சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Wednesday, January 30, 2013

இதுவொரு விஸ்வரூபக் குழப்பம்


மதம் பிடித்த யானைகள் பல
மதம் பிடிக்காத யானைக்கு ஆதரவு என
மதம் பிடித்த யானைகளை தீண்டிப் பார்க்க
மதம் பிடிக்காத யானைகளெல்லாம் நகைக்க
மதம் பிடித்த யானைகள் பல
அர்த்தங்களின்றிய மகிழ்ச்சியில்...
இங்கு யானைகள் என்பது யானைகளே அல்ல!

இது கமல் ஹாசனின் பாணியில் கமலுக்காக விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான விஸ்வரூபக் குழப்பத்தின் இன்றைய நிலைமைகளே.

விஸ்வரூபம் மீதான தடை அவசியமா? இது முஸ்லிம்களின் எதிர்ப்பா இல்லை முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் எதிர்ப்பா? கமல் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை குழப்பம்? எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் என கலகத்தினை ஆரம்பிப்பதுதானா முஸ்லிம்களின் பண்பு? என இது போன்ற ஏராளமான கேள்விகளுடன் பொதுவான அனைத்து மத சினிமா ரசிகர்களின் மனதிலும் தொடரும் குழப்பத்திற்கு காரணமாக அமைந்து விட்டது கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம்.

முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் சிலர் படம் பார்ப்பதற்கு முன்னரே தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்தனர். இதனால் கமல் ஹாசனோ தன் மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க திரையிடுவதற்கு முன்பே படத்தினை முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு காண்பித்தார். ஆனால் படம் வெளியாவதற்கு முன்னரே தணிக்கை குழுவைத் தவிர்த்து வேறு எவருக்கும் எந்த நடிகரும் தனது படத்தினை காண்பித்தது கிடையாது.

இதுவே கமல் ஹாசனுக்கு டீ.ரீ.எச் சர்ச்சைக்குப் பின்னரான சோதனையாக அமைந்துவிட்டது. படத்தினை பார்த்த குறித்த அமைப்புகளின் தலைவர்கள் இப்படத்தின் காட்சிகளின் பெரும்பாலானவை இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. எனவே படத்தினை தடை செய்வதே சிறந்த முடிவு என உறுதிபடத் தெரிவித்தார்கள்.

தொடர்ந்து தமிழக அரசினால் தமிழக்கத்திலும் அதேபோல இலங்கை அரசினால் இலங்கையிலும் விஸ்வரூபத்தினை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார் கமல் ஹாசன். ஏராளமான அரசியல் பிரச்சினைகளிடையே அவருக்கு சாதகமான முடிவு நேற்றிரவு கிடைத்தது. தடையை நிறுத்தியதை எதிர்த்து தமிழக அரசு மேன்முறையீடு செய்துள்ளது. இதுவே இதுவரையில் பலரும் அறிந்த சுருக்கக் கதையாக இருக்கின்றது.

ஆனால் இந்த விஸ்வரூபக் குழப்பத்திற்கு பின்னால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்கவே முடியாது. குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தவறான அபிப்பிராயத்தை அதிகரிக்க முஸ்லிம் அமைப்பகளின் தலைவர்களே காரணமாகிவிட்டார்கள். ஏற்கனவே றிஸானா நபீக்கின் விடயத்தில் இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய சட்டங்களையும் தவறாக புரிந்துகொண்டுள்ள ஏனைய மதத்தவர்களை மேலும் இஸ்லாம் தொடர்பில் தவறான பார்வையை ஏற்படுத்த காரணமாகிவிட்டது இந்த விஸ்வரூபக் குழப்பம்.

விஸ்வரூபத்தில் தொழுது (இறைவனை வணங்குதல்), குர்ஆன் ஓதிவிட்டு கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காண்பிக்கபட்டுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காண்பிக்கப்பட்டுள்ளது. குர்ஆனை தீவிரவாதிகளின் கையேடாக காண்பிக்கப்பட்டுள்ளது. இவையே பிரதானமாக முஸ்லிம் அமைப்புகளின் குற்றச்சாட்டுக்களாக அமைகின்றது.

தீவிரவாதிகளில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் எவ்வளவுக்கு உண்மையோ அதேபோன்று முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இப்படத்தின் கதை ஆப்கானிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்பை சுற்றியே நகருகிறது. அங்கே தலிபான் எனப்படும் தீவிர அமைப்பினர் உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை ஐ.நா சபையே அறிவித்துள்ளது. முஸ்லிம்களும் தலிபானை தீவிரவாத அமைப்பாகவே கருதுகின்றனர். (மலாலா என்ற சிறுமி மீதான தாக்குதலை நினைவில் கொள்க)

அத்தீவிரவாத அமைப்பினர் குர்ஆனை வைத்திருக்கிறார்கள், இறைவனை வணங்குகிறார்கள் பின்னர் கழுத்தை அறுத்து கொலையும் செய்கிறார்கள் ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள்.

இதனைக் காட்சிப்படுத்தியிருப்பதை  தவறென சுட்டுடிக்காட்டுவது எந்த விதத்தில் நியாயம்.?

இது தவிர கமல், குறிப்பாக முஸ்லிம்களை தீவிரவாதியாக காண்பித்திருக்கிறார் என வாதம் செய்தால் அவரது ஏனைய திரைப்படங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் ஹேராமில் முஸ்லிம்களை தீவிரவாதத்தை விரும்பாதவர்களாக காண்பித்ததுடன் அன்பே சிவம் திரைப்படத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர் இந்துக்கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டே குற்றங்கள் புரிவதாக சித்தரித்துள்ளார்.

