உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 22ஆம் திகதி காலையில் விழித்தெழும் போது அந்த வதந்திகள் எல்லாம் கனவாய் கலைந்துவிடும்.
21ஆம் திகதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இருப்பினும் இதுவரையில் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு கோளும் தென்படவில்லை எனவே நிச்சயம் நிபிறு என்பதெல்லாம் நிச்சயிக்கத்தக்க வதந்திகளே என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூவியை நோக்கி வரும் எரிகற்கள், கோள்கள், வால்நட்சத்திரங்ளை கண்டுபிடிக்கப்பிடிக்க முடியுமென்றால் அண்மையில் பூமியை தாக்கவிருக்கும் நிபிறு மட்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விடயமா? என்று எதிர்க் கேள்வி எழுப்பிகிறார்கள் ஆய்வாளர்கள்.
சரி அவ்வாறெனில் டிசம்பரில் ஏதாவது அசம்பாவிதங்கள் பூமியில் இடம்பெறுமா என்றால் நிச்சயமாக இல்லை என அடித்துக் கூறுகிறது நாசா. நிபிறு பிரளயம் மூலம் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆசாமிகள் பரப்பாத உண்மையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா.
அதாவது பிறக்கவிருக்கும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி பூமியை தொடாத குறையாக அஸ்டரொய்ட் ஒன்று மிக நெருக்கமாக புவியை கடந்து செல்லவிருக்கிறது. ஆனால் இந்த அஸ்டரொய்ட் புவியுடன் நிச்சயமாக மோதாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் புவியைக் கடந்து செல்வது சாதாரண விடயம்தான் என்றாலும் கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டரொய்ட்டும் இப்போது வரவுள்ள அஸ்ட்ரொய்டினை போன்று மிக நெருக்கமாக கடந்து சென்றதில்லை என்பதுவே அசாதாரணம்.
ஒவ்வொரு மாதமும் பல அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. நடப்பு மாதத்தில் கூட 3 அஸ்டரொய்ட் புவியை கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையில் அஸ்டரொய்ட்டுக்கள் என்பது கோள்களிலிருந்து பல்வேறு காரணங்களால் பிளவடைந்து அண்டவெளியில் சுற்றித் திரிகின்ற கற்கள் போன்றவொரு அமைப்பே. சில வேளைகளில் புவியின் ஈர்ப்புசக்தியினால் புவியை நோக்கி வரவும் பிளவடைவதற்கும் சாத்தியமுண்டு.
இவ்வாறு உடைபடும் கோள்கள் ஒரு சுற்று பாதையில் சுற்றி வரும் அப்போது புவிக்கு அண்மையாகவோ தூரமாகவோ அமையும், சில வேளைகளில் பூமியில் வந்து விழும். இவை பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.
வரும் பெப்ரவரி 15ஆம் திகதி 2 அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து செல்லவுள்ளது. இதில் 1999 YK 15 எனப்பெயரிடப்பட்ட ஒன்று புவியிலிருந்து 2 கோடி கிலோ மீற்றர் தொலைவில் செல்லும் அதேவேளை, 2012 DA 14 என பெயரிடப்பட்டுள்ள 48 மீற்றர் நீளமான மற்றய அஸ்டரொய்ட் ஒரு கட்டத்தில் புவிக்கு அண்மையில் அதாவது 24 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் பயணிக்கவுள்ளது. இதுவே சற்று பீதியை கிளப்புகிறது.
24 ஆயிரம் கிலோ மீற்றர் என்பது அதிக தூரமாச்சே! மேலும் இதன் அளவினை பூமியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதன் நீளம் வெறும் 48 மீற்றர்களே எனவே இதனால் என்ன பாத்திப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என எமக்கு தோன்றினாலும் விண்வெளி அலகினைப் பொறுத்தவரையில் இது மிக மிக குறைந்த தூரம். அத்துடன் புவியிலிருந்து அண்ணளவாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் ஏராளமான இணைச்சுற்று செயற்கைக் கோள்கள் (Geostationary satellites) வலம்வருகிறது.
இவ்வாறு வலம் வரும் கோள்களுக்கும் புவிக்குமிடையில் குறித்த அஸ்டரொய்ட் பயணிக்கும் போது அதன் வேகம் மணிக்கு ஏறத்தாள 22 ஆயிரம் கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் இதன்போது மோதல்கள் இடம்பெற்றால் பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என அச்சப்படுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மேலும் ஒரு வேளை இந்த அஸ்டரொய்ட் பூமியுடன் மோதுண்டால்... உண்மையில் அது மோதலாக இருக்காது அதாவது ஒரு குட்டையில் கூழாங் கல்லொன்று விழுவதற்கு ஒரு மனிதன் குதிப்பதற்கு இடையிலான வித்தியாசத்தை போன்றதே அது. எனவே இந்த அஸ்டரொய்ட்டின் பருமனின் அடிப்படையில் நோக்கினால் பூமியில் விழுந்தால் என்னவாகும் என்பதே சாலப்பொருத்தமாக இருக்கும்.
