பாலா முதன் முறையாக இளையராஜாவின் குடும்பத்திலிருந்து இசையை தவிர்த்திருக்கிறார். பரதேசிக்காக ஜீ.வீ. பிரகாஷ் வழங்கியுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை தற்போது கொலிவூட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்ற வண்ணமுள்ளதை சமூகவலைத்தளங்கள் காண்பிக்கிறது.
வெளியாகியுள்ள ட்ரெய்லர் இது முழுக்க முழுக்க பாலாவின் திரைப்படம் என்பதை காட்சிக்கு காட்சி பிரதிபலிப்பதுடன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.
ஆனால் வழக்கம் போல அனைவரையும் அழுக்காக்கி அழகுபார்த்திருக்கிறார் பாலா. வேதிகா உடையை கழுவாமலே படம் முடியும் வரையில் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியானது.
உடையை துவைச்சிங்க மவனே நான் உங்களை தொவச்செடுப்பன் என்ற பாலாவின் கட்டளை வேதிக்காவுக்கு மட்டுமல்ல என்பது ட்ரெய்லர் பார்க்கும் போது புரிகிறது.
பஞ்சம் பொளைக்க ஒரு பயணம் என்பதை எழுத்தில் காட்டினாலும் ஒளிப்பதிவோ நிறத்தில் பஞ்சத்தை மிக அருமையாக காட்டுகிறது. பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி பரதேசியாக இருந்தாலும் சரி பாலாவின் படத்தில் நடிச்சே ஆகணும் என்பது விதி.
அதர்வாவின் நடிப்பில் வித்தியாசம் தெரிகிறது. முரளி உயிரோடு இருந்தால் பெருமைகொள்ளும் தருணம் இதுவே.
வழமை போல ஆனால் புதியோர் களத்தில் மற்றுமொரு அழுக்காச்சி காவியம் படைத்திருக்கிறார் பாலா. ஆனாலும் படம் ரசிகர்களை கவரும் என நம்பிக்கை தருகிறது ட்ரெய்லர். ஏனெனில் ட்ரெய்லருக்கு அத்தனை சிறப்பான வரவேற்பினை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
'எனக்கு போர்த்துற சால்வைய குளிர்ல நடுங்குற பிச்சக்காரனுக்கு போத்தலாம், அவனுக்கு பிரயோஜனமா இருக்கும்' என பாடல்கள் வெளியீட்டின் போது கூறியிருக்கிறார் பாலா. இதுவே அவரது படங்களில் பிம்பங்களாக வெளிப்படும் அதில் ஒன்றே இந்த பரதேசி என்பதை உணர்த்தும் அந்த ட்ரெய்லர் இதோ...