மதம் பிடித்த யானைகள் பல
மதம் பிடிக்காத யானைக்கு ஆதரவு என
மதம் பிடித்த யானைகளை தீண்டிப் பார்க்க
மதம் பிடிக்காத யானைகளெல்லாம் நகைக்க
மதம் பிடித்த யானைகள் பல
அர்த்தங்களின்றிய மகிழ்ச்சியில்...
இங்கு யானைகள் என்பது யானைகளே அல்ல!
விஸ்வரூபம் மீதான தடை அவசியமா? இது முஸ்லிம்களின் எதிர்ப்பா இல்லை முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் எதிர்ப்பா? கமல் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை குழப்பம்? எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் என கலகத்தினை ஆரம்பிப்பதுதானா முஸ்லிம்களின் பண்பு? என இது போன்ற ஏராளமான கேள்விகளுடன் பொதுவான அனைத்து மத சினிமா ரசிகர்களின் மனதிலும் தொடரும் குழப்பத்திற்கு காரணமாக அமைந்து விட்டது கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம்.
முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் சிலர் படம் பார்ப்பதற்கு முன்னரே தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட ஆரம்பித்தனர். இதனால் கமல் ஹாசனோ தன் மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க திரையிடுவதற்கு முன்பே படத்தினை முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு காண்பித்தார். ஆனால் படம் வெளியாவதற்கு முன்னரே தணிக்கை குழுவைத் தவிர்த்து வேறு எவருக்கும் எந்த நடிகரும் தனது படத்தினை காண்பித்தது கிடையாது.
இதுவே கமல் ஹாசனுக்கு டீ.ரீ.எச் சர்ச்சைக்குப் பின்னரான சோதனையாக அமைந்துவிட்டது. படத்தினை பார்த்த குறித்த அமைப்புகளின் தலைவர்கள் இப்படத்தின் காட்சிகளின் பெரும்பாலானவை இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. எனவே படத்தினை தடை செய்வதே சிறந்த முடிவு என உறுதிபடத் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து தமிழக அரசினால் தமிழக்கத்திலும் அதேபோல இலங்கை அரசினால் இலங்கையிலும் விஸ்வரூபத்தினை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார் கமல் ஹாசன். ஏராளமான அரசியல் பிரச்சினைகளிடையே அவருக்கு சாதகமான முடிவு நேற்றிரவு கிடைத்தது. தடையை நிறுத்தியதை எதிர்த்து தமிழக அரசு மேன்முறையீடு செய்துள்ளது. இதுவே இதுவரையில் பலரும் அறிந்த சுருக்கக் கதையாக இருக்கின்றது.
ஆனால் இந்த விஸ்வரூபக் குழப்பத்திற்கு பின்னால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்கவே முடியாது. குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தவறான அபிப்பிராயத்தை அதிகரிக்க முஸ்லிம் அமைப்பகளின் தலைவர்களே காரணமாகிவிட்டார்கள். ஏற்கனவே றிஸானா நபீக்கின் விடயத்தில் இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய சட்டங்களையும் தவறாக புரிந்துகொண்டுள்ள ஏனைய மதத்தவர்களை மேலும் இஸ்லாம் தொடர்பில் தவறான பார்வையை ஏற்படுத்த காரணமாகிவிட்டது இந்த விஸ்வரூபக் குழப்பம்.
விஸ்வரூபத்தில் தொழுது (இறைவனை வணங்குதல்), குர்ஆன் ஓதிவிட்டு கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காண்பிக்கபட்டுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காண்பிக்கப்பட்டுள்ளது. குர்ஆனை தீவிரவாதிகளின் கையேடாக காண்பிக்கப்பட்டுள்ளது. இவையே பிரதானமாக முஸ்லிம் அமைப்புகளின் குற்றச்சாட்டுக்களாக அமைகின்றது.
தீவிரவாதிகளில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் எவ்வளவுக்கு உண்மையோ அதேபோன்று முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இப்படத்தின் கதை ஆப்கானிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்பை சுற்றியே நகருகிறது. அங்கே தலிபான் எனப்படும் தீவிர அமைப்பினர் உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை ஐ.நா சபையே அறிவித்துள்ளது. முஸ்லிம்களும் தலிபானை தீவிரவாத அமைப்பாகவே கருதுகின்றனர். (மலாலா என்ற சிறுமி மீதான தாக்குதலை நினைவில் கொள்க)
அத்தீவிரவாத அமைப்பினர் குர்ஆனை வைத்திருக்கிறார்கள், இறைவனை வணங்குகிறார்கள் பின்னர் கழுத்தை அறுத்து கொலையும் செய்கிறார்கள் ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் என்ற போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள்.
