அந்த வரிசையில் இடம்பெற்ற பலரும் தகுதிவாய்ந்தவர்கள் என்பதில் சந்தேகமேதுமில்லை. ஆனாலும் அதில் வாழும்போது அங்கீகாரம் கிடைத்தவர்கள் வெகு சிலர் என்பதில் அங்கீகாரத்திற்காய் ஏங்கும் ஒவ்வொருவருக்கும் வருத்தமே.
இருப்பினும் தற்காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு வாழும் போதே வாழ்க்கையையும் அதேபோல அங்கீகாரத்தையும் வெற்றிகொள்ள முடிந்ததில் அறிவியல் உலகே மகிழ்ச்சயில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கருவில் தோன்றுபவற்றை அழிக்க முடிந்தாலும் அறிவில் தோன்றுபவற்றை அழிக்கச்செய்ய முடியாது என்பதற்கு சாட்சியாய் வாழும் அதேவேளை அறிவியல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சேர்க்கும் அறிவியலாளராக தன்னை அடையாடளம் காட்டிக்கொண்ட 'ஸ்டீபன் ஹாக்கிங்' கடந்த 8ஆம் திகதி தனது 70 வயதினை எட்டியுள்ளார்.
அவரது பிறந்த நாளை அன்று அவரால் கொண்டாட முடியாவிட்டாலும் உலகமே கொண்டாடும் படி உடலசைவுகள் எதுவுமின்றி கதிரையில் இருந்தவாறே அமைத்துக்கொண்ட ஸ்டீவ் ஹாக்கிங்கின் 'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!' என்ற வாழ்க்கையினை நாமும் அறிந்துகொள்வோம்.
அறிவியல் உலகை தன்பக்கமாய் ஈர்ப்தற்காக லண்டனில் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ப்ராங் மற்றும் இஸபல் தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு 2 சகோதரிகளும் ஒரு தத்துச் சகோதரனும் உண்டு.
2ஆம் உலகப் போரில் இடம்பெயர்ந்து சென்ற ஸ்டீபன் ஹாக்கிங் St Albans High School என்ற மகளிர் பாடசாலையில் சில மாதங்களும் பின்னர் St Albans High School தனது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். இந்நிலையில் அவரது அப்பாவுக்கு மகனை சிறந்த பாடசாலையில் சேர்க்க புலமைப் பரீட்சை ஒன்றில் தோற்ற வேண்டியிருந்தார் ஸ்டீபன்.
அப்போது ஏற்பட்ட சுகயீனம் காரணமாக ஸ்டீபன் ஹாங்கிங்கிற்கு குறித்த பரீட்சை எழுத முடியவில்லை இதனால் வேறு பாடசாலைக்கும் ஹாக்கிங்கால் செல்லமுடியவில்லை. படிப்பில் சிறந்து விளங்கிய ஸ்டீபன் ஹாக்கிங், அப்பாடசாலையில் ஐன்ஸ்டைன் என்ற செல்லப்பெயரில் புகழ்பெற்றார். இது அவருக்கு பொருத்தமானதே என பிற்காலத்தில் உறுதிசெய்யதார் ஹாக்கிங்.
தனது 17ஆவது வயதிலேயே ஒக்ஸ்போர்ட் கல்லூரியில் மாணவராகி தனது பட்டப்படிப்பினை ஆரம்பித்தார். அங்கு 3 வருடங்கள் படிப்பினை மேற்கொண்ட ஹாக்கிங் 1000 மணித்தியாலங்கள் மட்டுமே படித்தாராம். ஆனாலும் ஒக்ஸ்போர்ட்டில் முதற் தரவகுப்பு சித்தியை BA (Hons.) பட்டப்படிப்பில் பெற்றுக்கொண்டார். இதற்காக நடத்தப்பட்ட வாய்மூலப் பரீட்சையின் போது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஸ்டீபனின் பதில் இவ்வாறமைந்தது,
'முதற் தரவகுப்பு சித்தி வழங்கினால் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் 2ஆம் தரவகுப்பு சித்தியெனில் இங்கேயே எனது மேற்படிப்பையும் தொடருவேன் எனவே நீங்கள் எனக்கு முதற் தரவகுப்பு சித்தியையே தருவீர்களென நம்புகிறேன்'
தனது 21ஆவது வயதில் நோய்வாய்ப்பட்ட ஸ்டீபனின் தசை மாதிரிகளை சோதித்த மருத்துவர்கள் அடுத்த இரண்டு-மூன்று வருடத்திற்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டார்கள்.
