சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Thursday, January 17, 2013

'Planet Hunters Project' : வேற்றுக்கிரகவாசிகளை நெருங்கிவிட்டோம்!


தேடிக்கிடைக்காது என்று தெரிந்தவொன்றை தேடி அலைகிறது விஞ்ஞானம் என ஒவ்வொரு தேடலிற்குமான முடிவு கிடைக்கும் வரையில் விஞ்ஞானத்தையும் அது தொடர்பிலான ஆராய்சியாளர்களையும் கேலிக் கூத்தாக எடுக்கும் ஒரு சமூகம் அன்று தொடக்கம் இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதுவே குறித்த தேடல்களுக்கான முடிவு கிடைத்துவிட்டால்...

அப்படி முடிவு கிடைத்துவிட்ட ஒரு விடயமாக விரைவிலே மாறப்போகிறது வேற்றுக்கிரகவாசிகள் என்ற அம்சமும். இதுவரை காலமாக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் கண்களுக்கு தென்படாமல் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்விடங்களை 'Planet Hunters Project' என்ற திட்டத்தின் கீழ் தன்னார்வ வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல வேற்றுக்கிரகவாசிகள் வாழும் 42 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'Planet Hunters Project' என்பது புதிய கோள்களை கண்டுபிடிப்பதற்காக சூனிவர்ஸ் எனும் இணையத்தள அமைப்பினால் தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களைப் பயன்படுத்தி புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும் Citizen Science Project என்றழைக்கப்படும் திட்டமாகும்.

இதே திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 சூரியன்களுடனான PH1 எனப் பெயரிடப்பட்ட நெப்டியூனை விட சற்றே பெரிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாசாவின் தொழில்சார் வானியல் ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த கோளினை உறுதிசெய்தது.

இதனையடுத்து உத்வேகத்துடன் செயற்பட்ட 'Planet Hunters Project' இன் 40 தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களால் இப்போது மீண்டும் 42 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல் உலகை மகிழ்சிப்படுத்தும் விதமாக மனிதர்கள் வாழ ஏதுவான காரணிகளுடன் கூடிய 15 கோள்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த 42 கோள்களில் PH2 எனப் பெயரிடப்பட்டுள்ள கோளானது சூரியத் தொகுதியிலுள்ள வியாழன் கோளின் அளவினை ஒத்தது. இதேவேளை இக்கோளின் வெப்பநிலை சுமார் 30 தொடக்கம் -80 பாகை செல்சியஸ் வரை மாற்றங்கள் ஏற்படுகிறது. இக்கோளில் மனிதன் வாழத் தேவையான கூறுகள் உள்ளது. அதாவது ஹொலிவூட்டில் வெளியான அவதார் திரைப்படத்தில் வரும் பெண்டோரா கிரகத்தினை ஒத்ததாக இருக்கும் என சூனிவர்ஸ் உறுதியாக நம்புகின்ற அதேவேளை இக்கண்டுபிடிப்பானது யார் வேண்டுமானாலும் புதிய கோள்களைக் கண்டுபிடிக்கலாம் என நம்பியளிக்கும் வகையிலமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கேப்ளர் என்ற விண்கலத்தினைக் கொண்டு நாசா பிரபஞ்சத்தை சல்லடை போட்டு பூமியை ஒத்த கோளினை தேடிக்கொண்டிருக்கிறது (கெப்ளர் தொடர்பான கட்டுரையினை நவ.30 திகதி மெட்ரோவில் பார்க்கலாம்). அந்த கெப்ளரின் துணையுடன் தற்போது 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயமானது தொழில்சார் நாசா வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பி மேலும் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தத்தளித்துக் கொண்ட வானியல் உலகிற்கு துருப்புச் சீட்டாய் கிடைத்திருக்கும் இக்கோள்கள் தொடர்பில் தொடரவுள்ள ஆராய்ச்சிகள் நிச்சயம் எம்மை விரைவில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளச்செய்யும் என்பது வானியலாளர்களின் தற்போதைய நம்பிக்கையாகவுள்ளது.

