Total Pageviews

Thursday, December 6, 2012

SMS sevai aarampiththu 20 varudangal! : இதுவொரு புது அனுபவம்


'ennathan udambula koadik kanakka cellkal irunthalum onrila kooda sim card poda mudiyathey' இதை எங்கயோ கேட்டமாதிரி இருக்குமே? ஆமாங்க நீங்களோ இல்லை உங்க நண்பரோ இந்த மொக்கை தத்துவத்தை குறுந்தகவலில் (SMS) படித்ததாக கூறி எப்போதாவது ஒரு நாள் சிலாகித்திருப்பீர்கள்.

இவ்வாறு இப்போதைய இளைஞர்களையும் ஆர்வமிக்க பெரியோரையும் ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருக்கும் குறுந்தகவல் என்ற சமாச்சாரம் ஆரம்பமாகி 20 வருடங்களை கடந்த 3ஆம் திகதி எட்டியது.

நாட்கள் நடைபோடுகின்ற வேகத்தில் ஒரு நிமிடத்தினை விட்டாலும் அதனை துரத்திப்பிடிக்க ஆயிரம் நாட்கள் வேண்டும் என்றாகிவிட்ட நிலையில் வாழ்க்கையில் எவற்றையெல்லாமோ சுருக்கிக்கொண்டிருக்கும் எமக்கு எழுத்துருக்களை சுருக்க வழி வகுக்க காரணமானவற்றில் இந்த குறுந்தகவலும் ஒன்று.

எத்தனை பெரிய விடயமாக இருந்தாலும் 160 எழுத்துக்களுக்குள் அடக்கி ஆழும் திறமையைக் கொண்டுள்ள குறுந்தகவலின் வளர்ச்சி பற்றி கூற 160 குறுந்தகவல் கூட பேதாது என்பதை கையடக்கத் தொலைபேசியின் விசைப்பலகையுடன் பயணிக்கும் பலருக்கும் தெரியும்.

தமிங்கிலம் (Tamilai aangilaththil eluthuvathu) போல இன்னும் ஏராளமான மொழிகளுக்கு பொதுமொழியாக இருக்கும் குறுந்தகவலின் நெடும் பயணம் பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியலாளர் நீல் பப்வொர்த் தனது ஓபிடெல் 901 செல்போனில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலமாக ரிச்சர்ட் ஜர்விஸுக்கு அனுப்பிய "Merry Christmas" என்ற வாழ்த்துச் செய்தியுடன் ஆரம்பமான குறுந்தகவலுக்கு அப்போது ரிச்சர்டினால் பதிலளிக்க முடியவில்லை.

இந்த சம்பவத்தின் போதே உலகில் முதன் முதலாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது. இவ்வாறே குறுந்தகவலாக்கும் வல்லமை கொண்ட நெடுந்தகவல் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனாலும் வியாபார ரீதியாக உலகையே சுருக்கும் குறுந்தகவல் சேவையானது 1993ஆம் ஆண்டு ஸ்வீடனில் முதன் முறையாக டெலியா என்ற நிறுவனத்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன் பிறகு அதே ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் இச்சேவை ஆரம்பமானது.

இக்காலப் பகுதியில் அதிகமான நிறுவனங்கள் பேஜர் தொடர்பானவற்று அதிகளவில முதலீடு செய்துகொண்டிருக்க நொக்கியா நிறுவனமோ குறுந்தகவல் சேவையுடன் கூடிய நொக்கியா-2110 என்ற மாதிரி போனை 1994ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்து வைத்து குறுந்தகவல் வளர்ச்சியை ஏற்படுத்த ஆரம்பித்தது.

மக்களும் எழுத்து மூலமாக தாமாகவே பேச பெரிதும் ஆசைப்பட்டதனால் பேஜருக்கு மூடு விழா வைக்கச் சொல்லியது போல் அமைந்தது குறுந்தகவலின் வருகை.

இந்நேரத்தில் வொடாபோன் நிறுவனம் இலவசமாக இந்த சேவை வழங்கி அசத்தியது. இது ஒரு வலையமைப்புக்குளே என்று குறுகலாக காணப்பட்டது. ஆனாலும் இச்சேவையானது அதிரடியாக லண்டன் மாணவர்களிடையே குறுகிய காலப்பகுதியிலேயே பிரபல்யமடையலாயிற்று.

மாணவர்கள் விரைவாகவும் அதேவேளை சுருக்கமாகுவும் வார்த்தை மூலம் பேசிகொள்வதை விருப்பத்துடன் பாஸ்ட் பூட்டினை போல தங்களுக்குள் பொருந்தச் செய்துகொண்டனர்.