மேலும் 1992ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாபர் மசூதிஃராமர் கோயில் சர்ச்சையில் முதன் முதலில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவை சந்தித்து செயலில் இறங்கியவரும் இந்த கமலே.

இதை எல்லாம் மறந்து கமல் என்ற தனிமனிதன் மீது தாக்குதல் நடத்த தமிழக முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டனர்.   அதை உணர முடியாத முஸ்லிம்  தலைவர்களை விஸ்வரூபத்திற்கு எதிராக திருப்பி கமலை எதிர்ப்பதற்கு ஆதரவு தேடிய வகையில்,  முஸ்லிம்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் எழுந்ததும் கமல் சொத்துக்களை இழந்ததையும் தவிர வேறெதுவுமில்லை.

அந்த வகையில் முஸ்லிம் அமைப்புகளை பகடைக் காயாய்கொண்டு மேலும் தமிழக அரசியல்வாதிகள் சிலர் வெற்றிபெற்றுள்ளனர்.

இத்தடை குறித்து கமல்ஹாசன் கூறுகையில், இதுவொரு கலாசார தீவிரவாதம். இதனை எதிர்த்துப் போராடுவேன். நீதி கிடைக்கவில்லையாயின் மதம் சார்பாற்ற நாடு தேடிப் போவேன். எனக்கு மதம் கிடையாது. மனிதம் தான் முக்கியம். அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக் காயாகிவிட்டனர் என்றார்.

ஆனாலும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பீ. ஜெய்னுலாப்தீன் இந்த விவகாரத்தில் அநாகரீகத்தின் உச்சிக்கு சென்று கமலையும் அவரது மகளையும் இணைத்து பேசி மேலும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கொச்சைப்படுத்திவிட்டார்.

மாவோயிஸ்டுக்கள் இல்லையா? தனித்தெலுங்கானா கேட்டுப் போராடும் குழுக்கள், ஈழ விடுதலைக் குழுக்கள் இல்லையா? ஏன் அமெரிக்காவிலே மாபியாக் குழுக்கள், பாதாள உலகக் குழுக்கள், பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் சுட்டுத்தள்ளும்  மன நலம்  பிறழ்ந்தோர் இல்லாயா? என்று கேட்போர் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பர்மாவிலுள்ள பௌத்த அமைப்பு குறித்து படமாக எடுத்து இப்படியும் நடக்கிறது என காண்பிக்க முயற்சிக்கலாம்.

அதைவிடுத்து ஜும்ஆவின் பின்னரான ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் ஆகியன முஸ்லிம்களின்  உண்மை நிலைமைகளை வெளிக்கொணராது. அத்துடன் முஸ்லிம்களின் மீது சேறு பூச காத்திருப்பவர்களுக்கு கமலின் பெயரில் அதனைச் செய்வதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும்.

ஏனெனில் ஓங்கி வளர்ந்து நிற்கும் சினிமா என்ற ஊடகத்தை சினிமாவல் எதிர்ப்பதே இப்போதைக்கு சாத்தியம். இதனை அடுத்த தலைமுறையினர் புரிந்துகொள்வார்கள் என்பதை இப்போது ஒப்புக்கொள்ள மறுப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

அதுவே சினிமா ஹராம் (தடுக்கப்பட்டவை) என்றால் அதற்கான மாற்றுவழி என்ன என்பதை ஷரீஆவையும் (இஸ்லாமிய சட்டங்கள்) குர்ஆனையும் கேட்பதே பொருத்தம்.

 -அமானுல்லா எம். றிஷாத்

Friday, January 25, 2013

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!


நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில நம்பிக்கைகளை நம்ப மறுக்கச் செய்யும் போது அவை ஒரு நாள் எம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும் பல விடயங்களில் ஒன்றாய் மாறியதே இந்த மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்.

அமெரிக்காவின் கலிபோhனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் 'Death Valley National Park' என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட 'டிம்பிஸா' எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும்.

டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு 'கலிபோர்னியா தங்க நெருக்கடி' காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் 'Death Valley' எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் கலிபோனியா தங்க நெருக்கடி நேரத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அப்போது பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் வைத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து கனிய வள ஆய்வாளர்களால் Death Valley எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 1850ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குறித்த மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி 1933ஆம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. மேலும் 1994ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்கா 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும்.

தற்போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 1940ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சுற்றுப்பிரயாணிகளும் அங்கு சென்று வருகின்றனர். இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு.

சரி, இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம்.

குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948இலேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 - 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக் ஆரம்பித்து சமாந்தரமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது.

இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது.

இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது. இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும்.

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இப்பகுதியில் கோடைகாலத்தில் சாதாரணமாக 49 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இங்கு அதிகூடிய வெப்பநிலையாக 1913 ஜுலை மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. வரட்சியான காலத்தில் இப்பிரதேசத்தில் வெடிப்புகள் விழுந்து அவ்விடங்களில் ஐஸ் படர்ந்திருக்கும்.

கோடை தவிர்ந்த காலங்களில் ஒரு சில வகையான உயிரினங்கள் தோன்றி மறைகிறது. ஆனால் தொடர்ச்சியாக இங்கு வாழும் உயிரினங்கள் என எதுவுமில்லை.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம்.

ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது கூடவே கற்களும் தான்.

- அமானுல்லா எம். றிஷாத்



கமல் பாணியில் கமலுக்காக...

