இந்திய சினிமாவில் புதிய யுக்தியை அறிமுகம் செய்ய முயற்சிக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் சர்ச்சை நாயகனாகிவிடுவார் போல தெரிகிறது தற்போதைய நிலைமைகள்.
தமிழ் சினிமாவில் புதுமைகளை புகுத்தும் உலக நாயகன், இம்முறை தான் தயாரித்து இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தினை திரையரங்குகளில் வெளியிட 8 மணித்தியாலங்களுக்கு முன்பதாகவே டீ.ரீ.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இதற்காக விஸ்வரூபம் படத்தின் ஒளிபரப்பு உரிமையை முக்கியமான டீ.ரி.எச் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்நிறுவனம் ஏனைய டீ.ரீ.எச் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விற்பனை செய்யவுள்ளது. இதில் கிடைக்கும் இலாபத்தை கமலும் டீ.ரீ.எச் நிறுவனமும் பகிர்ந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.
தொடரும் எதிர்ப்புக்கள்
இத்திட்டத்தின் மூலம் திருட்டு வீசீடி பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பது கமலின் நம்பிக்கை. ஆனாலும் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு காணப்படுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க முஸ்லிம்கள் மத்தியில் விஸ்வரூபம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளும் வலுப்பெற்று வருகின்றது.
இசை வெளியீடு
ஆனாலும் கமல் இவற்றையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இசை வெளியீட்டில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றார். சென்னையில் வை.எம்.சீ.ஏ திறந்த வெளி அரங்கிலும் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையிலும் இசை வெளியீட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார் உலக நாயகன்.
விஸ்வரூபம் படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கொள்வனது செய்துள்ள ஜெயா டீவியே இசை வெயியீட்டு ஒளிபரப்பு உரிமையையும் கைப்பற்றியுள்ளது.
கமல் விளக்கம்
இசை வெளியீடு ஒரு பக்கம் செல்ல பிரச்சினைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் இந்நிலையில், இன்று டீ.ரீ.எச் தொழில் நுட்பத்தில் வெளியிடுவது குறித்த தனது நிலைப்பாட்டினை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெளிவுபடுத்தியுள்ளார் உலக நாயகன்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதையும் அது தயாரிப்பாளரின் உரிமை என்பதையும் அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்திச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முதலும் ஏகப்பட்ட சமாச்சாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் கமல். அப்போது அவர் சந்தித்த பிரச்சினைகளை விட இது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதி. ஏன்னா அவர்தான் உலக நாயகனாச்சே
வீரகேசரியில் பகிரப்பட்டது - http://www.virakesari.lk/article/cinnews.php?vid=147