இத்தனைக்கும் இன்றுபோலல்ல அன்று வெறும் 160 எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என மட்டுப்படுத்தி இது குறுந்தகவல் மாத்திரமே என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மேலும் அது வேகம் குறைந்ததாகவும் இப்போதுள்ள பல வசதிகள் இன்றியும் காணப்பட்டது.

இருப்பினும் குறுந்தகவலின் வரவேற்பினை மட்டுப்படுத்த முடியாமல் போவதினை உணர்ந்துகொண்ட நிறுவனங்கள் 1999ஆம் ஆண்டிலிருந்து பல வகையான வலையமைப்புக்களுக்கும் அனுப்பலாம் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்து அதற்கு ஒரு கட்டணத்தையும் நிர்ணயித்தது.

இதனால் மேலும் வலுவடைந்த குறுந்தகவல் சேவை 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1 பில்லியன் குறுந்தகவல்கள் அனுப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இது தொடர்பில் இங்கிலாந்தின் டெலிகிராப் குறிப்பிடுகையில், 'குறுந்தகவல் சேவையானது அவர்களுடைய மொழிகளை மட்டுப்படுத்த வித்திட்டுள்ளது, சைகைகளையும் குறிகளையும் வசனங்களை நசுக்குகின்றனர்' என சுட்டிக்காட்டியிருந்தது.

2001ஆம் ஆண்டிற்கு பின்னரான குறுந்தகவல் சேவையின் வளர்ச்சி அளப்பரியதாகிவிட்டது. ஆனால் டெலிகிராப் பத்திரிகையின் வார்த்தைகள் நிரூபணமாகியுள்ளதை உண்மையில் மறுக்க முடியவில்லை. மனிதனின் மனங்களைப் போல வார்த்தைகளும் குறுகலாவிட்டது. உதாரணமாக தமிழ்மொழி tamilmoliஆகிவிட்டது.

நலமா? என்ற சிறிய வார்த்தை கூட 5n? என்றாகிவிட்டது. இதேபோலtks, lyk, gud 9t என ஏராளமான வார்த்தைகளுண்டு  இவை குறுந்தகவல் விரும்பிகளுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவை எல்லாம் எமக்கு உணர்த்துவது தமிழ்மொழி மட்டுமல்ல ஏனைய மொழிகளும் இனி மெல்லச் சாகும் என்பதையே.

மேலும் கடிதங்களில் உறவு கொண்டாடிய பல சொந்தங்களை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டு அவற்றிலிருந்த பாசத்தையும் உடனடியான பாசமாய் சுருக்கி, மொழிககளின் இனிமையையும் கொன்று குவிக்கின்றது என்று மொழிகளை விரும்பும் பலரிடையே அளவுக்கதிகமான புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது இந்த குறுந்தகவல் சேவை.

இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பிறகு குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் மக்களில் பலர் வசதிகள் அதிகமுள்ள ஸ்கைப், கூகுள் டோக், மெசஞ்சர், நிம்பஸ் போன்றவற்றையே அதிகம் விரும்புகின்றனர். என்ன வந்தாலும் போனாலும் குறுந்தகவலே சிறந்த வழி என்ற ஒரு இளைஞர் கூட்டம் இருக்கும் வரையில் குறுந்தகவல் சேவை குறையப்போவதில்லை என்பது உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.

உண்மையில் எது எவ்வாறு இருப்பினும் இந்த குறுந்தகவல் சேவையை புறந்தள்ளிவிட முடியாத நிலையிலேயே இப்போது நாம் அனைவரும் இருக்கிறோம். தற்போது ஒவ்வொரு செக்கனுக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வர்த்தம், ஊடகம், விளையாட்டு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மருத்துவம் என இன்னும் பலவகையான துறைகளிலும் எழுத்தூண்றி நிற்கிறது இந்த குறுந்தகவல் சேவை.

ஆகவே 20 ஆண்டுகளை வெற்றிகரமா பூர்த்தி செய்து 21ஆவது ஆண்டில் கால்பதிக்கும் குறுந்தகவல் சேவைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு எந்த சேவை இந்த குறுந்தகவல் சேவைக்கு முட்டுக்கட்டைபோடும் என்பதை யூகித்துக்கொண்டிருப்பதைத் தவிர வழியேதுமில்லை.

எனவே அதுவரை குறைகளையும் குற்றங்களையும் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு குறுந்தகவலில் வரும் பெருந்தகவல்களால் முன்னேறவும் முன்னேற்றவும் முயற்சிப்பதே சிறப்பு.

அமானுல்லா எம். றிஷாத்

Note : இது மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.