மதம் பிடித்த யானைகள் பல 
மதம் பிடிக்காத யானைக்கு ஆதரவு என
மதம் பிடித்த யானைகளை தீண்டிப் பார்க்க
மதம் பிடிக்காத யானைகளெல்லாம் நகைக்க 
மதம் பிடித்த யானைகள் பல 
அர்த்தங்களின்றிய மகிழ்சியில்...
இங்கு யானைகள் என்பது யானைகளே அல்ல!!!

வெள்ளையர்களுக்கு இஸ்லாமியர்களும், சிங்களவர்களுக்கு தமிழர்களும் தீவிரவாதிகளே. அது அவர்களுடைய பார்வையில் சரியானதே. ஆனால் உண்மை எதுவென்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிவர். 

இதனை உணராத பலரும் மதத்தை விட்டொழித்த கமலின் பெயரில் சிலர் மதங்களை விறகாய்க் கொண்டு குளிர் காய்வது சற்றே வருத்தத்தை ஏற்படுகிறது.
- அமானுல்லா எம். றிஷாத்

Friday, January 18, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா? - விமர்சனம்

நடிப்பு: சந்தானம், சீனிவாசன், சேது, விசாகா
இசை: தமன்
தயாரிப்பு: ராம நாராயணன், சந்தானம்
இயக்கம்: மணிகண்டன்

சந்தானம் - பவர் ஸ்டார் கூட்டணியில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா? படத்தின் கதை பாக்கியராஜின் இன்று போய் நாளை படத்தின் கதேயே.

எதிர்வீட்டுக்கு புதிதாய் குடிவரும் குடிவருகிறார் நாயகி விசாகா யாருக்கு என்ற போட்டியில் இணைபிரியா தோழர்களான சந்தானம், பவர் ஸ்டார் மற்றும் அறிமுக நாயகன் சேது இணைந்து அனைவரையும் சிரிக்க வைத்து இறுதியில் விசாகா யாருக்கு என்பதே கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஒரு வரிக் கதை.

ஹீரோயினைக் கவர்வதற்காக பாக்கியராஜின் படத்தில் வரும் கதாபாத்திரங்களாக வருபவர்களைப் போல இதிலும் இந்த மூவரும் நாயகியின் அம்மா, அப்பா, தாத்தா மூலம் விதவிதமான யுக்திகளைக் கையாண்டு நாயகியைக் கவர முயற்சிக்கும் அத்தனை காட்சிகளிலும் அரங்கமே அதிர்கிறது. ஆனாலும் இன்று போய் நாளை வா காலத்தின் ரசிகர்களும் பாக்கியராஜின் விசிறிகளுக்கும் இந்த காட்சிகளிலெல்லம் ஒரு உயிரோட்டம் இல்லை என்றே சொல்கிறார்கள்.

ஆனாலும் இவ்றையெல்லாம் தாண்டி திரையரங்கை சிரிப்பொலியில் அதிரச்செய்கிறது சந்தானம்-பவர் ஸ்டார் கூட்டணி. வழக்கம் போல சந்தானம் அசத்துகிறார். நம்ம பவர் ஸ்டார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் படம் முழுக்க சந்தானத்துடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். இனி பவர் ஸ்டார் வாழ்கையில் நிச்சயம் ஒரு பவர் இருக்கும்.

மூன்றாவது நாகயனாக வரும் சேதுவுக்கான வேலை குறைவு அதனை ஓரளவே பயன்படுத்தியும் இருக்கிறார். படத்தின் நாயகி விசாகா நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ்சினிமாவில் தலைகாட்டியிருக்கிறார். தன்பங்கையும் சிறப்பாக செய்திருக்கிறார் விசாகா.

இவர்கள் தவிர படத்தில் ஏனைய அம்சங்களான இயக்கம், இசை, ஒளிப்பதிவு மற்றும் வசனம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களும் படத்திற்கு தேவையானதை வழங்கி சிரிப்புக்கு உத்தரவாதமளிக்கிறார்கள்.

என்னதான் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும் 'இன்று போய் நாளை வா' படத்தின் பாதிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிவது உரிமையாளர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மேலும் படம் முடியும் போது இன்று போய் நாளை வா படம் பார்த்த சந்தானத்தின் ரசிகர்களும் பாக்கியராஜின் திரைக்கதையிலமைந்த படத்திலிருந்த உயிரோட்டோம் இதில் சற்றே குறைவுதான் என முணுமுணுக்க வைக்கிறது.

இருப்பினும் கதை திருட்டு மற்றும் ஒப்பீடு எல்லாவற்றையும் மறக்கச் செய்து பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் இனிப்பான லட்டே இந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா?

நன்றி - ஏ.எம். றிஷாத்/வீரகேசரி

Thursday, January 17, 2013

'Planet Hunters Project' : வேற்றுக்கிரகவாசிகளை நெருங்கிவிட்டோம்!


தேடிக்கிடைக்காது என்று தெரிந்தவொன்றை தேடி அலைகிறது விஞ்ஞானம் என ஒவ்வொரு தேடலிற்குமான முடிவு கிடைக்கும் வரையில் விஞ்ஞானத்தையும் அது தொடர்பிலான ஆராய்சியாளர்களையும் கேலிக் கூத்தாக எடுக்கும் ஒரு சமூகம் அன்று தொடக்கம் இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதுவே குறித்த தேடல்களுக்கான முடிவு கிடைத்துவிட்டால்...

