைத்தோங்க ஆரம்பித்துள்ளது. 

குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் தெற்கு பிரதேசத்தில் உள்ள பேர்காஜ் எனும் ஊரிலுள்ள மலை ஒன்றின் மேல் வேற்றுக் கிரகவாசிகளினால் ஒரு விண்கலம் அனுப்படும் அதில் இடம் கிடைக்கும் மனிதர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கிடக்கின்றது.

இதனால் அந்த ஊரிற்கு ஏராளமானவர்கள் கடந்த சில வாரங்களாக குடிபெயர ஆரம்பித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வூருக்குள் வெளியாட்களை அனுமதிப்பதனை தவிர்க்க பாதுகாப்புப் படையினரை குவித்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம். இதேபோல இங்கிலாந்திலும் ஒரு இடத்தில் மக்கள் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் சில பாகங்களிலும் பறக்கும் கற்கள் 

வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள நம்பிக்கைகள் எம்மவர்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதனை தவிர்க்க முடியவில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கம்பஹா, அநுராதபுரம் மற்றும் சில பகுதிகளில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட் போன்ற வகையான கற்கள் வானத்தில் தென்பட்டு வருகின்றது.

ஆனாலும் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இது போதாதா? வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவலாய் சிக்கியுள்ளது இந்த பறக்கும் கற்கள். தற்போது இவர்கள் தங்களது விருப்பத்திற்கு புரளியை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே அவ்வாறானவர்கள் போலி வார்த்தைகளை நம்பி அவற்றை ஏனையோரிடமும் பரவச்செய்து 22ஆம் திகதி விடியும் இனிய பொழுதில் வெட்கித்து நிற்பதை தவிர்க்க முயற்சிப்போம்!

-அமானுல்லா எம். றிஷாத் https://www.facebook.com/rizathstar

இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள எனது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரையே இது  "நிபிறு போனாலென்ன...? அஸ்டரொய்ட் வருதே!"


Thursday, November 15, 2012

டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம்... உலகம் அழியப்போகிறதா? (முழு விபரம்)


உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்;.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.

பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.

இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.

இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.

உண்மையில் நிபிறு பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.

சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.

இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2ஃ3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே 'நிபிறு பிரளயம்' எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.

இம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப்போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னை தானே ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக்கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும் ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.

இதற்காக பல நம்பிக்கைக்குரிய ஆதரங்களையும் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக்காட்டுகின்றது. எழுத்தாளரும், வானியல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ரடோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது.

மேலும் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாவது, துருவப் பெயர்ச்சி இடம்பெறும் போது நாம் பாரியளவில் பாதிக்கப்படுவோம். இவையெல்லாம் இந்த நிபிறு பிரளயத்தையே குறிக்கிறது எனக் கூறும் அதே வேளை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மிகப் பழைமை வாய்ந்த நாட்காட்டிகளில் ஒன்றான மாயன் 2012.12.21 அன்றுடன் முடிவடைகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் பலவற்றினை துல்லியமா பல ஆண்டுகளுக்கு முன்னரே மாயன்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கல்வெட்டுக்கள், சித்திரங்கள் என்பவற்றினூடாக விட்டுச்சென்றுள்ளனர். குறிப்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் அழிந்த பின்னர் புதியதோர் உயிரினம் தோன்றும், உயிரின் தொடர்ச்சியை சித்தரிக்கும் வகையிலமைந்துள்ள சித்திரங்கள் அதிசயிக்கத்தகதாகவே உள்ளது. இவ்வாறு விஞ்ஞானத்தை வென்ற மாயன்களின் கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்பதே.

மேலும் ஹிப்ரு பைபிளும் 2012இல் உலகில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றது. இது போல இன்னும் ஏராளமான குறிப்புக்கள் 2012ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் அழிவுகளை மத நம்பிக்கைகள் சார்ந்தும் சாராமலும் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார்கள்.