ஆனாலும் இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட் பயணிக்கும் வேகம் பல்லாயிரக் கணக்காக மீட்டராக இருக்கும் மேலும் இதன் நிறை சுமார் 5 இலட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் நிலப்பகுதியில் விழுந்தால் ஒரு கிராமம் அழியலாம் தவிர வேறு எந்த பாதிப்பும் வராது என எதிர்வுகூறப்படுகிறது.
இதுவரையில் 1353 அஸ்டரொய்ட்டுகளை பற்றிய முழுமையான தகவல்களை தன்வசம் வைத்துள்ளது நாசா. இருப்பினும் பெப்ரவரியில் வரவிருக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்கள் தொடர்பாக ஸ்பெயின் நாட்டிலுள்ள விண்வெளி ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமாக உள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என சும்மாவா சொன்னார்கள் என்பது போல அமைந்திருக்கிறது இந்த சம்பவம்.
பூமியைப் போலவே, இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட்டும் சூரியனைச் சுற்றிவருகிறது. இதற்கு முறையே 365.24 நாட்களும் 365.24 நாட்களையும் எடுத்துக்கொள்கிறது. மேலும் இவற்றின் சுற்றுப்பாதைகளும் அருகருகே உள்ளது.
இதனால் ஆண்டுக்கு இருமுறை புவியை கடந்து செல்லுகின்றது. கடந்த முறை புவியை கடந்து செல்லும் போது பூமிக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்குமிடையிலான தூரம் சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் கிலோ மீட்டராக இருந்தது.
இவ்வாறு பல்லாண்டு காலமாக புவியைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டானது இப்போது பூமியில் வந்து விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. மேலும் இந்த அஸ்டரொய்ட்டினால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அடித்துக் கூறுகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.
2012 DA 144 அஸ்டரொய்ட்டு பூமியை கடந்து செல்லும் காட்சியைக் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தில் ஒன்றுகூடி காண்பத்றகு ஆயத்தமாகவுள்ளனர். இந்த அஸ்டரொய்ட்டினை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. இதனால் சக்திமிக்க பைனகுலர்ஸ் மற்றும் டெலஸ்கோப்பினூடாகவே காண முடியும் எனக் கூறப்படுகிறது.
தொடரும் உலக அழிவு தொடர்பான பீதிகள்...
முடியுமானால் பார்த்து ரசிக்க வேண்டிய இந்த அரிய காட்சியை உலக அழிவு என்ற வதந்தியுடன் சேர்த்து பீதியை கிளப்ப இப்போதே சிலர் ஆயத்தமாகிவிட்டார்கள்.
இவ்வாறனவர்களினால் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இன்னும் சில ஐரோப்பா நாடுகளிலும் மக்களிடையே வீணான அச்சத்தினால் சில மூடநம்பிக்கைககள் தளைத்தோங்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் தெற்கு பிரதேசத்தில் உள்ள பேர்காஜ் எனும் ஊரிலுள்ள மலை ஒன்றின் மேல் வேற்றுக் கிரகவாசிகளினால் ஒரு விண்கலம் அனுப்படும் அதில் இடம் கிடைக்கும் மனிதர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கிடக்கின்றது.
இதனால் அந்த ஊரிற்கு ஏராளமானவர்கள் கடந்த சில வாரங்களாக குடிபெயர ஆரம்பித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வூருக்குள் வெளியாட்களை அனுமதிப்பதனை தவிர்க்க பாதுகாப்புப் படையினரை குவித்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம். இதேபோல இங்கிலாந்திலும் ஒரு இடத்தில் மக்கள் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சில பாகங்களிலும் பறக்கும் கற்கள்
வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள நம்பிக்கைகள் எம்மவர்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதனை தவிர்க்க முடியவில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கம்பஹா, அநுராதபுரம் மற்றும் சில பகுதிகளில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட் போன்ற வகையான கற்கள் வானத்தில் தென்பட்டு வருகின்றது.
ஆனாலும் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இது போதாதா? வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவலாய் சிக்கியுள்ளது இந்த பறக்கும் கற்கள். தற்போது இவர்கள் தங்களது விருப்பத்திற்கு புரளியை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார்கள்.
எனவே அவ்வாறானவர்கள் போலி வார்த்தைகளை நம்பி அவற்றை ஏனையோரிடமும் பரவச்செய்து 22ஆம் திகதி விடியும் இனிய பொழுதில் வெட்கித்து நிற்பதை தவிர்க்க முயற்சிப்போம்!
இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள எனது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரையே இது "நிபிறு போனாலென்ன...? அஸ்டரொய்ட் வருதே!"