Total Pageviews

Friday, February 15, 2013

தொழில்நுட்பக் காதலர்களே... காதலர் தின வாழ்த்துக்கள்!


ஆணும் பெண்ணும் சமமென்று வாழும் இக்காலத்தில் கூட ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கொருவர் அடிமையாக்கி எதிர்பார்ப்புக்களை தாண்டிய அன்பால் உணர்வுகளை இணைக்கும்  திறன்மிக்க 'காதல்' என்ற உணர்பூர்வமான விடயத்தை கொண்டாடிய அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

நிலையான மாற்றத்தினில் நிலைமாறும் உலகியல் விடயங்களில் காதலர்களும் தொழில்நுட்பத்துடனான மாற்றத்தினில் காதல் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கதைகளில் படித்தது போன்று காடுகளை தாண்டி தூது சென்ற புறாக்களின் சிறகுகளில் வளர்ந்தது அன்றைய காதல்கள். அதுவே கண்டங்களைத் தாண்டி இலத்திரனியல் அலைகளில் வளர்கிறது இன்றைய காதல்கள். இதனால்தான் என்னவோ இயற்கையை சுவாசித்து வாழ்ந்த காதல்கள் உருவாக்கிய காவியங்களை இப்போது படைக்கமுடியவில்லை.

என்றாலும் காதலினை வளர்க்கூடிய பல சாதனங்களை தொழில்நுட்பங்கள் படைத்துவிட்டது என்றால் வலைக் காதலர்கள் உட்பட ஏனையவர்களும் ஒருமித்த குரலில் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில் குதிரை, புறா, ஓலை, தபால் என்றிருந்த காதல் போய் பேஜர், குறுஞ்செய்தி, எம்.எம்.எஸ், ஈமெயில், சமூகவலைத்தளங்கள் என்றல்லவா வளர்ந்து நிற்கிறது.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்பாடலின் மூலம் உலகிலுள்ள அத்தனை துறையினரும் பயன்பெறுகின்றனர். ஆனால் காதலர்கள் உச்சப் பயனை அடைவதை தனிமையில் இனிமையாய் சிரித்துப்பேசும் ஒவ்வொருவரும் எமக்கு உணர்த்தத் தவறவில்லை.

காதலித்துப் பார் கவிதை வரும் என்றார் கவிஞர் வைரமுத்து. ஆனால் காதலித்துப் பார் கையடக்கத் தொலைபேசி வரும் என்பதே இப்போதைய உண்மை நிலைமை.

3ஜீ, 4ஜீ என்ற சந்ததியினருக்கு முன்னர் வாழ்ந்த சந்ததியிடம் காதல் பற்றிக் கேட்டால் அந்த சுகமான சந்தோசங்கள், காத்திருப்புகள், வலிகள் என எல்லாவற்றையும் லயித்துப் போய்க் கூறுகிக்கொண்டே இருக்கிறார்கள். அது கேட்போரையும் காதல் கொள்ளத் தூண்டும் வகையில் உண்மையாகவும் உணர்பூர்வமாகவும் இருக்கிறது.

ஆனால் இன்றை தொழில்நுட்பக் காதலர்களின் கதையானது அவர்களது காதலைப் போலவே மிகச் சுருக்கமானது. அதாவது கைப் பேசியின் மின்கலத்தில்  (Battery) இருக்கும் சார்ஜின் நேரமே காதலின் நேரமாகவும் அமைந்துவிடுகிறது. இதை விடக்கொடுமை என்னவென்றால் இவர்களது மகிழ்ச்சி, வேதனை, முத்தம் என அனைத்தையும் சொந்தம் கொண்டாடுகிறது இந்த கையடக்கத் தொலைபேசிகள்.

நிலைமை இவ்வாறே நீடித்தால் எச்சில் எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி ஒப்புக்கொள்வாயா? என்ற மதன் கார்க்கியின் வசனங்களும் நிஜமாகிவிடுமோ என அச்சமும் ஏற்படுகிறது.

இல்லை, இல்லை இப்போதும் கடலை விட ஆழமான, வானை விட நீளமான காதல் என்னுடையது என்பவர்களிடம் இதுவெல்லாம் ஹோர்மோன்ஸ் செய்யும் வேலை என்றால் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்!

