Total Pageviews

Wednesday, February 13, 2013

நாளை பூமியை நெருங்கும் மற்றுமொரு அஸ்டரொய்ட்! : பூமியுடன் மோதுவற்கு வாய்ப்பே இல்லை


காதலில் காதல் கொண்டவர்கள் காதலர் தினத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் விண்வெளியில் காதல் கொண்ட விண்வெளி ஆய்வாளர்களோ அதற்கடுத்த நாளானான பெப்ரவரி 15ஆம் திகதிக்காக ஆவலாய் காத்திருக்கிறார்கள்.

அன்று பூமிக்கு மிக அண்மையாக 2012DA14 அஸ்டரொய்ட் எனப்படும் பறக்கும் கல்லொன்று பூமியைக் கடந்துசெல்லவுள்ளது. இதனை எதிர்நோக்குவதற்காக பல்வேறு நாட்டிலுமுள்ள விண்வெளி ஆராய்வாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனா.

ஏனெனில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இது போன்ற ஒரு சம்பவம் நிகழும் அதேவேளை 1200 வருடங்களுக்கு ஒரு முறை மோதல் அல்லது வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முதல் 1908ஆம் ரஷ்யாவில் ஒரு பகுதியில் அவ்வாறானதொரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இருப்பினும் பெப்ரவரி 15ஆம் திகதி அவ்வாறெல்லாம் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெறாது. என்றாலும் பூமியுடன் மிக நெருக்கமாக பறக்கும் கல்லொன்று கடந்து செல்லும் இவ்வாறானதொரு அரிய சந்தர்ப்பத்தினை நழுவவிட விஞ்ஞானிகள் யாரும் தயாரில்லை. ஏனெனில் 2046ஆம் ஆண்டிலேயே கல்லொன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும்.

பூமியை மிக மிக அண்மையில் கடந்து செல்லவுள்ள 2012DA14 என்றழைக்கப்படும் அஸ்டரொய்டானது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது குறித்த அஸ்டரொய்டானது பூமியை கடந்து சென்று 7 நாட்கள் ஆகிவிட்டது. இதன் பிறகே இந்த அஸ்டரொய்ட் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கண்களுக்கு தென்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்போதே இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் அறிவியல் உலகிற்கு தெரியவந்தது.



2012DA14 அஸ்டரொய்ட் வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பூமியை அதன் மேற்பரப்பிலிருந்து வெறும் 27,700 கீ.மீ. (பூமியின் மத்தியிலிருந்து 34,100 கீ.மீ) தூரத்தில் கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2012DA14 இனை ஒத்த அளவுடைய ஒரு அஸ்டரொய்ட் மிக நெருக்கமாக கடந்து செல்லும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27,700 கீ.மீ. என்பது சாதாரணமாக எமக்கு பெரியதோர் தூரமாக தெரியலாம். ஆனால் இது விண்வெளி சம்மந்தமான ஆய்வுகளுடன் ஒப்பிடும் போது மிக மிக கிட்டிய தூரமே. அத்துடன் தொலைக்காட்சி, ஜீ.பீ.எஸ் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் செயற்கை கோள்கள் அமைந்துள்ள தூரத்தினை விட இது குறைவாகும்.

இந்தளவிற்கு அண்மையில் வரும் போதிலும் ஏறத்தாள 45 மீற்றர் அகலாமனதும் 130 ஆயிரம் மெற்ரிக் தொன் நிறையுடைதுமான ஒரு காற்பந்து மைதானத்தின் பாதி அளவுடைய இந்த அஸ்டரொய்டினை வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியாது. . பைனா குலர் மற்றும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் போன்றவற்றினாலேயே பார்க்கமுடியும் .

கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுக்கு மேலாக 27, 700  கீ.மீ. தூரத்தில் முற்பகல் 11.55 மணிக்கு பூமியை 17,450 மைல்/மணி வேகத்தில்  கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிச சந்தர்ப்பந்தினை எல்லோரும் பார்க்கும் விதமாக நாஸா இணைத்தினூடாக ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக  http://eyes.nasa.gov/index.html எனும் பக்கத்தை ஆரம்பித்துள்ளது. இதன் கல்லின் அசைவுகளை நேரடியாக காணலாம்.

ஏற்கனவே 2012DA14 அஸ்டரொய்டானது ஜனவரி 9ஆம் திகதி பூவியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது பெப்ரவரி 15ஆம் திகதியன்றே இச் சம்பவம் நடைபெறும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இக்கல்லானது எந்த சந்தர்ப்பத்திலும் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்பே இல்லை என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நாசா விஞ்ஞானி கலாநிதி டொன் யொமன்ஸ் கருத்து வெளியிடுகையில், இந்த கல்லின் பயணம் எவ்வாறு அமையும் என்பதுடன் நிச்சயமாக பூமியுடன் மோதவும் மாட்டாது என்பது உறுதி.

ஆனால் வரலாற்றில் அறிந்தவகையில் 2012DA14 அஸ்டரொய்ட் அளவிலான அஸ்டரொய்ட் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடக்கும் அஸ்டரொய்ட் இதுவே. எனவே இதன் மீதான ஆராய்ச்சிகள் பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.




உண்மையில் ஒரு வருடத்தில் இதே மாதிரியான ஏறத்தாள 500 ஆயிரம் அஸ்டரொய்ட்டுகள் பூமியை நெருங்கிச் செல்கின்றது. ஆனால் அவை அனைத்தையும் எம்மால் அவதானிக்க முடிவதில்லை என்றார்.

இந்த அஸ்டரொய்ட் பூமியை நெருங்கும் வேளையில் நாசா அதனுடன் தொடர்புகொள்ளும் நடவடிக்கைகள் அத்தனையை தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் இதனால் பூமிக்கு ஆபத்தோ வெடிப்பு மற்றும் மோதல் சம்வங்களோ இடம்பெற மாட்டாது என நாசா தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இன்னும் சில நாட்களில் பூமி சந்திக்கவுள்ள இந்த அஸ்டரொய்டினால் பூமி நிச்சயமாக அதிரமாட்டாது என்பது தெளிவாகிறது. ஆனாலும் இது தொடர்பிலான வதந்திகள் பூமியை குறிப்பாக எமது பிராந்தியங்களை அதிரச் செய்யலாம். எனவே முடிந்த வரை உண்மைகளை உரைப்போம் வதந்திகளை மறைப்போம்.



-அமானுல்லா எம். றிஷாத்