Total Pageviews

Thursday, July 11, 2013

சிங்கம் 2 - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - ஹரி
நட்சத்திரங்கள் - சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம்
இசை - தேவி ஸ்ரீ ப்ரசாத்
ஒளிப்பதிவு - பிரியன்
எடிட்டிங் - வி.டி.

சிங்கம் படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணியில் பலத்த எதிபார்ப்புகளுக்கு மத்தியில் தனியாக திரையரங்குகளை வேட்டையாட வந்திருக்கிறது இந்த சிங்கம் 2.

தூத்துக்குடி துறைமுகத்தைப் பயன்படுத்தி ஹெரோயின் கடத்துகின்ற ஒரு கும்பலை துரைசிங்கம் என்ற பொலிஸினால் தடுத்து நிறுத்தப்படுவதே படத்தின் கதை.

இதற்காக தென்னாபிரிக்கா வில்லன், ஹன்சிகாவின் பாடசாலைக் காதல், துரைசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, விவேக், சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை என்பவற்றையும் சரியான கலவையில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் ஹரி.

மிகச் சிறிய கதைக்கு மிகப்பெரிய பலமான திரைக்கதையில் வழக்கம் போலவே இயக்குனர் ஹரி அசத்தியிருக்கிறார். சிங்கம் 1 இனை எழுத்தோட்டமாக காண்பித்துவிட்டு அதன் முடிவிலிருந்து சிங்கம் 2 படம் ஆரம்பமாகிறது. என்னவொன்று பாகம் ஒன்றில் ஒன்றரை டொன்னில் ஓங்கி அடித்த சூர்யா இதில் 10 டொன்னில் பாய்ந்தடிக்கிறார்.

அஞ்சலியின் குத்தாட்டத்துடன் ஆரம்பமாகும் போது அலுப்படையச் செய்யும் வழக்கமாக மசாலா திரைப்படம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது படம். ஆனால் இதனையடுத்து இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்கு பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது.

சிங்கம் 1இல் மக்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்யும் துரைசிங்கம், மறைமுகமாக தனது டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சம்பளமின்றிய பொலிஸ் வேலையை என்.சி ஆசிரியராக தூத்துக்குடியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து தொடர்கிறார்.

இங்கிருந்து கடத்தல் காரர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கிறார் துரைசிங்கம். கடத்தல்காரர்களின் அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்டு டி.எஸ்.பியாக பதவியேற்க நினைக்கும் துரைசிங்கம் எதிர்பாராதவிதமாக திடீரென பதவியேற்க வேண்டி ஏற்படுகிறது.

இதன் பின்னர் எவ்வாறு எதிரிகளை எதிர்கொண்டு அடித்துநொறுக்குகிறார். ஹன்சிகாவின் காதலுக்கு என்னவாகின்றது? அப்பாவின் சம்மதத்துடன் எவ்வாறு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் என்பதை படு வேகமான பரபரப்பான திரைக்கதையில் துப்பாக்கி, அருவாள் என சத்தமிட்டுக்கொண்டே சூர்யாவை வைத்து கர்ஜிக்கிறார் இயக்குனர் ஹரி.

படம் முழுவதும் மிடுக்கான பொலிஸாகவே வாழ்ந்து மொத்தப்படத்தையும் ஆக்கிரமிக்கிறார்  சூர்யா. காதல், பாசம், அதிரடி சண்டை, நடனம் என அனைத்து இடங்களில் ரசிகர்களைக்கொள்ளை கொள்கிறார். வழக்கம் போல குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் விதமாகவே கர்ஜிக்கிறார்.

அடிக்கடி மூக்கு வீங்க, கழுத்து நரம்பு புடைக்க கத்துமிடங்களுக்கு ஆங்காங்கே கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு முழுமையாக வணிக ரீதியான படத்தை எவ்வாறு கையாள்வது என்ற யுக்தியை ஹரியிடமிருந்து பல இயக்குனர்கள் அறிந்துகொள்ளலாம்.

முதன் முறையாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை மேற்கொண்டிருக்கும் ஹரி தயாரிப்பாளருக்கு மொட்டை போடாமல், தேவையானதை செய்துகாட்டியிருக்கிறார். படத்திலுள்ள ஓட்டைகளை அவதானிப்பதற்கு கூட இடமளிக்காமல் திரைக்கதையை நகர்த்தி இருப்பதே ஹரியின் வெற்றி. மேலும் இயல்பான வசனங்களாலும் ரசிக்க வைக்கிறார்.

ஆனால் 3ஆம் பாகத்தினை மனதில் வைத்து படத்தினை நகர்த்தியிருப்பதால் இறுதிக் காட்சி, படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் வழக்கமாக வில்லன்களுக்கு முடிவு கட்டும் ஹரி இப்படத்தில் வில்லன்களுக்கு என்னவாகின்றது என பாகம் 3இல் பாருங்கள் என்றவாறு அமைத்துள்ளார்.

அதிரடிக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவ்வப்போது விவேக்கும் சந்தானமும் திரையரங்கை சிரிப்பலைகளால் அதிரச் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தவாறு நகைச்சுவை காட்சிகள் இல்லை.

குறிப்பாக பாடசாலை ஆசியர்களை கேலி செய்து விட்டு பிதாவின் பெயரால் மன்னிப்புக் கேட்பது, விஸ்வரூபம் சண்டையை ஞாபமூட்டும் நகைச்சுவைக் காட்சிகள் போன்றன அட்டகாசமாய் அமைந்திருக்கிறது.

நாயகி அனுஷ்கா சில காட்சிகளுக்கு வந்து போவதுடன் கவர்ச்சியாக பாடல்களுக்கு நடனமும் ஆடுவதோடு அவரது பங்கு முடிந்தது. பாடசாலை மாணவியாக வரும் ஹன்சிகாவுக்கு ரசிகர்களின் மனதை நெருடும் வகையிலான ஓரளவு முக்கியத்துமிக்க காட்சிகள் உண்டு.

வில்லன்களாக வரும் டேனி, ரஹ்மான், முகேஷ் ரிஷி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மிரட்டும் பாணியில் அறிமுகமாகி சாதாரணமாக அடங்கிப் போகிறது இவர்களது சத்தம்.

இவர்கள் தவிர நாசர், ராதாரவி, மனோரமா, நிழல்கள் ரவி போன்றோரும் வந்து போகிறார்கள்.

ஹரியின் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியன். தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் பின்னணி இசையில் படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.


நீண்ட படத்தின் வேகத்திற்கு திரைக்கதைக்கு அடுத்தபடியாக வீ.டி. விஜயனின் எடிட்டிங்  காரணம் என்றால் தகும். தேவையான இடங்களில் கத்தரி போட்டு குறைகளை மறைக்க வழி செய்திருக்கிறார்.

சாதாரண மாசாலா திரைப்படத்தை படு விறுவிறுப்பாக கூறி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுக்கொள்ளும் இந்த சிங்கம், பரபரப்பை மிஞ்சும்!

அமானுல்லா எம். றிஷாத் / Metronews.lk