இதனைக் காட்சிப்படுத்தியிருப்பதை தவறென சுட்டுடிக்காட்டுவது எந்த விதத்தில் நியாயம்.?
இது தவிர கமல், குறிப்பாக முஸ்லிம்களை தீவிரவாதியாக காண்பித்திருக்கிறார் என வாதம் செய்தால் அவரது ஏனைய திரைப்படங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் ஹேராமில் முஸ்லிம்களை தீவிரவாதத்தை விரும்பாதவர்களாக காண்பித்ததுடன் அன்பே சிவம் திரைப்படத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர் இந்துக்கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டே குற்றங்கள் புரிவதாக சித்தரித்துள்ளார்.
மேலும் 1992ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாபர் மசூதிஃராமர் கோயில் சர்ச்சையில் முதன் முதலில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவை சந்தித்து செயலில் இறங்கியவரும் இந்த கமலே.
இதை எல்லாம் மறந்து கமல் என்ற தனிமனிதன் மீது தாக்குதல் நடத்த தமிழக முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டனர். அதை உணர முடியாத முஸ்லிம் தலைவர்களை விஸ்வரூபத்திற்கு எதிராக திருப்பி கமலை எதிர்ப்பதற்கு ஆதரவு தேடிய வகையில், முஸ்லிம்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் எழுந்ததும் கமல் சொத்துக்களை இழந்ததையும் தவிர வேறெதுவுமில்லை.
அந்த வகையில் முஸ்லிம் அமைப்புகளை பகடைக் காயாய்கொண்டு மேலும் தமிழக அரசியல்வாதிகள் சிலர் வெற்றிபெற்றுள்ளனர்.
இத்தடை குறித்து கமல்ஹாசன் கூறுகையில், இதுவொரு கலாசார தீவிரவாதம். இதனை எதிர்த்துப் போராடுவேன். நீதி கிடைக்கவில்லையாயின் மதம் சார்பாற்ற நாடு தேடிப் போவேன். எனக்கு மதம் கிடையாது. மனிதம் தான் முக்கியம். அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக் காயாகிவிட்டனர் என்றார்.
ஆனாலும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பீ. ஜெய்னுலாப்தீன் இந்த விவகாரத்தில் அநாகரீகத்தின் உச்சிக்கு சென்று கமலையும் அவரது மகளையும் இணைத்து பேசி மேலும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கொச்சைப்படுத்திவிட்டார்.
மாவோயிஸ்டுக்கள் இல்லையா? தனித்தெலுங்கானா கேட்டுப் போராடும் குழுக்கள், ஈழ விடுதலைக் குழுக்கள் இல்லையா? ஏன் அமெரிக்காவிலே மாபியாக் குழுக்கள், பாதாள உலகக் குழுக்கள், பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் சுட்டுத்தள்ளும் மன நலம் பிறழ்ந்தோர் இல்லாயா? என்று கேட்போர் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பர்மாவிலுள்ள பௌத்த அமைப்பு குறித்து படமாக எடுத்து இப்படியும் நடக்கிறது என காண்பிக்க முயற்சிக்கலாம்.
அதைவிடுத்து ஜும்ஆவின் பின்னரான ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் ஆகியன முஸ்லிம்களின் உண்மை நிலைமைகளை வெளிக்கொணராது. அத்துடன் முஸ்லிம்களின் மீது சேறு பூச காத்திருப்பவர்களுக்கு கமலின் பெயரில் அதனைச் செய்வதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஏனெனில் ஓங்கி வளர்ந்து நிற்கும் சினிமா என்ற ஊடகத்தை சினிமாவல் எதிர்ப்பதே இப்போதைக்கு சாத்தியம். இதனை அடுத்த தலைமுறையினர் புரிந்துகொள்வார்கள் என்பதை இப்போது ஒப்புக்கொள்ள மறுப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
அதுவே சினிமா ஹராம் (தடுக்கப்பட்டவை) என்றால் அதற்கான மாற்றுவழி என்ன என்பதை ஷரீஆவையும் (இஸ்லாமிய சட்டங்கள்) குர்ஆனையும் கேட்பதே பொருத்தம்.
-அமானுல்லா எம். றிஷாத்