Total Pageviews

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் - விமர்சனம் (இலங்கையில் வெளியிட்டதன் பின்னர்)


சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் பல கடந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களை சுமந்து இலங்கையிலும் வெளிவந்திருக்கிறது உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்.

இந்திய உளவுத்துறை ரோ அமைப்பின் அதிகாரியினால் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் ஆப்கான் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை தடுப்பதுவே விஸ்வரூபம் படத்தின் கதை.

இதற்காக இஸ்லாம், கடவுள், அல்கொய்தா, கலை, மொழி மற்றும் விஞ்ஞானம் என ஏராளமான விடயங்களை புகுத்தி சாமானிய ரசிகர்களின் தலைகளை சுற்றவிட்டிருக்கிறார் இயக்குனர் கமல் ஹாசன்.

மணவாட்டியே மணாளனின் பாக்கியம் என ஒரு வகை நழினத்துடன் வாழ்கிறார் கதக் நடன ஆசிரியர் விஸ் எனும் விஸ்வநாத் (கமல்). இவரின் மனைவியாக வயதில் குறைந்த நிருபமா (பூஜா குமார்). நிருபமா தான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியுடன் காதல் வயப்படுகிறார்.

இதனால் தன்மீது கழங்கம் உள்ளது போல விஸ் மீதும் ஏதாவது குறை இருந்தால் கழற்றிவிட இலகுவாக இருக்கும் என தீர்மானிக்கிறார். இதற்காக தனியார் துப்பறியும் நிபுணரின் உதவியை நாடுகிறார். இதன்போது விஸ்வநாத் ஒரு முஸ்லிம் எனத் தெரியவருகிறது.

இந்நிலையில் துப்பறியும் நிபுணர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார். தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பறியும் நிபுணருடன் சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்கும் போது நிருபமாவின் முதலாளி கொலையுடன் ஆரம்பமாகிறது படத்தின் கதை. தொடர்ந்து நிசாம் அஹ்மத் கஷ்மீரியாக விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் துவசம் செய்து மனைவியையும் காப்பாற்றி நிருபமாவுடன் சேர்த்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்துகிறார் கமல்.

அதுவரையில் அமெரிக்காவில் அசுர வேகமெடுத்த கதைக்களம் பின்னர் ஆப்கானிஸ்தானில் நகர ஆரம்பிக்கிறது. ஏன்? எதற்காக? எப்படி? யார் என்ற கேள்விகளுக்கான விடைகளை மீதிக் கதையில் சுட்டுக்காட்டுகிறார் 'ரோ' அதிகாரியான நிசாம் அஹ்மத் கஷ்மீரி.

படம் முழுக்க நடிகர் மற்றும் இயக்குனராக கமலின் உழைப்பு தெரிகிறது கூடவே கமலிஸமும். தான் உலக நாயகன் என்பதனையும் தமிழ் சினிமா தனக்கு பல வருடங்கள் பின்நிற்பதையும் பறைசாற்றி நாயகனாகவும் இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார் கமல் ஹாசன்.

ஆனால் வழக்கம்போல கமல் படம் என்றால் தெளியாத குட்டையாக இருக்கும் என்ற மாயை இந்தப் படத்தில் அங்காங்கே தெளியவிட்டு சாதாரண ரசிகர்களையும் கவர முயற்சித்திருக்கிறார். ஆனாலும் பல மொழி, திரைக்கதை, வசனம் மற்றும் தன் கருத்துக்கள் போன்றவற்றில தனது முந்தைய படங்களான ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களை நியாபகமூட்டுகிறது.

இயல்பான வசனங்கள் மூலம் சில இடங்களில் யோசிக்கவும் செய்திருக்கிறார். கடவுள் காப்பாற்றுவார் என்றதும் எந்த கடவுள்? என்பதாகட்டும், 4 கைகள் கொண்ட கடவுள் என நிருபமா திணறும் காட்சியாகட்டும் வசனகர்த்தா தானே என்பதை உறுதிப்படுத்துகிறார் கமல்.

இங்கிலாந்துக்கு எதிரான மருதநாயகம் கதையை இங்கிலாந்துகாரர்களை கொண்டே படமாக எடுக்கத் துணிந்த கமலா இப்படி ஒஸ்காருக்கு ஆசைப்பட்டு அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்கிறார் என்றால் நம்பமுடியவில்லை.

கமல் தவிர படத்தில் வில்லானாக வரும் ராகுல் போஸ் சத்தமில்லாமல் மிரட்டுகிறார். ஏனையவர்களில் நாசர், சலீமாக வரும் ஜெய்டீப் என ஒரு சிலரே பாத்திரத்தில் நிலைத்து நிற்கிறார்கள். மீதிப்பேர் கதைக்கு தேவையாக இருந்தாலும் சொல்வதற்கில்லை.

நாயகிகளாக வரும் பூஜா குமார் இள வயது என்கிறார்கள். கமலிற்கு முன் வயதானவராகவே தெரிகிறார். அன்ரியா நியாபகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு படத்தில் தலைகாட்டவில்லை. காட்சிகள் சில தொக்கி நிற்பதைப் போலவே அன்ரியாவும். பாகம் 2 இன் தேவைகளா இருக்கலாம்.

தொழில்நுட்பத்தில் இன்னுமொரு பரிணாமத்தினை அடைந்திருக்கிறது இப்படம். ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் நியூயோர்க் நகரின் அழகையும் ஆப்கானிஸ்தானின் அழுக்கையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

எடிட்டிங்கில் மஹேஸ் சில இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். முதல் பாதியிலிருந்த வேகமும் இரண்டாம் பாகத்தில் சற்றே குறைந்துவிடுகிறது. ஷங்கர் எசான் லோயின் இசையமைப்பில் படத்திற்கு தேவையான பாடல்கள். அனேகமாக பின்னணியிலேயே வருகிறது. பின்னணி இசையில் பல இடங்களில் மௌனமாகி அசத்துகிறது. குறிப்பாக முதல் சண்டைக் காட்சியில் அசத்தல் ரகம்.

சண்டைக் காட்சிகள் அத்தனையும் ஹொலிவூட் ரகம். சண்டைக் காட்சிகளில் கமலின் விஸ்வரூபம் 50 வயதைத் தாண்டிவிட்டார் என்பதனை நம்பமறுக்கச் செய்கிது. கிரபிக்ஸ் காட்சிகள், ஆப்கானிஸ்தானுக்காக போடப்பட்ட செட் (கலை) எல்லாம் அசலையும் நகலையும் பிரித்தறிய முடியாதுள்ளது.

இவ்வாறெல்லாம் தொழில்நுட்பத்தில் பிரமாதப்படுத்தியிருந்தாலும் பாகம் 2 எடுக்கும் எண்ணத்தினாலோ என்னவோ கதை ஆங்காங்கே தொக்கி நிற்கிறது. இதுதான் நடந்தது என வரும் காட்சிகளையும் சேர்த்து.

மொத்தத்தில் ஒஸ்காருக்காக ஹொலிவூட் தரத்தில் கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபமே இந்த விஸ்வரூபம்.

-அமானுல்லா எம். றிஷாத்