நட்சத்திரங்கள் - விஜய், காஜல் ஆகர்வால், ஜெயராம், சத்யன்
கதை, திரைக்கதை, இயக்கம் - ஏ.ஆர். முருகதாஸ்
இசை - ஹரீஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத்
ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தீபாவளிக்கு வெளியாகி விஜய் ரசிகர்களுடன் சேர்த்து பொதுவான ரசிகர்களிடையேயும் கொஞ்சம் சத்தமாகவே வெடித்திருக்கும் திரைப்படமே இந்த துப்பாக்கி.
இந்தியன் ஆமியில் வேலை செய்யும் விஜய் விடுமுறையில் மும்பை வருகிறார். இந்நிலையில் விஜயின் கண்முன்னே குண்டு வெடித்து பலர் பலியாகின்றனர். இதற்கு பின்புலத்தில் யார் யார் இருக்கின்றனர் என்பதை தெரிந்துகொண்டு துப்பாக்கி கொண்டு அழிப்பதே படத்தின் கதை.
சாதாக் கதையாக இருந்தாலும் மெகா கதையாக திரையில் காட்டி வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். இதற்கு பக்கபலமாக உழைத்திருக்கிறார்கள் நாயகன் விஜய், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், ஹரீஸ் ஜெயராஜ் ஆகியோர்.
படம் ஆரம்பித்து, முதல் அரை மணித்தியாலங்கள் வரை விஜயின் வழக்கமான கொமர்ஷல் திரைப்படங்களின் வரிசையில் அடுத்தவொரு படம் என்று தோன்றினாலும் பின்னர் படத்தின் கதை நகரும் விதம் அசத்தல்.
முதல் பாதியில் விஜயின் முன்னைய படங்களில் இடம்பெற்றது போல அறிமுகக் காட்சி மற்றும் பாடல், எரிச்சலூட்டும் நகைச்சுவைகளுடன் படம் மெதுவாக நகருவதை இடைவேளைக்கு சற்று முன்னர் உணரமுடிகிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் இவற்றையெல்லாம் தூக்கியெறியும் வகையில் திரைக்கதை நகர்த்தி இயக்குனராக ஏ.ஆர். முருகதாஸ் வெற்றிபெற நடிகராக விஜயும் வெற்றி பெற்று நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்லதொரு கொமர்ஷல் படத்தினை பார்த்த திருப்தியை ஏற்படுத்துகின்றார்கள்.
எந்தப்படத்திலும் இல்லாதவாறு இதில் விஜய்யை ஸ்டைலிஸாக காட்டியிருக்கிருக்கிறார்கள். கொஸ்டியூம் டிசைனர் தன்பங்கிற்கு சிறப்பான உடைகளை கொடுத்திருக்கிறார். கோட் சூட் போட்டு விஜய் வரும் காட்சியில் திரையரங்கே கைதட்டல்களால் அதிருவது வித்தியாசமான விஜயை திரையில் காண துடித்த ரசிகளிகளின் ஏக்கத்தை காட்டுகிறது.
விஜய் சண்டைக்காட்சிகளில் வித்தியாசமான உடலசைவுகளால் கொள்ளைகொள்கிறார். ஏனைய காட்சிகளிலும் இயக்குனருக்கு தேவையானதை செய்து தரமான படத்திற்காய் உழைத்து தன்னை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அடித்தளமிட்டுள்ளார். மிலிட்டரி மேனாகவும் தன்னைப் பொருந்தச்செய்திருக்கிறார் விஜய். ஆனாலும் அவரால் அழவைக்க வேண்டிய இடத்தில் ரசிகர்களின் கூச்சலினை குறைக்கச் செய்யவே முடிகிறது.
இயக்குனராக முருகதாஸ் படத்தினை இறுதிவரை தாங்கிச்செல்லுகிறார். இரண்டாம் பாதியில் திரைக்கதை யில் அத்தனை நேர்த்தி. ஆனாலும் இறுதிக் காட்சியும், முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு உதவும் பாதுகாப்புத் துறை செயலாளரும் அரதப் பழசு கொஞ்சம் கவனித்திருக்கலாம். இயல்பான வசனங்கள் படத்துடன் ஒன்றிப்போகிறது. ஆனால் அடிக்கடி ஹிந்தியில் பேசுவது கொஞ்சம் அந்நியமாக தெரிகிறது.
தேசிய விருது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பு. புதிதாக எதுவும் இல்லை என்றாலும் கொமர்ஷல் படத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டிருப்பது படத்திற்கு வலுச்சேர்க்கிறது.
ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் முதல் பாதியில் சில இடங்களில் கத்தரி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் விட்ட வேகத்தை துரத்திச் சென்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஹரீஸ் ஜெயராஜின் பின்னணி இசை படத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. பல காட்சிகள் இசையால் ஈர்க்கப்படுகிறது. பாடல்களைப் போல அவை படமாக்கப்பட்ட விதமும் ஈர்க்கும் படி இல்லை. மேலும் பாடல்கள் படத்துடன் ஒன்றிப்போகாதது வருத்தமே. கூகுள் கூகுள் விஜய்காக மட்டுமே.
இவர்கள் தவிர்த்து வித்யூத் ஜம்வால், நாயகி காஜல் ஆகர்வால், ஜெயராம், சத்யன் ஆகியோர் எம்மை கவனிக்கவைக்கிறார்கள். குறிப்பாக வில்லனாக ஆஜானபாகுவான உடலுடன் அதிகம் பேசாமல் அலட்டாமல் அசத்துகிறார் வித்யூத். ஆனாலும் அவரை இறுதியில் டம்மியாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள்.
சத்யன் நகைச்சுவை நடிகராக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம் போல் தெரிகிறது. அதேவேளை ஜெயராம் வந்துபோகும் ஒரு சில காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். நாயகி காஜலுக்கு பெரிதாக வேலையில்லை. கவர்ச்சிக் கன்னியாக இளைஞர்களை சூடேற்றுகிறார்.
சண்டைக்காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே பார்த்தது. கத்திக்குத்து, போத்தல் சண்டை பில்லா 2வை நினைவு படுத்துகிறது. க்ளைமெக்ஸ் சண்டைக்காட்சியில் கில்லியை மீள்பதிவு செய்திருக்கிறார்கள்.
இத்தனை நிறை குறைகளை தாண்டி இறுதியில் வரும் பாடல் முழுவதையும் பார்த்து விட்டே திரையரங்கை விட்டு எழச் செய்திருப்பது ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய்க்கும் கிடைத்த வெற்றி. ஆக மொத்தத்தில் படம் விஜய் ரசிகர்களுக்கு மற்றுமொரு கில்லி பொதுவான ரசிகர்களுக்கு விஜய் பற்றிய எண்ணங்களை தப்பாக்கி அசத்தியிருக்கிறது இந்த துப்பாக்கி.
துப்பாக்கி - தீபாவளி சரவெடி
- அமானுல்லா எம். றிஷாத்