அப்படி முடிவு கிடைத்துவிட்ட ஒரு விடயமாக விரைவிலே மாறப்போகிறது வேற்றுக்கிரகவாசிகள் என்ற அம்சமும். இதுவரை காலமாக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் கண்களுக்கு தென்படாமல் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்விடங்களை 'Planet Hunters Project' என்ற திட்டத்தின் கீழ் தன்னார்வ வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல வேற்றுக்கிரகவாசிகள் வாழும் 42 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'Planet Hunters Project' என்பது புதிய கோள்களை கண்டுபிடிப்பதற்காக சூனிவர்ஸ் எனும் இணையத்தள அமைப்பினால் தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களைப் பயன்படுத்தி புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும் Citizen Science Project என்றழைக்கப்படும் திட்டமாகும்.

இதே திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 சூரியன்களுடனான PH1 எனப் பெயரிடப்பட்ட நெப்டியூனை விட சற்றே பெரிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாசாவின் தொழில்சார் வானியல் ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த கோளினை உறுதிசெய்தது.

இதனையடுத்து உத்வேகத்துடன் செயற்பட்ட 'Planet Hunters Project' இன் 40 தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களால் இப்போது மீண்டும் 42 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல் உலகை மகிழ்சிப்படுத்தும் விதமாக மனிதர்கள் வாழ ஏதுவான காரணிகளுடன் கூடிய 15 கோள்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த 42 கோள்களில் PH2 எனப் பெயரிடப்பட்டுள்ள கோளானது சூரியத் தொகுதியிலுள்ள வியாழன் கோளின் அளவினை ஒத்தது. இதேவேளை இக்கோளின் வெப்பநிலை சுமார் 30 தொடக்கம் -80 பாகை செல்சியஸ் வரை மாற்றங்கள் ஏற்படுகிறது. இக்கோளில் மனிதன் வாழத் தேவையான கூறுகள் உள்ளது. அதாவது ஹொலிவூட்டில் வெளியான அவதார் திரைப்படத்தில் வரும் பெண்டோரா கிரகத்தினை ஒத்ததாக இருக்கும் என சூனிவர்ஸ் உறுதியாக நம்புகின்ற அதேவேளை இக்கண்டுபிடிப்பானது யார் வேண்டுமானாலும் புதிய கோள்களைக் கண்டுபிடிக்கலாம் என நம்பியளிக்கும் வகையிலமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கேப்ளர் என்ற விண்கலத்தினைக் கொண்டு நாசா பிரபஞ்சத்தை சல்லடை போட்டு பூமியை ஒத்த கோளினை தேடிக்கொண்டிருக்கிறது (கெப்ளர் தொடர்பான கட்டுரையினை நவ.30 திகதி மெட்ரோவில் பார்க்கலாம்). அந்த கெப்ளரின் துணையுடன் தற்போது 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயமானது தொழில்சார் நாசா வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பி மேலும் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தத்தளித்துக் கொண்ட வானியல் உலகிற்கு துருப்புச் சீட்டாய் கிடைத்திருக்கும் இக்கோள்கள் தொடர்பில் தொடரவுள்ள ஆராய்ச்சிகள் நிச்சயம் எம்மை விரைவில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளச்செய்யும் என்பது வானியலாளர்களின் தற்போதைய நம்பிக்கையாகவுள்ளது.

உண்மையில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லை இதுவெல்லாம் வெறும் வதந்திகளா? என்றால் இல்லை என்று ஒற்றைச் சொல்லில் மறுத்துவிடுவது இயலாத காரியம் தான். மதத்தின் பெயரிலும் சில பல நம்பிக்கைகளின் பெயரிலும் வேற்றுக்கிரகவாசிகள் என்பதெல்லாம் விஞ்ஞானத்தின் கட்டுக்கதையே என்பவர்கள் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைச் சொன்ன ஆய்வாளர்களைக் கொன்றுகுவித்தவர்களை பிரதியீடு செய்யும் மூடர்களே என்பது போல் அமைகிறது சில சான்றுகளும் விஞ்ஞானிகளின் கருத்துக்களும்.

தற்காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி. பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி வேற்றுகிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விடயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கி.மு. 384இல் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், விண்ணில் தான் கண்ட விசித்திரப் பொருட்களைச் 'சொர்க்கத்தின் தட்டுக்கள்' என விபரித்திருந்தார். இதுமட்டுமின்றி கி.மு. 329இல் மாவீரன் அலெக்சாண்டருடனான கிரேக்க இராணுவத்தின் இந்தியா நோக்கிய படை நகர்வை, வெள்ளிக்கேடயங்களையொத்த விசித்திரமான பறக்கக்கூடிய பொருட்கள் இடைமறித்ததென தெரிவிக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் விட 2002ஆம் ஆண்டளவில் இலங்கையின் புராதன பிரதேசங்களில் ஒன்றான திம்புலாகலைக்குன்றின் உச்சியில் பிரதேசவாசிகள் விசித்திரமான நீலநிற ஒளியை அவதானித்தனர். அதே காலப்பகுதியில் பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் புதுமையான ஒளி மற்றும் விண்கலத்தினையொத்த சில அமைப்புக்கள் அவதானிக்கப்பட்டதனையடுத்து அவை வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புடைடையதாக இருக்கலாமென அப்போது ஊகங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மாயன் இனத்தவர்களின் சித்திரம், சிற்பக் கலை (கவனத்தில் கொள்க இது மாயன் பெயரில் வெளிவந்த வதந்திகள் போன்றதல்ல) மற்றும் எகிப்திலுள்ள சித்திரங்கள் போன்றனவும் வேற்றுக்கிரகவாசிகள் உண்டு என்பதற்கான ஆதாரங்களாக காணப்படுகிறது. இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் தற்போது ஆய்வாளர்களின் வசம் உள்ளது.

