அறிவியல் வளர்ச்சியில் இயற்கையின் மாற்றங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கும் மனிதனை அறிவியல் கட்டுப்படுத்தும் நாள் நெருங்கிக்கொண்டிருப்பது போன்ற சிந்தனைகளை அவ்வப்போது கதைகளாகவும் திரைப்படங்களாகவும் பலரும் சிதறவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவை சில சந்தர்ப்பங்களில் நிஜமாகலாம். பல கற்பனைகளாக மட்டுமே அமைந்துவிடு;ம்.
கற்பனைகளை நிஜமாக்கிப் பார்க்கும் வல்லமைகொண்ட அறிவியலாளர்கள் அண்மையில் ஹொலிவூட் திரைப்படங்களை நிஜமாக்குவது போன்றதொரு கண்டுபிடிப்பினை உருவாக்கியுள்ளனர்.
அதாவது திரையில் கண்டு மகிழ்ந்த அழிவிலிருந்து மனித குலத்தினைக் காக்கும் நாயகனாக சித்தரிக்கப்படும் அதி திறமை வாய்ந்த ரோபோக்களை ஒத்த ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள ; “ரோபோட்டிக்” தொழில்நுட்பத்தில் நினைத்துப்பார்க்க முடியாத எல்லையினை தொட்டு நிற்கிறார்கள். ஏற்கெனவே மனித குலத்திற்கு உதவும் வகையிலான பல்வேறு துறைகளில் மாறுபட்ட திறமைகளைக்கொண்ட ரொபோக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் அழிவுக்குமாக வித்திட்ட அறிவியலின் கண்டுபிடிப்புக்களான அணு உற்பத்தி, துப்பாகி, பீரங்கிகளுக்கு எதிராக செயற்படக்கூடிய அதி நவீன ரொபோ ஒன்றினை பொஸ்டன் டைனமிக் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மூளை மட்டுமே இல்லாத இந்த அதிநவீன ரொபோவுக்கு அட்லஸ் பெயரிடப்பட்டுள்ளது. இதனை அண்மையில் DARPA எனப்படும் அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது.
இந்த ரோபோவின் விசேட அம்சம் என்னவெனில் ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை வெடிப்பினைப் போன்ற அனர்த்தங்கள் மற்றும் யுத்த களத்திலும் மனிதர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமையாகும்.
6 அடி 2 அங்குல உயரத்தில் 150 கிலோ கிராம் நிறையுடைய இந்த ரோபோ அதிக வெப்பத்திலும் அதேவேளை நீரிலும் தொழிற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் நீரியல் தொழில்நுட்பத்தில் 28 மூட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட இந்த அட்லஸினால் மனிதனின் அசைவுகளை அப்படியே பிரதிபலிக்க முடியும். இவ்வகை ஆற்றலை ஐரொபோட் மற்றும் சன்டிலா தேசிய ஆய்வகம் உருவாக்கியுள்ளது.
இதுமட்டுமன்றி தானாக ஓடிச் செல்லக்கூடிய கூகுள் காரிலுள்ளது போன்ற ரேடார் ஸ்டீரியோ கெமராவும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தனை வசதிகள் கொண்ட இந்த ரொபோ இயங்குவதற்கான சக்தி வெளியிலிருந்த வழங்கப்படுகின்றது. ஆனால் தானாக சக்தியை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றலை வழங்க இதனை உருவாக்கிய நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
ஏனெனில் யுத்த களம், அணு சக்தி பேரழிவுகளில் மனிதன் செல்ல முடியாத இடங்களுக்கு அனுப்பி மீட்புப் பணிகளை மேற்கொள்ளவதை பிரதான நோக்காகக் கொண்டே இந்த அட்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அட்லஸ் தானே தனக்கு தேவையான சக்தி மூலத்தை உருவாக்கினால் அது சிறப்பாக அமையுமாம்.
எது எவ்வாறாயினும் இந்த அட்லஸுக்குள்ள திறமையால் இலகுவாக யுத்த களத்திலும் அணு சக்தி பேரழிவுகளிலும் படை வீரர்களை விட திடமாகவும் மிக துல்லியமாகவும் செயற்படும்.
இத்தனை திறமைகளைக் கொண்டுள்ள இந்த அதி நவீன ரோபோவுக்கு மூளை மட்டுமே இல்லையாம். ஆனால் அதனையும் விரைவில் பொருத்திவிட ஆராய்ச்சியாளர்கள் தயாராகிவிட்டனர்.
இதற்காக DARPA நிறுவனம் ஒரு சோடிக்கும் அதிகமான ரோபோ பொறியியலாளர்கள் குழுவினைக் கொண்டு முயற்சித்து வருகின்றது. இதில் ஒவ்வொரு குழுவும் விதவிதமான மென்பொருட்களை தயாரித்து தொடர்ச்சியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
DARPA நிறுவனத்திடமிருந்து பெற்ற 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைத்து இவ்வருட இறுதிக்குள் மென்பொருட்களை மேம்படுத்த பொறியியலாளர்கள் தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எனவே அறிவியலால் ஏற்பட்ட குறைக்கு அறிவியலே தீர்வாக விரைவில் அமையப்போகிறது. என்றாலும் அதுவும் மனித குலத்திற்கு திரும்பவிடுமோ என்ற அச்சமும் இருக்கத் தான் செய்கிறது.
இருப்பினும் இவ்வருடத்திற்குள்ளேயே அதிசயிக்கும் எந்திரனின் உதவிகளை ஆபத்துக்களில் அனுபவித்தாலும் ஆச்சரிப்படத் தேவையில்லை.
–அமானுல்லா எம்.றிஷாத்