முன்னொரு காலத்தில் கணவனுடன் உடன் கட்டை ஏறிக்கொண்டிருந்த பெண்கள், விஞ்ஞானத்தின் கனவு உலகங்களுக்கு விண்கலங்களுடன் விண்ணிற்கு ஏற ஆரம்பித்து முன்னுதாரணமாய் இம்மண்ணில் பெண்களின் கண்களை விண்ணை நோக்கி பார்க்க வைத்த பெருமை ரஷ்யாவுக்கே உண்டு.
1963 ஜுலை 16ஆம் திகதி வொஸ்டக் 6 என்ற மனித விண்கலத்தில் வலென்டினா டெரஸ்கொவா என்ற பெண்ணையும் ரஷ்யா விண்ணிற்கு ஏவியது. அதுவே முதன் முறையாக பெண்மணி ஒருவர் விண்கலத்தில் விண்வெளிக்கு பயணமான முதல் சந்தர்ப்பமாகும். அன்று பெண்களுக்கான சுதந்திரத்தின் எல்லைக்கான கதவு தகர்க்கப்பட்டு விண்ணிற்கு பறந்தது டெரஸ்கொவா என்ற பெண் மட்டுமல்ல பெண்களுக்கான பல தடைகளுமே.
குனிந்த தலை நிமிரவிடாமல் பெண்களை நடக்கவிட்டு வானை மறைத்த சமூகங்களுக்கு மத்தியில் வானையும் தாண்டிச் செல்ல ஒரு பெண்ணை அனுமதித்த ரஷ்யாவின் செயற்பாட்டுக்கு பின்னர் இன்றுவரை விண்வெளிக்குச் பயணித்துள்ள 525 பேரில் 56 பெண்கள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்ணுக்குத் தெரியும் சக்திகளை விட காற்று மற்றும் உயிர் போன்ற உணரக் கூடியவற்றுக்கான சக்திகள் என்றுமே அதிகம் என்பதை ஒரு வகையில் பெண்களும் உணர்த்தி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வொஸ்டக் 6 விண்கலத்தின் பயணம் வரையில் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் பெண்களின் திறமைகளை யாரும் பெரியளவில் அறிந்திருக்கவில்லை அல்லது வெளிக்கொணர விரும்பவில்லை என்பதுவாகத் தான் இருக்க வேண்டும். காரணம் அன்று ஆண்களின் சட்டங்கள் பல பெண்களுக்கு ஆதரவளிக்கவில்லை.
ஆனால், தற்போது நிலைமைகள் அவ்வாறில்லை. உலகிலுள்ள அத்தனை துறைகளிலும் இன்று பெண்களுக்கான உரிமை என்பது நிச்சயிக்கப்பட்டதொன்றாகவே இருக்கிறது. பெண்களும் அவற்றிற்கு தகுதியானவர்களாகவே இருக்கிறார்கள். இருப்பினும் இதனையும் மீறி பெண்ணியம் என்ற பெயரில் ஆண்களை அடக்கி ஆள்வதற்கு முயற்சிக்கும் பெண்கள் கூட்டமொன்றும் இருக்கத்தான் செய்கிறது.
சரி இப்போது விடயம் அதுவல்ல. விண்வெளிக்கு முதல் பெண்மணியை சோவியத் யூனியனாக இருக்கும் போது ரஷ்யா அனுப்பி வைத்து எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு 50ஆவது ஆண்டைக் கொண்டாடும் முகமாக பெண்ணொருவரை மீண்டும் விண்வெளிக்கு அனுப்புவதற்கு தயாராகியுள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்யா இதுவரை பெண்களை விண்வெளிக்கு அனுப்-பவில்லை. தற்போது எதிர்வரும் ஆண்டு எலினா செரோவா என்ற 36 வயதான பெண்ணொருவரை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு விண்ணில் பறக்க உள்ள எலினா செரோவா, சர்வதேச விண்வெளி ஆய்வுநிலையத்தில் ஆறு மாதம் தங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள பெண்களின் விண்வெளி வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் தங்களது நாடுகளையும் பெண்களையும் பெருமைப்படுத்திய பெண்கள் தொடர்பில் சற்றேனும் அறிந்திருக்கிறோம் எனும் பெருமையானது எம்மைச் சார்ந்திருப்பது சிறப்பாக இருக்கும்.