இவை தவிர 3600 வருடங்களுக்கு முன்னர் நிபிறு பிரளத்தினால் பாதிக்கப்பட்டு எச்சங்களாகிய மனித இனத்தினால் அடுத்துவரும் சந்ததிக்கு விட்டுசென்ற சுவடுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பல்வேறு அம்சங்கள் மத நம்பிக்கைக்குரிய எழுத்துருக்களாக மாற்றம் பெற்று இன்றுவரை அழியாது பேணப்படுகிறதாம்.

மேலும் நாசாவானது இந்த நிபிறு பிரளயம் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகிவிட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்காக நாசா ரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத்தொகுதியிலுள்ள 9 கோள்களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும் போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.

குறிப்பாக தப்பிச்செல்லதவற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு செய்துள்ளமைக்கான காரணம் என்னவெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள் இதுவாம். அத்துடன் பூவியிலிருந்து இக்கோள் தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம்.

குறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை கொள்வன செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர்.

மேலும் இந்த கோளினை கண்டுபிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரிதோர் இலக்கினை நோக்காக கொண்டு ஐசுயுளு (ஐகெசயசநன யளவசழழெஅiஉயட ளயவநடடவைந) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக  'Pடயநெவ ஓ ஃ(நிபிறு)' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

பூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில் ஸ்டோன்ஹென்ஜ்ஃஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்தமாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவமாற்றமோ பூமி தன்னைத் தனே ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெற மாhட்டாது என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கு 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.

2009ஆம் ஆண்டளவில் சூரியனைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக்குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று குறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம்பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங்களிலும் தென்பட்டுள்ளது. ஆனால் இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அப்படியானால் 2012ஆம் ஆண்டில் பூமியில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமா? என்றால், ஆபத்து வரும் என்று யார் சொன்னது, வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லுகிறோம் என்ற பாணியிலேயே விடையளிக்கின்றனர்.

வசந்த காலம், கோடை காலம், மாரி காலம் என மாறி மாறி வருடத்தினை அழகுபடுத்த பருவங்கள் வந்து போவதைப் போல டிசம்பர் மாதம் வதந்திகாலமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருவதை கடந்த சில வருடங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

உண்மையில் டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதி மாதமே அன்றி அது உலகத்தின் இறுதி மாதமல்ல என்பதை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜனவரியும் அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பாணியில் டிசம்பர் மாதம் ஆரம்பமாவதுதான் தாமதம் வதந்திகள் முந்திங்கொள்ளும். அதுவும் ஆங்கிலப்படங்களின் வருவது போல உலகம் அழியப்போகிறது... எம்மை நோக்கி பெரிய ஆபத்து வருகிறது என்று கிளப்பிவிட ஒரு கும்பல் எப்போதும் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதை நீங்களும் ஒரு நாள் உணர்ந்திருப்பீர்கள். ஒரு தடவையே சுனாமி எம்மைத் தாக்கியது ஆனால் ஓராயிரம் தடவைகள் எம்மை ஓட விட்ட கும்பலும் இதுவன்றோ.

இந்த வகையில் இம்முறையும் அந்த கும்பல் மக்களிடையே பீதியை கிளப்ப மறக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் சூரியன் 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம், டிசம்பர் 21ஆம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப்போகின்றது என பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

ஆனாலும் 2003ஆம் ஆண்டிலிருந்தே 2012ஆம் குறிவைத்து ஏராளமான தகவல்கள், பூமியில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உரைத்து வருகின்றது. அவை அனைத்தும் மத நம்பிக்கைகளுடன் தொடர்புபட்ட அதேவேளை விஞ்ஞானத்துடனும் ஒத்துப்போவதனால் இவை எதனையும் அத்தனை இலகுவில் இம்முறை வதந்திகள் என்ற பார்வையில் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை.

உண்மை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்கள் இல்லை. டிசம்பர் 21 எம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவரை தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்!

-அமானுல்லா எம். றிஷாத் https://www.facebook.com/rizathstar

இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள எனது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரையே இது  "டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம்... உலகம் அழியப்போகிறதா?"

இந்த பதிவு இடம்பெற்றுள்ள வீரகேசரி இணையத்தள முகவரி
http://www.virakesari.lk/article/feature.php?vid=51