எனவே நல்ல செய்தி வந்து சேரும் என்ற நம்பிக்கையில் அனுப்பியுள்ள வொயஜர்-1 மற்றும் கெப்ளர் விண்கலத்தின் உதவியுடன் எம்மையும் ஒரு நாள் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ளச் செய்யலாம் என்ற ஆய்வாளர்களின் நம்பிக்கை வெகுதொலைவில் இல்லை என்பது திண்ணம்!

-அமானுல்லா எம். றிஷாத்


Saturday, January 12, 2013

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!


கரையெனும் முடிவை நோக்கிய வாழ்க்கையின் நடுவே தத்தளித்து நிற்கும் மனிதர்கள்ளில் கரையையும் முடிவையும் பிரிந்தறியவல்ல ஒரு சிலரே வாழும் போதிலும் மரித்த பின்னரும் வாழ்க்கையை வெற்றி பெற்றவர்களாக எம்மிடையே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இடம்பெற்ற பலரும் தகுதிவாய்ந்தவர்கள் என்பதில் சந்தேகமேதுமில்லை. ஆனாலும் அதில் வாழும்போது அங்கீகாரம் கிடைத்தவர்கள் வெகு சிலர் என்பதில் அங்கீகாரத்திற்காய் ஏங்கும் ஒவ்வொருவருக்கும் வருத்தமே.

இருப்பினும் தற்காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு வாழும் போதே வாழ்க்கையையும் அதேபோல அங்கீகாரத்தையும் வெற்றிகொள்ள முடிந்ததில் அறிவியல் உலகே மகிழ்ச்சயில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருவில் தோன்றுபவற்றை அழிக்க முடிந்தாலும் அறிவில் தோன்றுபவற்றை அழிக்கச்செய்ய முடியாது என்பதற்கு சாட்சியாய் வாழும் அதேவேளை அறிவியல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சேர்க்கும் அறிவியலாளராக தன்னை அடையாடளம் காட்டிக்கொண்ட 'ஸ்டீபன் ஹாக்கிங்' கடந்த 8ஆம் திகதி தனது 70 வயதினை எட்டியுள்ளார்.

அவரது பிறந்த நாளை அன்று அவரால் கொண்டாட முடியாவிட்டாலும் உலகமே கொண்டாடும் படி உடலசைவுகள் எதுவுமின்றி கதிரையில் இருந்தவாறே அமைத்துக்கொண்ட ஸ்டீவ் ஹாக்கிங்கின் 'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!' என்ற வாழ்க்கையினை நாமும் அறிந்துகொள்வோம்.

அறிவியல் உலகை தன்பக்கமாய் ஈர்ப்தற்காக லண்டனில் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ப்ராங் மற்றும் இஸபல் தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு 2 சகோதரிகளும் ஒரு தத்துச் சகோதரனும் உண்டு.

2ஆம் உலகப் போரில் இடம்பெயர்ந்து சென்ற ஸ்டீபன் ஹாக்கிங் St Albans High School  என்ற மகளிர் பாடசாலையில் சில மாதங்களும் பின்னர் St Albans High School தனது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். இந்நிலையில் அவரது அப்பாவுக்கு மகனை சிறந்த பாடசாலையில் சேர்க்க புலமைப் பரீட்சை ஒன்றில் தோற்ற வேண்டியிருந்தார் ஸ்டீபன்.

அப்போது ஏற்பட்ட சுகயீனம் காரணமாக ஸ்டீபன் ஹாங்கிங்கிற்கு குறித்த பரீட்சை எழுத முடியவில்லை இதனால் வேறு பாடசாலைக்கும் ஹாக்கிங்கால் செல்லமுடியவில்லை. படிப்பில் சிறந்து விளங்கிய ஸ்டீபன் ஹாக்கிங், அப்பாடசாலையில் ஐன்ஸ்டைன் என்ற செல்லப்பெயரில் புகழ்பெற்றார். இது அவருக்கு பொருத்தமானதே என பிற்காலத்தில் உறுதிசெய்யதார் ஹாக்கிங்.

தனது 17ஆவது வயதிலேயே ஒக்ஸ்போர்ட் கல்லூரியில் மாணவராகி தனது பட்டப்படிப்பினை ஆரம்பித்தார். அங்கு 3 வருடங்கள் படிப்பினை மேற்கொண்ட ஹாக்கிங் 1000 மணித்தியாலங்கள் மட்டுமே படித்தாராம். ஆனாலும் ஒக்ஸ்போர்ட்டில் முதற் தரவகுப்பு சித்தியை BA (Hons.) பட்டப்படிப்பில் பெற்றுக்கொண்டார். இதற்காக நடத்தப்பட்ட வாய்மூலப் பரீட்சையின் போது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஸ்டீபனின் பதில் இவ்வாறமைந்தது,

'முதற் தரவகுப்பு சித்தி வழங்கினால் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் 2ஆம் தரவகுப்பு சித்தியெனில் இங்கேயே எனது மேற்படிப்பையும் தொடருவேன் எனவே நீங்கள் எனக்கு முதற் தரவகுப்பு சித்தியையே தருவீர்களென நம்புகிறேன்'

தனது 21ஆவது வயதில் நோய்வாய்ப்பட்ட ஸ்டீபனின் தசை மாதிரிகளை சோதித்த மருத்துவர்கள் அடுத்த இரண்டு-மூன்று வருடத்திற்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டார்கள்.

வைத்தியசாலையில் துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந் சிறுவனொருவன் எதிர்பாராமல் மரணிக்க ஸ்டீபனுக்கு பயத்திற்கு பதில் தைரியம் உண்டாயிற்று. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார்.