உண்மையில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லை இதுவெல்லாம் வெறும் வதந்திகளா? என்றால் இல்லை என்று ஒற்றைச் சொல்லில் மறுத்துவிடுவது இயலாத காரியம் தான். மதத்தின் பெயரிலும் சில பல நம்பிக்கைகளின் பெயரிலும் வேற்றுக்கிரகவாசிகள் என்பதெல்லாம் விஞ்ஞானத்தின் கட்டுக்கதையே என்பவர்கள் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைச் சொன்ன ஆய்வாளர்களைக் கொன்றுகுவித்தவர்களை பிரதியீடு செய்யும் மூடர்களே என்பது போல் அமைகிறது சில சான்றுகளும் விஞ்ஞானிகளின் கருத்துக்களும்.

தற்காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி. பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி வேற்றுகிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விடயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கி.மு. 384இல் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், விண்ணில் தான் கண்ட விசித்திரப் பொருட்களைச் 'சொர்க்கத்தின் தட்டுக்கள்' என விபரித்திருந்தார். இதுமட்டுமின்றி கி.மு. 329இல் மாவீரன் அலெக்சாண்டருடனான கிரேக்க இராணுவத்தின் இந்தியா நோக்கிய படை நகர்வை, வெள்ளிக்கேடயங்களையொத்த விசித்திரமான பறக்கக்கூடிய பொருட்கள் இடைமறித்ததென தெரிவிக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் விட 2002ஆம் ஆண்டளவில் இலங்கையின் புராதன பிரதேசங்களில் ஒன்றான திம்புலாகலைக்குன்றின் உச்சியில் பிரதேசவாசிகள் விசித்திரமான நீலநிற ஒளியை அவதானித்தனர். அதே காலப்பகுதியில் பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் புதுமையான ஒளி மற்றும் விண்கலத்தினையொத்த சில அமைப்புக்கள் அவதானிக்கப்பட்டதனையடுத்து அவை வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புடைடையதாக இருக்கலாமென அப்போது ஊகங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மாயன் இனத்தவர்களின் சித்திரம், சிற்பக் கலை (கவனத்தில் கொள்க இது மாயன் பெயரில் வெளிவந்த வதந்திகள் போன்றதல்ல) மற்றும் எகிப்திலுள்ள சித்திரங்கள் போன்றனவும் வேற்றுக்கிரகவாசிகள் உண்டு என்பதற்கான ஆதாரங்களாக காணப்படுகிறது. இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் தற்போது ஆய்வாளர்களின் வசம் உள்ளது.

எனவே நல்ல செய்தி வந்து சேரும் என்ற நம்பிக்கையில் அனுப்பியுள்ள வொயஜர்-1 மற்றும் கெப்ளர் விண்கலத்தின் உதவியுடன் எம்மையும் ஒரு நாள் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ளச் செய்யலாம் என்ற ஆய்வாளர்களின் நம்பிக்கை வெகுதொலைவில் இல்லை என்பது திண்ணம்!

-அமானுல்லா எம். றிஷாத்


Friday, November 30, 2012

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வெற்றிக்கிக்கும் உந்துசக்தியாகின்றது. அவ்வகையில் ஒவ்வொரு தேவைக்குமான மாற்றீட்டினை கண்டுபிடித்து வரும் அறிவியல் உலகத்தில் பூமிக்குரிய மாற்றீடு என்ன? என்ற தேடலும் முக்கியமான ஒன்று.

பல வருடங்களாகவே நடைபெறும் இந்த தேடலின் மற்றுமொரு வளர்ச்சியே கெப்ளர் விண்கலம். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பூமியை போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய கிரகத்தினைத் தேடி கெப்ளர் எனும் விண்கலத்தினை அண்டவெளியில் தீவிரமாக அலையவிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அண்டவெளியை கெப்ளர் போட்டுத் தேடிப்பார்த்தும் புவியை ஒத்த எந்த கிரகமும் இதுவரையில் சிக்கவில்லை. ஆனாலும் கிடைக்கிறது - என்றைக்குமே கிடைக்காமல் இருக்காது என்ற நம்பிக்கையில் தொடர்கிறது ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள்.

ஏன் குறிப்பாக பூமி மாதிரியான ஒரு கிரகத்தினை ஆய்வாளர்கள் தேடியலைகிறார்கள்? மனித சனத்தொகை வளர்ச்சியானது 1950ஆம் ஆண்டுகளில் பின்னர் படுவேகமாக ஜே வடிவில் வளர்ந்து இன்று சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி அண்ணளவாக 7.1 பில்லின்கள் ஆகும். இதுவே 2025ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் 8 பில்லினுக்கும் (8,000,000,000) அதிகமாகிவிடும் என்கிறது ஆய்வுகள்.

