கடந்த 15ஆம் திகதி வானியல் தொடர்பான அத்தனை பேரும் 2012 DA14 என்ற அஸ்டரொய்ட் தொடர்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பிரதேசத்திலுள்ள யுரல் மலைத்தொடரின் மேலாக அழையாக விருந்தாளியாக வந்த எரிகல்லொன்று வெடித்துச் சிதறியது. கூடவே விஞ்ஞானிகளின் கணிப்புக்களும் தான்.
எரிகல் வெடித்த குறித்த பகுதியில் மக்கள் சனத்தொகை மிகக் குறைவு என்பதனால் ஆபத்துக்கள் குறைவாவே ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு எரிகல் வெடித்ததில் சிறு காயங்கள் உட்பட 1200 மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர். இதில் மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து பாரிய தொழிற்சாலையொன்றின் 6ஆயிரம் சதுர அடியுடைய கூரையொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளும் ஆங்காகங்கே நொறுங்கிக் காணப்படுகின்றது என ரஷ்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
வானிலிருந்து வேகமாக வந்த எரிகல்லானது புவிலிருந்து சுமார் 50 கி.மீ. உயரத்தில் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்புகள் பிரம்மாண்டமாக வெடித்துள்ளது. இதில் சுமார் 32 மைல் பரப்பில் துகள்கள் சிதறியுள்ளது. இதன்போது யுரல் மலைப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிர்வுக்குட்பட்டுள்ளது.
இவ்வதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்துள்ளது. இதனாலேயே அங்குள்ள பெரும்பாலானர்வர்கள் காயங்களுக்குள்ளாகினர்.
ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்தால் இந்த எரிகல் ஆபத்தானது தான் என்றாலும் பெரியளவில் ஆபத்து என்று சொல்லுமளவிற்கு இல்லை என எண்ணிவிட வேண்டாம். வானில் வெடித்த அதே எரிகல் புவின் மேற்பரப்பில் மோதி வெடித்திருக்குமானால்.... நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சுமார் 68 வருடங்களுக்கு முன்னர் 2ஆம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஸிமா நகரை உலுக்கியது 'சின்னப் பையன் (Little Boy)' எனும் அணுகுண்டு. இதன் தாக்கம் சொல்லிப் புரியவேண்டியதில்லை. வருடா வருடம் அணுகுண்டு வெடித்த தினமான ஓகஸ்ட் 6ஆம் திகதியை கொண்டாடியே உலகிற்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது ஜப்பான்.
அமெரிக்காவின் அதி புத்திசாலித்தனமான வேலையில் அணு விதைக்கப்பட்ட ஹிரோஸிமாவின் பூமியில் இன்றளவிலும் வீரியமிக்க அடுத்த சந்ததியின் விதைகளான குழந்தைகள் உருவாக முடியாமலே உள்ளது.
இவ்வாறு ஹிரோஸிமாவை உலுக்கிய அணுகுண்டைப் போன்று 30 மடங்கு அதிக வலுவுடைய எரிகல்லே ரஷ்யாவின் வான் பரப்பில் வெடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ரஷ்யாவின் 1908ஆம் ஆண்டில் பாரிய எரிகல் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1200 வருடங்களுக்கு ஒரு முறை பாரிய வெடிப்பில் ஒரு சம்பவமே அது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எரிகல்லிற்கு காசு
இந்தளவிற் ஆபத்தை விளைவிக்கக் கூடிய எரிகல் என்பதனால் ஆராய்சிக்காக இக்கல்லிற்கு ஆராய்ச்சியாளர்களிடையே கேள்வி நிலவுகின்றது. வெடித்து எரிகல்லின் சிதறல்கள் கிடைக்கப்பெற்றவர் அவற்றை விற்பனை செய்துள்ளனர். சுமார் 6500 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியானது.
இதனால் குறித்த பிரதேசத்திற்கு எரிகல் வேட்டைக்கென ஏராளமானவர்கள் வந்துள்ளனர். இதனை ரஷ்ய பாதுகாப்புப் படை தடை செய்துள்ளதுடன் கல்லினை வெறுங் கையினால் தொடுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளனர்.