அப்போது உடல் தன் கட்டுப்பாட்டிலில்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை தெரிந்துகொண்டார். தொடர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை பூர்த்திசெய்து பேராசியரானார். "Singularities and the Geometry of Space-Time" என்ற பெயரில் ஸ்டீபன் எழுதிய ஆய்வு 'Adams Prize" விருதினை வென்றது.

இந்நிலையில் 1965ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் திகதி தனது காதலியையும் மணமுடித்தார். இதன் மூலம் மூன்று குழந்தைகளுக்கும் தந்தையானார். ஆனால் இவரின் முதலாவது திருமண வாழ்க்கை 1990ஆம் ஆண்டில் முற்றுப்பெற 1995ஆம் ஆண்டில் தன்னை கவனித்த செவிலியை மணம் முடித்தார்.

1974ஆம் ஆண்டில் ஏ.எல்.எஸ் என இனங்காணப்பட்ட ஒரு வகை நரம்பு தொடர்பான நோயினால் அவரது உடல் முழுமையாக செயலிழந்துவிட நம்பிக்கை அதிகமாக செயல்பட ஆரம்பித்தது.

தனது நம்பிக்கையின் உச்சக்கட்டமாக உடலிலுள்ள எந்த பாகமும் இயங்காத போது தனது கண்ணை அசைத்து மாணவர்களுக்கு பாடம் நடாத்தியது மட்டுமன்றி அறிவியல் உலகில் திருபுமுனையை ஏற்படுத்தும் வகையில் 'யு டீசநைக ர்ளைவழசல ழக வுiஅந' என்ற புத்தகத்தினை 1988ஆம் எல்லோரும் முட்டாள் தினமாக கொண்டாடும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தனது அறிவியல் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தின் வெற்றி ஸ்டீபனை உலகளவில் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது.

இதனையடுத்து கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணரினால் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கக்கூடிய கணனி மென்பொருளொன்று உருவாக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பொருத்திக்கொடுக்க உற்சாகமான ஸ்டீபனின் சிந்தனைகள் அதிகரிக்க ஏராளமான பயன்மிகு புத்தகங்களை வெளியிட்டு அறிவியில் உலகை தன் பக்கம் ஈர்த்தார்.

குறிப்பாக ஹிக்ஸ் பொஸன், பிரபஞ்சம் உருவான விதம், காலம் எப்போது ஆரம்பித்து எப்போது முடியும், காலத்தை பின்னோக்கிச் சென்று காணமுடியுமா என்றவான சிக்கலான கேள்விகளுக்கு புத்தகங்களினூடாக அறிவியல் ரீதியில் இலகுவாக பதில் சொல்லி வியக்கவைத்த ஸ்டீபனின் உடல் நிலை தொடர்பில் இன்றும் வியப்புதான் மிஞ்சுகிறது.

ஆனால் அவரது உடல் நிலை குறித்து பேசுகையில் ஸ்டீபன், இந்நோயினால் பாதிக்கப்பட்டதில் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் ஆழமாக சிந்தித்து புத்தகங்களை எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசுகிறார்.

ஒரு முறை பெருவெடிப்பு ஏற்படும் முன்னர் அண்டவெளி எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு, வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது! என சிந்தைமிகு பதிலளித்தார். இவ்வாறெல்லாம் ஸ்டீபன் சிந்திக்க என்ன தான் காரணம் என்றால் அவர் பின்பற்றும் 'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!' என்ற மகத்துவம்மிக்க மந்திரம் மட்டுமே...

இதே மந்திரம் இன்னும் பல ஆண்டுகள் பலித்து அறிவியல் உலகை வளர்க்க ஸ்டீபன் ஹாக்கிங் நீண்ட ஆயுளுடன் வாழ அவரது பிறந்தநாள் மட்டுமின்றி என்றும் வாழ்த்துவோம்!

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தங்கள் 
-A Brief History of Time (1988)
-Black Holes and Baby Universes and Other Essays (1993)
-The Universe in a Nutshell (2001)
-On The Shoulders of Giants (2002)
-A Briefer History of Time (2005)
-God Created the Integers: The Mathematical Breakthroughs  That Changed History (2005)
-The Grand Design(1988)

-அமானுல்லா எம். றிஷாத்




Wednesday, January 9, 2013

டீ.ரீ.எச்.இல் படத்தை வெளியிடுவது எனது புதிய வழி, நாளை இதுவே பொதுவழியாகும் : கமல்ஹாசன்


டீ.ரீ.எச.இல் படத்தை வெளியிடுவது எனது புதிய வழி, நாளை இதுவே பொதுவழியாகும் எனவே 'விஸ்வரூபம்' திரைப்படம் நிச்சயம் டீ.ரீ.எச்.இல் வெளியிடப்படும் என உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாவே விஸ்வரூபம் படத்தின் டீ.ரீ.எச் வெளியீடு தொடர்பிலான பிரச்சினை இந்திய சினிமாக உலகில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

குறித்த திட்டத்தினை ஆரம்பித்த உலக நாயகனுக்கு ஆரம்பம் முதலே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து நெருக்கடி வந்துகொண்டே இருக்கிறது. அத்துடன் இவர்களிடையேயான பேச்சுவார்த்தைகளும் முடிவு எட்டப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இப்பிரச்சினையால் கமல் ஹாசனினால் திட்டமிட்டபடி செயற்பட முடியாமல் 'விஸ்வரூபம்' படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போகிறது. இந்த பொங்கலுக்கு வெளியாகவிருந்த விஸ்வரூபம் படத்திற்கு திரையரங்க உரிமையாளர்களின் ஆதரவின்மையால் திரையரங்குகள் பற்றாக்குறை ஏற்பட மீண்டும் காலவரையின்றி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த உலக நாயகன், டீ.ரீ.எச்சில் படத்தை வெளியிடுவது எனது புதிய வழி, நாளை இதுவே பொதுவழியாகும். 'விஸ்வரூபம்' என் பொருள்.. என் அங்காடி.. இதை எப்படி விற்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