இதனால் காலப்போக்கில் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவுசெய்வதே சாதனைக்குரியனவாய் மாறிவிடும். நீர், நிலம் மற்றும் வாயு போன்றவற்றுக்கே தட்டுப்பாடு நிலவலாம். ஏனெனில் அதிகரித்துவரும் சனத்தொகையினால் இவைகள் வெகுவிரைவாகவே மாசடைந்து விடும்.

எனவே மனித குலத்தினை காப்பாற்றுவதனை நோக்காக கொண்டே வேற்றுக்கிரக வாசிகள் மற்றும் பூமியை ஒத்த கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதர்களின் மாதிரியிலமைந்த வேற்றுக்கிரகவாசிகள் புவியை ஒத்த கிரகத்திலேயே இருப்பார்கள் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கையிலமைந்த எதிர்பார்ப்பே.

சூரிய மண்டலத்திலிருக்கும் ஒன்பது கிரகங்களில் எதிலும் உயிரினங்கள் வாழத் தேவையான கூறுகள் எதுவும் இல்லை. இதனாலேயே அண்டவெளியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்களில் பூமி மாதிரியான கிரகங்கள் இருக்கின்றனவா? என்று அறிய கெப்ளர் விண்கலத்தினை அண்டவெளியில் உலவவிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் புவியை ஒத்த கிரகம் என்பது அளவில் ஒத்திருப்பதோ சூரினைச் சுற்றி வரவேண்டும் என்பதோ இல்லை. தட்ப வெப்ப நிலைகள், காற்று மண்டலம், காற்றழுத்தம், நட்சத்திரத்திற்கும் கிரகத்திற்குமிடையிலான தூரம் மற்றும் இன்ன பிற காரணிகள் போன்றன புவியை ஒத்திருக்க வேண்டும். அதாவது மனிதன் வாழ ஏதுவான காரணிகள் காணப்படவேண்டும்.

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் புவியிலுள்ள அந்தாட்டிக்கா பிரதேசத்திலேயே எம்மால் வாழ முடியாது காரணம் அங்கு நிலவும் குளிரான சூழல். இசைவாக்கமடைந்தால் முடியுமே என நாம் எண்ணக்கூடும். அவ்வாறில்லை மீனுக்கு நீச்சல் கற்றுத்தரத் தேவையில்லைதான் ஆனால் அது தண்ணீரில் மட்டுமே சாத்தியம்!

சரி, ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களின் நிலைமைகள் என்னவென்று பார்ப்போமானால் வெள்ளிக் கிரகமானது புவியின் அளவை ஒத்தது என்றாலும் தீம்பிளம்பு போல சூடாக உள்ளதுடன் கூடிய காற்றழுத்தம் காரணமாக இங்கு செல்லும் விண்கலங்களே சுக்குனூறாக வெடித்துச்சிதறும். புதன் கிரகத்திலோ வெப்பமும் குளிரும் அசாதாரணமாக மாறி மாறி வருகின்றது.

இதேவேளை புவிக்கு அடுத்து வரும் செவ்வாய் கிரகமே தற்போது அதிக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட காணப்பட்டுள்ளதாக அண்மையில் கியூரியோசிட்டி விண்கலம் மூலம் கண்டுபிடிக்கபட்டது. ஆனாலும் அங்கு காணப்படும் குளிர் விபரீதமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

செவ்வாய்க் கிரகத்திலேயே குளிர் வாட்டுகிறது என்றால் சூரியனிலிருந்து தூரம் அதிகரித்துச்செல்லும் வழியிலுள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளுட்டோ போன்ற கிரகங்களின் நிலைமைகளை சிந்திப்பார்க்கவே முடியாதுள்ளது. மிகக் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அவையெல்லாம் ஐஸாக உறைந்து காணப்படுகிறது.