இருந்தாலும் காதலுக்கென நேரத்தை ஒதுக்கி ஈ-வாழ்த்து அட்டைகள் மற்றும் அப்ளிகேஷன்ஸ் மூலம் காதலைப் பரிமாறிக்கொண்டிருக்கையில், பெபரவரி 14ஆம் திகதியையும் சேர்த்து 8 நாட்கள் காதலர் தினத்தினை கொண்டாடுகிறார்கள். இக்கொண்டாட்டங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. அதேவேளை சீனா (சில பகுதிகளில்) உட்பட பல நாடுகளில் காதலர் தினம் என்றால் என்ன? என்று கேட்கும் நிலைமைகள் இன்றளவிலும் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் ரோஸ் தினம், ப்ரொபோஸன் தினம், சொகோலேட் தினம், டெடி (டெடி பியர்) தினம், பிரொமிஸ் தினம், ஹக் தினம், கிஸ் தினம் என காதலர்கள் கொண்டாடுகிறார்கள்.

இவ்வகையான கொண்டாட்டங்கள் தற்போது கீழத்தேய நாடுகளிலும் தற்போது அதிகளவில் பரவி வருகின்றது. என்றாலும் மேலயத்தேய நாடுகளிலேயே பரவலாக காணப்பாடுகிறது. அவ்வாறான குறித்த சில நாடுகளில் இவ்வாறு அமைகிறது.

அமெரிக்கா 
ஆடல் பாடல் களியாட்டாம் என திருவிழாவாக கொண்டாடுவார்கள். காதலர்கள் தங்களுக்குள் வண்ணமயமான லித்தோகிராப், கையால் வண்ணம் தீட்டிய வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்வார்கள். மேலும் விதைகள், சிப்பிகள் போன்றவற்றினால் அணிகலன் உருவாக்கி மாட்டிக்கொள்வார்கள். மாணவர்களும் தங்களது வகுப்பறைகளில் காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

லண்டன்
ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமாக தமது அன்பினை வலன்டைன் பாதிரியாரின் பெயரில் பகிர்ந்துகொள்வார்கள். ஒரு குழுவினர் இதற்காக பாடல்களை தயார் செய்து சிறுவர்களைக் கொண்டு பாடவைத்து இனிப்பு பரிசுகளை வழங்குவதுடன் காதலர் தினத்திற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பண் ஒன்றையும் வழங்கி மகிழ்வனர்.

பிரான்ஸ்
இங்கு வித்தியாசமாக காதலர்கள் ஆண்கள், பெண்களாக தனி அறையில் சென்று அடுத்த சென்றுவிடுவார்கள். பின்னர் பெண்கள் ஆண்களை அழைக்க வேண்டும். இதில் ஈர்க்கபடாத ஆண்கள் காதலில் தோல்வியுற்றவராகிவிடுவர். தொடர்ந்து படங்களை எதிர்த்து ஆண்களை பெண்கள் திட்டித்தீர்த்துக்கொள்வர். தற்போது இம்முறை பிரான்ஸ் அராசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் 
காதலர் தினம் இங்கு பெப்ரவரி மற்றும் மார்ச் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படும். பெப்.14இல் பெண்கள் ஆண்களுக்கு சொகொலேட் போன்ற பரிசுகளை வழங்குவர். இத்தினங்களை வெள்ளை தினம் என அழைப்பர். பதிலுக்கு மார்ச் 14இல் ஆண்கள் தங்களது பதில் பரிசை வழங்கு தங்களது அன்பை பரிமாறிக்கொள்வர். இது 1960ஆம் முதல் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.

கொரியா
முற்றிலும் வித்தியாசமாக ஆண்டில் ஒவ்வொரு மாத்தின் 14ஆம் திகதியும் இங்கு காதலர் தினத்தினை கூரும் வகையில் ஏதாவது செய்துகொண்டே இருப்பார்களாம். ஜப்பானைப் போலவே இங்கும் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள். பின்னர் ஏப்ரல் 14ஆம் திகதி காதலில் தோல்வியடைந்தவர்கள் கறுப்பு தினத்தினை கொண்டாடுவார்கள். இதன்போது காதல் தோல்வியடைந்த பலரும் ஒன்றாக இணைந்து ஜஜாங் எனும் கறுப்பு நூடுல்ஸை உண்பார்கள்.

இவ்வாறெல்லாம் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது தற்போதும் சில இடம்பெறுகிறது. என்றாலும் இவற்றையெல்லாம் தூர எறியச்செய்து தொழில்நுட்பத்தினால் இணைக்கும் காதல் அதனாலே பிரிவது வருத்தமே.

இவற்றையெல்லாம் கடந்து உண்மைக் காதலை தொழில்நுட்பத்திலும் வெளிப்படுத்தும் ஆத்மார்த்தமான காதலர்களுக்கு இந்த காதலர்கள் தினம் சிறப்பாகவே அமைந்திருக்கும் என்பது உறுதி. அவ்வாறான தொழில்நுட்பக் காதலர்கள் அனைவரும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஏ.எம்.ஆர்