விஸ்வரூபம் திரையிடப்படும் திகதியை யார் யாரோ அறிவிக்கிறார்கள், நான் தான் திகதியை அறிவிப்பேன். வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. விஸ்வரூபம் வெளியாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் இப்படம் நிச்சயம் டீ.ரீஎச்சில் வெளியிடப்படும் இதற்கு அரசும் உத்தரவளிக்கும் என நம்புகிறேன். இது மட்டுமின்றி நாளை மக்கள் தங்களது கையடக்கத்தொலைபேசியில் படத்தை பார்க்க விரும்பினால் அதிலும் வெளியிடுவேன்.

நியாயமான முறையில் விஸ்வரூபம் படத்தினை வியாபாரம் செய்துள்ளேன். இதனால் திரையரங்குகளுக்கு எதுவித பாதிப்புமில்லை என்பதுடன் நே‌ர்மையான தொ‌ழி‌ல் நட‌த்து‌ம் தம‌க்கு ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌க்க‌க் கூடாது எ‌ன்று‌ம் கம‌ல்ஹாச‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

செப்பா இப்பவே கண்ணக்கட்டுதே....

நன்றி - AM. Rizath/வீரகேசரி

கமல் ஒரு பக்கம் போக... பிரச்சினை ஒரு பக்கம் போகிறது

Tuesday, January 8, 2013

அஜித் - விஷ்னுவர்த்தன் படத்தின் தலைப்பு ...........!


பில்லா 2 படத்திற்கு பிறகு விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டோம் ஆனால் இப்போதைக்கு வெளியிட முடியாது என இயக்குனர் விஷ்னுவர்த்தன் தெரிவித்துள்ளார்.

கொலிவூட்டில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான அஜித் - விஷ்னுவர்த்தன் படத்தின் தலைப்பிற்காக 'தல' ரசிகர்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.

இதனால் ஊடகங்களே தங்களுக்கு விருப்பமான பெயர்களை பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் தலைப்பு குறித்து விஷ்னுவர்த்தன் கருத்து தெரிவிக்கையில், 'அஜீத் படத்துக்கு மிகக் கஷ்டப்பட்டு தலைப்பு வைத்துவிட்டோம். முன்னெப்போதும் எங்களுக்கு இப்படி நேர்ந்ததில்லை. ஆனால் இப்போது அதனை அறிவிக்கப் போவதில்லை' என கூறியுள்ளார்.

இனி தல ரசிகர்களின் தலையே வெடிச்சுருமே...!

நன்றி - AM. Rizath/வீரகேசரி

Friday, January 4, 2013

நிலவிலும் அணுகுண்டு யுத்தம் : அம்பலமானது அமெரிக்காவின் திட்டம்


முன்னொரு காலத்தில் அமெரிக்கர்களுக்கும் சோவியத் யூனியர்களுக்குமிடையே விண்வெளி ஆராய்ச்சியில் ஏற்பட்ட பனிப்போரின் காரணமாக நிலவினை தகர்க்க திட்டமிட்டிருந்தனர் அமெரிக்கர்கள். தொடர்ந்து என்ன நடந்தது?.

மேலுள்ள வசனங்கள் அனைத்தும் மொழிமாற்றம் செய்த படங்கள் ஆரம்பிப்பது போல ஒரு தோரணையில் உள்ளதா? ஆனால் மேலே சொன்ன விடயம் உண்மையில் 1959ஆம் ஆண்டளவில் அமெரிக்கர்கள் அணு குண்டின் மூலம் நிலவினை வெடிக்கச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது.

சிலவேளைகளில் கற்பனைக் கதைகளை மிஞ்சும் அளவிற்கு உண்மையான சம்பவங்கள் நடந்துவிடும் போது அவை எம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும். அவ்வாறானதொரு அச்சரியமிக்க உணர்வையே ஏற்படுத்தியிருக்கிறது அமெரிக்காவின் நிலவை உடைக்கும் திட்டமான "Project A119".

அசாதாரணமாகக் கூட எமக்கு தோன்றாதவொரு சிந்தனையை செயல்படுத்த 1959ஆம் ஆண்டே முடிவுசெய்துள்ளது அமெரிக்கா.

1957ஆம் ஆண்டு முதன் முதலாக 'ஸ்புட்னிக் 1' என்ற செயற்கைக் கோளினை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி சோவியத் யூனியன் சாதனை படைத்ததுடன் ஆரம்பமானது போட்டியும் பொறாமையுடனான விண்வெளி ஆராய்ச்சிகளின் வளர்ச்சி மட்டுமல்ல நாடுகளுக்கிடையேயான பனிப்போரும்தான்.

குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் அளவுக்கதிமான கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தியதை உணர்த்துவதாகவே 'A Study of Lunar Research Flights' என்கிற இந்த "Project A119". ஏனெனில் சோவியத் யூனியன் செயற்கைக் கோளினை விண்ணுக்கு அனுப்புவதற்கு முதல் அமெரிக்காவானது இரு தடவைகள் செயற்கை கோளினை அனுப்பியது. ஆனால் அந்த இரு முயற்சிகளும் அமெரிக்காவிற்கு கைகொடுக்காமல் தோல்விலேயே முடிந்தது.