ஆபத்துக்கள் எதுவுமின்றி புவியைக் கடந்தது அஸ்டரொய்ட் 2012 DA14
இதேவேளை அன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட் 2012 DA14 எனும் அஸ்டரொய்ட் பூமிக்கு எதுவித ஆபத்துக்களையும் ஏற்படுத்தாமல் புவியைக் கடந்து சென்றது.
பூமிக்கு மிக அண்மையாக அஸ்டரொய்ட் ஒன்று கடந்து செல்லும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனவே இக்கல் புவியைக் கடக்கும் போது அஸ்டரொய்ட் தொடர்பான ஆராய்ச்சிகளும் அடுத்த கட்டத்திற்கு நகரும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
150 அடி நீளமானதும் 130,000 தொன் நிறையுடையதுமான (உதை பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவு) 2012 DA14 அஸ்டரொய்ட், சுமாத்ரா தீவிற்கு மேலாக கடந்த 15ஆம் திகதி இரவு சுமார் 11.55 மணியளவில் 28,000 கி.மீஃமணி வேகத்தில் புவியுடன் மோதாது சுமாத்ரா தீவுகளுக்கு மேலாக 27,700 கி.மீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றுள்ளது.
ஆய்வாளர்களின் கணிப்பினை பொய்யாக்காமல் குறித்த அஸ்டரொய்ட் புவியைக் கடந்தது. இதன் பின்னர் உண்மையில் இக்கல் புவியை மோதுவதற்கு மிகச் சிறியளவில் வாய்ப்பு இருந்தது. அவற்றை நாங்கள் வெளியிடவில்லை என விஞ்ஞானிகள் கூறினர் எனத் தகவல்கள் வெளியாகின.
மேலும் இவ் அஸ்டரொய்ட் பூமியில் மோதியிருந்தால் 800 அடிக்கும் மேல் சுனாமி ஏற்பட்டிருக்கும். மேலும் மீண்டும் சின்னப் பையனுடனேயே இதுவும் ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2012 DA14 அஸ்டரொய்ட் புவியுடன் சின்னப் பையன் அணுகுண்டினை விட 1000 மடங்கு ஆபத்தை விளைவித்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.
வருடத்திற்கு ஆகக் குறைந்தது 500 ஆயிரம் அஸ்டரொய்ட்டுக்கள் பூமியைக் கடந்து செல்கிறது. இவற்றில் ஒரு சிலவற்றை விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்க முடிகிறது நாசாவினையும் சேர்த்து. 2012 DA14 அஸ்டரொய்ட் ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் நாசா இது தொடர்பில் மக்களுக்கு அறிய உதவியிருந்தது. அத்துடன் 2012 DA14 அஸ்டரொய்டின் நகர்வினையும் http://eyes.nasa.gov/index.html என்ற இணையத்தளத்தில் நேரடியாக காண வழிசெய்தமை குறிப்பிடத்தக்கது. (இந்த அஸ்டரொய்ட் தொடர்பில் 2013.02.08ஆம் திகதி மெட்ரோவில் பார்க்கலாம்.)
இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிடுகையில், அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் எரிகற்கள் என்ற விடயம் தொடர்பில் விஞ்ஞானிகளின் நிலைப்பாடுதான் என்ன? என பொதுவான ஒரு கேள்வி எழச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.
இந்நிலையில் அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் கற்களை அவதானிக்கவும் அவற்றிலிருந்து புவியை காக்கவும் புதிய சட்டலைட் மூலம் சூரியக் கதிர்கள் மூலம் கற்களை அழிக்கும் நடவடிக்கைகளை தற்போது புதிதாக முன்னெடுக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருகின்றனர்.
எனவே எதிர்வரும் நாட்களிலும் பல்லாயிரக் கணக்கான கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டுக்களுக்கு விஞ்ஞானத்தின் விடை என்ன என்பதை பொறுத்திருந்து பார்போம்.
அமானுல்லா எம். றிஷாத்
இக்கட்டுரையானது மெட்ரோ நியுஸ் பத்திரிகையில் 22.02.2013 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.