இவை தவிர பூமியில் காணப்படும் காற்றுமண்டலமானது ஆபத்தான புற ஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிறது. மேலும் சூரியனிலிருந்து, தகுந்த தட்ப வெப்ப நிலைகள் கிடைக்கும் தூரத்தில் உள்ளதுடன் பூமி தகுந்த வேகத்தில் சுழல்வதனால் இரவும் பகலும் தேவையான அளவில் கிடைக்கிறது. இல்லையேல் எமக்கும் ஒரு பக்கத்தில் வாட்டப்படும் உணவு வகைகளின் நிலைமைதான்.

சந்திரன் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் காணப்படுகின்ற போதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் காப்பு சந்திரனில் இல்லை. அத்துடன் தொடர்ந்து 14 நாள் வெயில் பின்னர் 14 நாள் குளிர் என இருப்பதனால் மனிதன் வாழ சந்திரனும் உகந்தாக இல்லை.

இவ்வாறு உயிரினங்கள் வாழ ஏதுவாக புவி திடமாக உள்ளது போல் ஞாயிற்றுத் தொகுதியில் வேறு கிரகங்கள் இல்லை என்பதே தற்போது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கெப்ளர் விண்கலம் இதுவரையில் சுமார் நூற்று ஐம்பது ஆயிரம் கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இதில் சில கிரகங்கள் - அது சுற்றும் சூரியன் போன்ற நட்சத்திரத்திலிருந்து புவி அமைந்துள்ள தூரத்தை ஒத்த தூரத்தில் காணப்படுகிறது. அவையே தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் துருப்புச் சீட்டாகவும் இருக்கிறது. அவை தொடர்பில் மேலும் பகுத்தாராயப்பட்டு வருகிறது எனவே சிலவேளை அவற்றில் புவியை ஒத்த கிரகம்(கள்) இருக்கலாம் என்பது ஆராய்வாளர்களின் நம்பிக்கை.

கிரகங்களை இந்த கெப்ளர் விண்கலம் எப்படி கண்டுபிடிக்கிறது தெரியுமா? இரவு வானில் தெளிவாக தெரியும் நட்சத்திம் திடீரென மறையும்போது வானில் மிக உயரத்தில் பறக்கும் விமானத்தின் ஓசைகள் எதுவுமின்றி அங்கே விமானம் செல்லுகிறது என்று நாம் சாதரணமாக எதிர்வுகூறுவது போலவே வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது கெப்ளர்.

கெப்ளர் அனுப்புகின்ற அவ்வாறான படங்கள், தகவல்கள்களைக் கொண்டு நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து குறித்த நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.

தற்போது கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணிகள் முடிவடைந்த போதிலும் மேலும் நான்கு ஆண்டுகள் அண்டவெளியில் தனது ஆராய்ச்சியைத் தொடரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்றுக் கிரகவாசிகளை தேடி சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லுகிறது வொயஜர் - 1 

இதேவேளை 1977ஆம் ஆண்டு நாசாவினால் விண்ணுக்கு அனுப்பபட்ட வொயஜர்-1 என்ற ஆளில்லா விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை நன்கு ஆராய்ந்து அரிய பல படங்களையும் அனுப்பி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக வேலையாக வேற்றுக்கிரகவாசிகளை தேடி சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் (இது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு) வரை சென்று சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வொயஜர்-1 விண்கலத்தில் ஒரு இறுவட்டு (CD) உள்ளது. இதில் ஞாயிற்றுத் தொகுதி குறித்த விடயங்களும் ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் படங்கள், 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி மற்றும் பூமியிலுள்ள பல்வேறு வகையான இசை வடிவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வொயேஜரில் மூன்று அணுசக்தி மினகலங்கள் (Batteries) உள்ளதாகவும் இவை 2025ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆகவே அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான கிரகங்களில் எங்கோ ஒரு கிரகத்தில் எம்மை விட அறிவில் மிஞ்சிய அல்லது குறைந்த வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கிறார்கள் என நம்பிக்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தின் மூலம் புவியையும் மனிதர்களையும் அவர்கள் அடையாளம் காண வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எங்கோ ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரகவாசியின் குரல் கேட்கிறது. அதை நோக்கிய வொயஜரின் பயணமும் தொடர்கிறது. எம்மைத் தொடர்புகொள்ள அவர்களும் முயற்சிக்கிறார்கள் விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் என்ற விஞ்ஞானிகளின் நம்பிக்கை - வெற்றிபெறும் தேடலின் பயணமாக தொடர்கிறது.

- அமானுல்லா எம். றிஷாத்