ஆனால் சோவியத் யூனியனின் முதல் முயற்சியிலே வெற்றிகிட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நிலவை வெடிக்கச் செய்யத்திட்டமிட்டது அமெரிக்கா. அவ்வாறு நிலவை வெடிக்கச் செய்து அதனை பூமியிலிருந்து பார்த்து ரசிப்பதனால் சோவியத் யூனியன் அதிர்ச்சியில் உறையும் அதேவேளை அமெரிக்கா குறித்து ஏனைய நாடுகளிடையே புதியதோர் நம்பிக்கை பிறக்கும் என்ற அற்பத்தனமாக சிந்தையில் மகிழ்ந்தது அமெரிக்கா எனத் தகவல்கள் அண்மையில் வெளியானது.

இத்திட்டம் தொடர்பில் குறித்த திட்டத்திற்கு தலைவராக செயற்பட்ட நாசாவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளாரும் இயற்பியல் துறை வல்லுனருமான லியோனார்ட் ரெய்பெல் Associate press, CNN, Daily Mail போன்ற ஊடகங்களின் மூலம் நீண்டகாலமாக மறைத்தும் பாதுகாக்கப்பட்டும் வந்த உண்மையை கூறியுள்ளார்.

"Project A119" என்ற திட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெயர் வெளியிடப்படாத ஓரிடத்திலிருந்து 2ஆம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானை உலுக்கிய 'லிட்டில் போய்' அளவுடைய அணுகுண்டை நிலவை நோக்கி அனுப்ப திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

ஹைட்ரஜன் குண்டினை விண்கலத்தில் அனுப்புவது நிறையின் காரணமாக சிரமமாக அமையும் என்பதனால் அணு குண்டை நிலவில் வெடிக்கச் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. 238,000 மைல் கடந்து நிலவின் ஒரு பகுதியில் இந்த அணுகுண்டை வெடிக்க வைப்பதே இதன் நோக்கமாக இருந்துள்ளது.

கார்ல் சாகன் என்ற இளம் விண்வெளி ஆராய்ச்சியாளரை இத்திட்டத்தின் பிரதான விஞ்ஞானியாக பயன்படுத்தியதுடன் குறித்த திட்டத்தின் தலைமை நிர்வாகியாக "Project A119" தொடர்பான கருத்தை உலகுக்கு அம்பலப்படுத்திய லியோனார்ட் ரெய்பெல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இதில் லியோனார்ட் ரெய்பல் (85 வயது) மட்டுமே உயிருடன் உள்ளார்.

சோவியத் யூனியன் 'ஸ்புட்னிக் 1' ஐ வெற்றிகரமாக ஏவியதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக தீட்டிய திட்டம் என்பதுடன் தானே உலக வல்லரசு என்பதை நிரூபிக்கவும் மட்டுமே நோக்காகக்கொண்டு சூட்சுமமாக உருவாக்கப்பட்ட குறித்த திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் அது பூமிக்கு பேராபத்தாக முடியலாம் என்பதை பின்னர் உணர்ந்துகொண்ட அமெரிக்கா  "Project A119" திட்டத்தை கைவிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அமெரிக்க அரசாங்கம் இத்திட்டத்திற்கு நேரடியாக எந்த உதவிகளையும் வழங்கியதில்லை ஆனால் மறைமுகமாக ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவுவது போல ஊக்குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து லியோனார்ட் ரெய்பெல் உண்மையை வெளியிட்ட ஊடகங்கள் அமெரிக்க விமானப்படையினை தொடர்பு கொண்டு "Project A119" குறித்து கருத்துக்கள் கேட்டபோது விமானப்படையோ கருத்துக் கூறமுடியாது என்று தெரிவித்ததாக அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள் எதிர்க் கடையை எதிரிக் கடையாக மாற்றி பொறாமையில் அழிக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை அமெரிக்கா அப்போதும் சரி இப்போதும் சரி உணர்ந்துகொள்ளவில்லை என்பதை எப்போதாவது உணர்ந்துகொண்டால் அது இந்த பூமியையும் தாண்டி சூரியக் குடும்பத்திற்கே நன்மை பயக்கும் என்பது நிதர்சனம்.

இன்றுவரை அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் நடந்துகொண்டே தான் இருக்கிறது. சோவியத் யூனியனை கூறுபோட்ட அமெரிக்காவால் இன்று ரஷ்யாவை விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பின் தள்ளிவிட முடிந்துள்ளது என்னவோ உண்மைதான் என்றாலும் அணு குண்டு உற்பத்தியில் ரஷ்யாவே முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தடுக்க ஏதாவது முயற்சிகள் மேற்கொண்(டிருந்தால்)டால் நிலைமை என்னவாகும் அது உலகப் போராக இருக்காது உலக முடிவின் போராக அமைந்துவிடும் என்பது போல மக்களிடையே பல சந்தேகங்களை அமெரிக்கா மீது ஏற்படுத்த காரணமாக அமைந்துவிட்ட "Project A119" திட்டம் உலக நாடுகளிடையேயும் தற்போது சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு வெளிவராத உண்மைகள் இன்னும் எத்தனை நாசாவை சுற்றி வருகின்றது என்பதை தெரிந்தவர்கள் தெரியப்படுத்தாமல் இறந்திருப்பார்கள் இருந்துகொண்டிருப்பார்கள்? என்பதும் பலரது கேள்வியாக உள்ளதனை உணரமுடிகின்றது.

எனவே மலர்ந்துள்ள இவ்வாண்டினை விட்டுச்சென்ற ஆண்டு உண்மையை வெளிக்கொணர்ந்து வரவேற்றதில் மேலும் பல உண்மைகள் தெரியரும் ஆண்டாக இவ்வாண்டு அமையுமா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்!

-அமானுல்லா எம். றிஷாத்