Total Pageviews

Friday, November 9, 2012

துப்பாக்கி எதிர் போடா போடி... கள்ளத்துப்பாக்கி அவுட் : தீபாவளி படங்கள் ஒரு பார்வை


சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியே தமிழ் சினிமாவின் வசந்த காலம் என்னுமளவிற்கு ஏராளமான படங்கள் வெளிவந்து சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமாடச் செய்துவிடும்.

பெரிய நடிகர்களின் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள், அறிமுக நடிகர்களின் படங்கள் என ஏராளமான படங்கள் வெளியாகி தீபாவளி பட்டாசாக வெடிக்கும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள், அதிகளவான திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளுவதனால் 3 தொடக்கம் 5 படங்களே வெளியானது. பின்னர் அதுவும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2 அல்லது 3 படங்களாகவும் குறைந்தது. இதனால் தீபாவளியும் படங்களின்றி களை இழந்தது.

இந்நிலையில் இம்முறை தீபாவளிக்கு பெரிய, சிறிய பட்ஜெட் படங்கள் என 10 படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை 4 மட்டுமே தீபாவளி பந்தயத்தில் களமிறங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிவந்தே தீருவேன் என்றிருந்த கள்ளத்துப்பாக்கிக்கு தீபாவளியானது அனுமதிப்பத்திரம் கொடுக்க மறுத்துவிட்டது.

விஜயின் துப்பாக்கி, சிம்புவின் போடா போடி, தங்கர் பச்சானின் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி மற்றும் காசிக்குப்பம் ஆகிய படங்களே தீபாவளி ரேஸில் ஓட தயாராகியுள்ள படங்கள். இதில் விஜய் மற்றும் சிம்புவின் படங்களிடையே ஒரு போட்டி காணப்படும். மற்றைய இரண்டு படங்களும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் போட்டியை ஏற்படுத்தலாம்.

ஏனெனில் நட்சத்திர அந்தஸ்த்தினை விட படத்தின் கதை, திரைக்கதையே படங்களின் வெற்றியை தீர்மானிப்பதாக அமைகின்றது. இதனை இவ்வாண்டில் இதுவரையில் வெளியான நட்சத்திர அந்தஸ்த்து நடிகர்களின் மெகா பட்ஜெட் படங்கள் எதிர்மறை விமர்சனங்களால் பொக்ஸ் ஒபிஸில் குப்புற விழுந்து நிரூபித்துள்ளது.

மேலும் பெரிய நடிகர்களின் படங்களை இந்தியாவிற்கு வெளியில் வி.ஐ.பி ஷோ என்ற பெயரில் சில நாடுகளில் ஒரு நாள் முன்னரே படத்தை வெளியிடுவதனால் அங்கிருந்து வெளியாகும் விமர்சனங்களும் படத்தின் வெற்றியில் தாக்கம் செலுத்துவதாய் அமைந்தது.

இம்முறை இவற்றையெல்லாம் மீறி துப்பாக்கி மற்றும் போடா போடி திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே தமிழ் திரையுலகினரதும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களாக உள்ளதை சமூக வலைத்தளங்களினூடாக அறிய முடிகின்றது.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரின் படங்கள் மோதிக்கொள்வதற்கு பதில் இம்முறை விஜயும் சிம்புவும் மோதிக்கொள்ளப்போகிறார்கள்.

இனி தீபாவளிக்கு  வெளிவரவுள்ள படங்களை பார்க்கையில்,

துப்பாக்கி 
இந்த தீபாவளிக்கு சரவெடியாய் அமையுமென எதிர்பார்க்கப்பட்டுள்ள படம் இதுவே. விஜய், விஜயின் சின்ன மணிரத்தினம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தேசிய விருது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தேசிய விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ் என நம்பிக்கையளிக்கும் கூட்டணி.