வைத்தியசாலையில் துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந் சிறுவனொருவன் எதிர்பாராமல் மரணிக்க ஸ்டீபனுக்கு பயத்திற்கு பதில் தைரியம் உண்டாயிற்று. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார்.
அப்போது உடல் தன் கட்டுப்பாட்டிலில்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை தெரிந்துகொண்டார். தொடர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை பூர்த்திசெய்து பேராசியரானார். "Singularities and the Geometry of Space-Time" என்ற பெயரில் ஸ்டீபன் எழுதிய ஆய்வு 'Adams Prize" விருதினை வென்றது.
இந்நிலையில் 1965ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் திகதி தனது காதலியையும் மணமுடித்தார். இதன் மூலம் மூன்று குழந்தைகளுக்கும் தந்தையானார். ஆனால் இவரின் முதலாவது திருமண வாழ்க்கை 1990ஆம் ஆண்டில் முற்றுப்பெற 1995ஆம் ஆண்டில் தன்னை கவனித்த செவிலியை மணம் முடித்தார்.
1974ஆம் ஆண்டில் ஏ.எல்.எஸ் என இனங்காணப்பட்ட ஒரு வகை நரம்பு தொடர்பான நோயினால் அவரது உடல் முழுமையாக செயலிழந்துவிட நம்பிக்கை அதிகமாக செயல்பட ஆரம்பித்தது.
தனது நம்பிக்கையின் உச்சக்கட்டமாக உடலிலுள்ள எந்த பாகமும் இயங்காத போது தனது கண்ணை அசைத்து மாணவர்களுக்கு பாடம் நடாத்தியது மட்டுமன்றி அறிவியல் உலகில் திருபுமுனையை ஏற்படுத்தும் வகையில் 'யு டீசநைக ர்ளைவழசல ழக வுiஅந' என்ற புத்தகத்தினை 1988ஆம் எல்லோரும் முட்டாள் தினமாக கொண்டாடும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தனது அறிவியல் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தின் வெற்றி ஸ்டீபனை உலகளவில் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது.
இதனையடுத்து கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணரினால் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கக்கூடிய கணனி மென்பொருளொன்று உருவாக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பொருத்திக்கொடுக்க உற்சாகமான ஸ்டீபனின் சிந்தனைகள் அதிகரிக்க ஏராளமான பயன்மிகு புத்தகங்களை வெளியிட்டு அறிவியில் உலகை தன் பக்கம் ஈர்த்தார்.
குறிப்பாக ஹிக்ஸ் பொஸன், பிரபஞ்சம் உருவான விதம், காலம் எப்போது ஆரம்பித்து எப்போது முடியும், காலத்தை பின்னோக்கிச் சென்று காணமுடியுமா என்றவான சிக்கலான கேள்விகளுக்கு புத்தகங்களினூடாக அறிவியல் ரீதியில் இலகுவாக பதில் சொல்லி வியக்கவைத்த ஸ்டீபனின் உடல் நிலை தொடர்பில் இன்றும் வியப்புதான் மிஞ்சுகிறது.
ஆனால் அவரது உடல் நிலை குறித்து பேசுகையில் ஸ்டீபன், இந்நோயினால் பாதிக்கப்பட்டதில் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் ஆழமாக சிந்தித்து புத்தகங்களை எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசுகிறார்.
ஒரு முறை பெருவெடிப்பு ஏற்படும் முன்னர் அண்டவெளி எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு, வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது! என சிந்தைமிகு பதிலளித்தார். இவ்வாறெல்லாம் ஸ்டீபன் சிந்திக்க என்ன தான் காரணம் என்றால் அவர் பின்பற்றும் 'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!' என்ற மகத்துவம்மிக்க மந்திரம் மட்டுமே...
இதே மந்திரம் இன்னும் பல ஆண்டுகள் பலித்து அறிவியல் உலகை வளர்க்க ஸ்டீபன் ஹாக்கிங் நீண்ட ஆயுளுடன் வாழ அவரது பிறந்தநாள் மட்டுமின்றி என்றும் வாழ்த்துவோம்!
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தங்கள்
-A Brief History of Time (1988)
-Black Holes and Baby Universes and Other Essays (1993)
-The Universe in a Nutshell (2001)
-On The Shoulders of Giants (2002)
-A Briefer History of Time (2005)
-God Created the Integers: The Mathematical Breakthroughs That Changed History (2005)
-The Grand Design(1988)
-அமானுல்லா எம். றிஷாத்