முதன் முதலில் விண்வெளிக்கு பயணித்த பெண் என்ற பெருமை வலன்டைன் டெரஸ்கொவாவுக்கு இருப்பது போல ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லனா ஸவிட்ஸ்கியா என்ற பெண்ணே முதன் முதலில் விண்வெளியின் தரையிறங்கி நடந்தவர் என்ற பெருமையுண்டு.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சிகளில் போட்டிக்கு நின்ற அமெரிக்கா சல்லி ரைட் என்ற பெண்ணை அவரது 32ஆவது வயதில் 1983ஆம் ஆண்டில் விண்ணிற்கு அனுப்பியபோதும் 1984ஆம் ஆண்டில் கத்ரின் என்ற பெண்ணையே முதன் முதலில் விண்வெளியில் தரையிறங்கச் செய்தது. சல்லி ரைட் கடந்த ஆண்டில் ஜுலை 23ஆம் திகதி தனது 61ஆவது வயதில் புற்றுநோயினால் உயிரிழந்தார்.
இதுவரையில் விண்வெளிக்கு பயணித்த 56 பெண்களில் 45 பெண்களை அமெரிக்காவே அனுப்பி வைத்துள்ளது. அதேவேளை ரஷ்யா சோவியத் யூனியனாக இருக்கும் போது 2 பெண்களையும் சோவியத் யூனியன் பிரிந்ததன் பின்னர் ஒருவரை மாத்திரமே அனுப்பியுள்ளது.
மேலும் சீனா, ஜப்பான், வடகொரியா, ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசியா கண்டத்தைச் சேர்ந்த 5 பெண்களும் விண்வெளிக்கு சென்றுள்ளனர் என்பதில் எமக்கும் பெருமைதான். ஆனால் இவற்றில் இந்தியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பெண்கள் அமெரிக்கா சார்பாகவே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் என்பவரே அதிகளவான நாட் கள் (195 நாட்கள்) விண்வெளியில் இருந்த பெண்.
மிகச் சிறிய வயதில் பயணித்தவர் என்ற பெருமை இங்கிலாந்தினால் முதன் முதலில் அனுப்பப்பட்ட பெண் ஹெலன் ஷர்மன் என்பவரையே சாரும். இவர் தனது 29ஆவது வயதில் விண்வெளிக்கு பயணமானார்.
இவைதவிர விண்வெளிப் பயணங்களில் சாதனை நிலைநாட்ட பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் வாய்ப்பை இழந்த பெண்கள் 15 பேர் உள்ளனர்.
வாய்ப்புக் கிடைத்து விண்வெளிக்குச் சென்று உயிரிழந்தவர்களும் மூவர் உள்ளனர். இதில் எம்மவர்களுக்கு அதிகம் பரீட்சயமான கல்பனா சாவ்லாவும் அடங்குகிறார். இவரே விண்ணிற்கு சென்ற இந்தியப் பெண்மணி. இவருக்கு முதல் சுனிதா வில்லியம்ஸ் பயணித்திருந்த போதிலும் அவர் இந்தியாவில் பிறந்தவரல்ல.
2003ஆம் ஆண்டில் எஸ்.ரீ.எஸ்-107 விண்வெளி விபத் துக்குள்ளானதில் கல்பனாவும் அமெரிக்காவைச் சேர்ந்த லூறல் பீ. க்ளார்க் என்ற இன்னொரு பெண்மணியும் உயிரிழந்தார். இதேபோல 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜலென்ஜர் விபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரெஸ்னிக் என்ற பெண்ணும் உயிரிழந்தார்.
விண்வெளி ஆராய்ச்சிகளில் சாதிக்கத் துடித்து உயிரிழந்த இப்பெண்கள் விதைகளாகவே வீழ்ந்திருக்கிறார்கள். எனவே, நிச்சயமாக மரமாகவே எழு வார்கள் என்பதில் சந்தேக மில்லை.
-அமானுல்லா எம்.றிஷாத்
இக்கட்டுரையானது 08.03.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.