மேலுள்ள வசனங்கள் அனைத்தும் மொழிமாற்றம் செய்த படங்கள் ஆரம்பிப்பது போல ஒரு தோரணையில் உள்ளதா? ஆனால் மேலே சொன்ன விடயம் உண்மையில் 1959ஆம் ஆண்டளவில் அமெரிக்கர்கள் அணு குண்டின் மூலம் நிலவினை வெடிக்கச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது.
சிலவேளைகளில் கற்பனைக் கதைகளை மிஞ்சும் அளவிற்கு உண்மையான சம்பவங்கள் நடந்துவிடும் போது அவை எம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும். அவ்வாறானதொரு அச்சரியமிக்க உணர்வையே ஏற்படுத்தியிருக்கிறது அமெரிக்காவின் நிலவை உடைக்கும் திட்டமான "Project A119".
அசாதாரணமாகக் கூட எமக்கு தோன்றாதவொரு சிந்தனையை செயல்படுத்த 1959ஆம் ஆண்டே முடிவுசெய்துள்ளது அமெரிக்கா.
1957ஆம் ஆண்டு முதன் முதலாக 'ஸ்புட்னிக் 1' என்ற செயற்கைக் கோளினை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி சோவியத் யூனியன் சாதனை படைத்ததுடன் ஆரம்பமானது போட்டியும் பொறாமையுடனான விண்வெளி ஆராய்ச்சிகளின் வளர்ச்சி மட்டுமல்ல நாடுகளுக்கிடையேயான பனிப்போரும்தான்.
குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் அளவுக்கதிமான கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தியதை உணர்த்துவதாகவே 'A Study of Lunar Research Flights' என்கிற இந்த "Project A119". ஏனெனில் சோவியத் யூனியன் செயற்கைக் கோளினை விண்ணுக்கு அனுப்புவதற்கு முதல் அமெரிக்காவானது இரு தடவைகள் செயற்கை கோளினை அனுப்பியது. ஆனால் அந்த இரு முயற்சிகளும் அமெரிக்காவிற்கு கைகொடுக்காமல் தோல்விலேயே முடிந்தது.
ஆனால் சோவியத் யூனியனின் முதல் முயற்சியிலே வெற்றிகிட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நிலவை வெடிக்கச் செய்யத்திட்டமிட்டது அமெரிக்கா. அவ்வாறு நிலவை வெடிக்கச் செய்து அதனை பூமியிலிருந்து பார்த்து ரசிப்பதனால் சோவியத் யூனியன் அதிர்ச்சியில் உறையும் அதேவேளை அமெரிக்கா குறித்து ஏனைய நாடுகளிடையே புதியதோர் நம்பிக்கை பிறக்கும் என்ற அற்பத்தனமாக சிந்தையில் மகிழ்ந்தது அமெரிக்கா எனத் தகவல்கள் அண்மையில் வெளியானது.
இத்திட்டம் தொடர்பில் குறித்த திட்டத்திற்கு தலைவராக செயற்பட்ட நாசாவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளாரும் இயற்பியல் துறை வல்லுனருமான லியோனார்ட் ரெய்பெல் Associate press, CNN, Daily Mail போன்ற ஊடகங்களின் மூலம் நீண்டகாலமாக மறைத்தும் பாதுகாக்கப்பட்டும் வந்த உண்மையை கூறியுள்ளார்.
"Project A119" என்ற திட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெயர் வெளியிடப்படாத ஓரிடத்திலிருந்து 2ஆம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானை உலுக்கிய 'லிட்டில் போய்' அளவுடைய அணுகுண்டை நிலவை நோக்கி அனுப்ப திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
ஹைட்ரஜன் குண்டினை விண்கலத்தில் அனுப்புவது நிறையின் காரணமாக சிரமமாக அமையும் என்பதனால் அணு குண்டை நிலவில் வெடிக்கச் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. 238,000 மைல் கடந்து நிலவின் ஒரு பகுதியில் இந்த அணுகுண்டை வெடிக்க வைப்பதே இதன் நோக்கமாக இருந்துள்ளது.
கார்ல் சாகன் என்ற இளம் விண்வெளி ஆராய்ச்சியாளரை இத்திட்டத்தின் பிரதான விஞ்ஞானியாக பயன்படுத்தியதுடன் குறித்த திட்டத்தின் தலைமை நிர்வாகியாக "Project A119" தொடர்பான கருத்தை உலகுக்கு அம்பலப்படுத்திய லியோனார்ட் ரெய்பெல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இதில் லியோனார்ட் ரெய்பல் (85 வயது) மட்டுமே உயிருடன் உள்ளார்.
சோவியத் யூனியன் 'ஸ்புட்னிக் 1' ