கனவுகள் மட்டும் ஆகாயத்தை தாண்டி சிறகடித்துகொண்டிருக்க என்றைக்காவது அண்டத்தை தாண்டிச் செல்லும் எண்ணங்களை நிஜமாக்கிட எமது சிந்தை மயங்குவது சாதாரணமானதுதான். இருப்பினும் அந்தக் கனவினை நிஜமாக்குவது ஒன்றும் சாதாரணமானதல்ல என்பதுதான் நிஜம்.
ஆனால் அண்மைக்காலமாகவே டீ குடிக்கலாம் வாங்க... என்றவாறு சில நிறுவனங்களும் விண்வெளிக்குப் போகலாம் வாங்க... என மக்களுக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்து எமது எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கின்றன.
ஏற்கெனவே மார்ஸ் வன் எனும் இலாப நோக்கற்ற டச்சு நிறுவனம் ஒன்று உலகளவில் செவ்வாயில் குடியேற ஆட்களை இணைத்துக்கொண்டிருக்கிறது. அதேபோல அமெரிக்க தனியார் நிறுவனமொன்றும் நிலவுக்கு சுற்றுலா செல்ல ஆயத்தமாகி வருகிறது.
இதேபோல மேலும் சில நிறுவனங்களும் 2020ஆம் ஆண்டினைக் குறிவைத்து செவ்வாய், நிலா என விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகிவருகிறது.
ஷீரோ 2 இன்பினிட்டி
இந்நிலையில் ஷீரோ 2 இன்பினிட்டி எனும் ஸ்பெய்னைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமொன்று சாமானியர்களையும் குறைந்த விலையில் விண்வெளிக்கு அழைத்துச்செல்ல தயாராகியுள்ளது.
ஏற்கெனவே ஆபத்துக்களை எதிர்கொள்ள துணிந்த ரஷ்யாவின் அர்டமி லெபடெவ் உள்ளிட்ட மேலும் சிலர் விரைவில் இந்நிறுவனத்தின் ஊடாக விண்வெளிக்கு அண்மையில் செல்ல தயாராகிவிட்டனர்.
இதேவேளை மேற்படி நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியிலான பயணத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. இப் பயணத்தின் போது பிரயாணிகள் எந்தவொரு கிரகத்திற்கும் அழைத்துச் செல்லப்படமாட்டார்கள். மாறாக விண்வெளிக்கு அண்மையில் அழைத்துச்செல்லப்படவிருக்கிறார்கள்.
இவையெல்லாம் அனுபவிக்கலாம்
விண்வெளி வீரர்களால் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டவுள்ள இப்பணயத்தின் போது பயணிகளால் எழுந்து நிற்க முடியும் அத்துடன் புவியினை பனோரமிக் வீவ் மூலம் கண்டு மகிழலாம்.
இது மட்டுமன்றி நிறையற்ற பூச்சியநிலையை உணரும் வாய்ப்பும் கிடைக்கும் மேலும் பயணிகள் தமக்கு விரும்பிய உணவையும் பெற முடியும் என ஷீரோ 2 இன்பினிட்டி தெரிவித்துள்ளது.
இப்பயணம் குறித்து ஷீரோ 2 இன்பினிட்டி மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாப் பிரயாணிகள் செல்லவுள்ள கெப்சூல் எனும் அமைப்பை பாரிய பலூனில் இணைத்து விண்ணுக்கு செலுத்தப்படும். இந்த கெப்சூலில் ஒரே நேரத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமானிகளும் செல்லக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஷீரோ 2 இன்பினிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அன்னலி சோன்மேக்கர் கூறுகையில், இந்த பயணமானது உண்மையில் சுற்றுலாப் பயணிகளும் மிகவும் அமைதியானதாகவும் அதேவேளை ஏதுவான சுற்றாடலிலும் அமையும் சூழ்நிலையும் நிலவும்.
பயணிகளால் சூரியனையும் மேலும் பல நட்சத்திரங்களையும் அண்மையில் பார்க்ககூடியதாக அமையும். அத்துடன் பூமியின் அழகையும் மேலிருந்து அவதானிக்கலாம்.
வாழ்நாள் சிறப்புமிக்க இப்பயணத்தினை பயணிகள் நிச்சயமாக விரும்புவார்கள். இந்த கெப்சூலில் செய்யும் பிரயாணம், விமானத்தில் பயணிப்பது போல் இருக்கும். இருப்பினும் பயணம் செய்யும் கெப்சூலினுள் சுற்றுலாப் பயணிகள் 30 செக்கன் வரை நிறையை இழந்து பூச்சிய நிலையை அடைந்து மிதக்கும் அனுபவத்தை பெறலாம்.
பயணம் முழுவதும் பயணிகள் விருப்பப்படியே அமைக்கப்படும். அவர்களின் சுதந்திரம் முழுமையாக பேணப்படும். அவர்கள் விரும்பும் உணவு மேலும் கெப்சூலில் மறைக்கப்பட்ட தனியான அறைகளும் வழங்கவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
யார் பயணிக்கலாம்? குறைந்த கட்டணம்
இது இவ்வாறிருக்க தொழில்நுட்பத்தினை அதிகரிக் கச் செய்து குறைந்த செலவில் விண்வெளிக்கு அழைத்துச்செல்லவும் எதிர்பார்த்துள்ளது ஷீரோ 2 இன்பினிட்டி நிறுவ னம்.
தற்போது விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமென மட்டுப்படுத்தியுள்ள இப்பயணத்தினை சாமானிய மக்க ளுக்குமாக மாற்றியமைக்கும் முயற்சிகளை இந் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
தற்போது இப்பயணத்தில் இணைந்துகொள்ள ஒருவருக்கு மிகக் குறைந்த கட்டணமாக இலங்கை மதிப்பில் 50 இலட்சங்கள் மாத்திரமே அறவிடப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒப்பீட்டு ரீதியில் விண்வெளிக்கு செல்லுவதற்கான மிகக் குறைந்த கட்டணமாகவே இது உள்ளது.
காரணம் இந்நிறுவனம் புவி யின் மேற்பரப்பிலிருந்து விமானங்கள் செல்லும் தூரத்தைப் போன்று இருமடங்கு அதாவது சுமார் 24 கி.மீ உயரத்திற்கு செல்லவுள்ளார்கள். ஆனால் ஏற்கெனவே இவ்வகை சுற்றுலாவை ஏற்பாடு செய்த நிறுவனங்கள் வேற்றுக் கிரகங்களுக்கே செல்லுவதற்கு திட்டமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயணத்தினை ஸ்பெ யினின் கொர்டுபா எனுமிடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தாத நிலையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு 2015ஆம் ஆண்டு விண்ெவளி செல்லவுள்ள பயணத்தில் ஷீரோ 2 இன்பினிட்டி நிறுவனத்துடன் அண்மையில் இணைந்துகொண்ட ஸ்பானிஷ் பல்கலைக்கழகத் தின் நஒ (NAO) எனும் மனித ரொபோக்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் ரொபோ தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேம்படுத்த பல்கலைக்கழகம் எதிர்பார்த்துள்ளது.
எம்மவர்களுக்கு இவ்வாறான ஆபத்தான பயணங்களில் பெரியளவில் ஆர்வம் இல்லை என்று சொல்லாம். என்றாலும் மேற்கத்தியர்களுக்கு இவ்வாறான விடயங்களில் அலாதிப்பிரியமுண்டு என்பதால் விரைவில் இத்திட்டத்திற்கு பாரிய வரவேற்பு கிடைக்கப்போவது திண்ணம்.
இனி என்ன நீங்களும் அந்த 50 இலட்சத்தை மட்டும் செலுத்தி பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்.
முன்னரெல்லாம் சுற்றுலா என்றதும் அதிகபட்சமாக வெளி நாடொன்றிலுள்ள இடமொன் றைக் குறிப்பிடுவோம். ஆனால் வரும் நாட்களில் பால்வெளியிலுள்ள கிரக மொன்றை கூறினாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை!
– அமானுல்லா எம். றிஷாத்