படத்தின் பாடல்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் படத்தின் ட்ரெய்லர் விஜய் ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலமைந்துள்ளது. இதனால் படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு மற்றும் தீபாவளி விடுமுறை என்பவற்றால் படத்தின் ஆரம்பம் அமர்களமாய் இருக்கும்.

ஆரம்பத்தில் வெளியாகும் விமர்சனங்கள் ஆறுதலளித்தால் விஜய்க்கு மற்றுமொரு வெற்றிப்பட வரிசையில் இதுவும் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக விஜயின் ரசிகர்கள் பட்டாளமும் படத்திற்கு கைகொடுக்கும்.

இருப்பினும் படம் சற்று சொதப்பலாக அமைந்தால், படத்தினை கவிழ்க்க சமூகவலைத்தளத்திலுள்ள விஜய் ஹேட்டர்ஸ் தயாராகிவிடுவார்கள். கள்ளத்துப்பாக்கியிடம் தப்பித்தாலும் இவர்களிடம் தப்பிப்பது சாதாரணமான விடயமல்ல. தணிக்கை குழுவின் சான்றிதழை வைத்துக்கொண்டே வழக்கமான தங்கச்சி மரணம், படம் சற்று நீளம் (2மணி 50நிமி) அது இதுவென்று இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.

போடா போடி 
கடந்த 4 வருடங்களாக கிடப்பிலிருந்த படம் திடீரென தீபாவளி பந்தயத்தில் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது. சிம்புவுடன் அறிமுக நாயகியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி இணைந்து நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பொறுப்பேற்க தமன் இசை வழங்கியுள்ளார்.

ஆரம்பத்திலிந்தே இப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்புக்கள் இருந்தது. ஆனாலும் படம் வரூம் ஆனா வராது பாணியில் இழுத்தடிக்கப்பட்டு வந்தமையினால் ரசிகர்கள் படத்தினை சில காலம் மறந்தே விட்டார்கள். இருப்பினும் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டுக்குப் பின்னர் மீண்டும் எதிர்பார்ப்பினை தூண்டிவிட்டது.

மேலும் இந்த தீபாவளிக்கு துப்பாக்கி போட்டியை ஏற்படுத்தக்கூடிய படம் இதுவே. எனவே துப்பாக்கியை விட சற்றே சிறப்பாக இருந்தால் சிம்புவுக்கு ஒஸ்தியாக இருக்கும். இல்லையேல் ஒஸ்தி பட வரிசையில் இணைந்துகொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

அம்மாவின் கைப் பேசி
தங்கர் பச்சானி இயக்கத்தில் சாந்தனு, இனியா மற்றும் தங்கர் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம். தீபாவளிக்கு முதலில் தயாரான திரைப்படம்.

தங்கர்பச்சானின் வழக்கமான படம் என ட்ரெய்லர் காட்டிவிட்டது. இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் கதை என நிறைய பொறுப்புக்களை தங்கர் பச்சான் சுமக்க ரோஹித் குல்கர்னி இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். சாந்தனுவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டிய படமாக இருக்கிறது.

காசிக்குப்பம் 
துப்பாக்கி மற்றும் போடா போடி விடுவகின்ற ஓரிரு திரையரங்குளில் வெளியாகவுள்ள படம். நரேன் மற்றும் லிவிங்ஸ்டன் தவிர எனையவர்கள் புதுமுகங்கள். அருண் படத்தினை இயக்கியுள்ளார். கிளுகிளுப்பான போஸ்டர்கள் மட்டுமே படத்தினை இதுவரை கவனிக்கவைத்துள்ளது.

இந்த 4 படங்கள் தவிர தீபாவளி ரேஸிலிருந்து ஒதுங்கிக்கொண்ட சில படங்கள் தீபாவளியின் பின்னர் ஒரு வாரம் கழித்து பந்தயத்தில் இணைந்துகொள்ளவுள்ளது.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை முன்கூட்டியே வொண்டர்ஸ் தெரிவித்துக்கொள்கின்றது.

- AM. Rizath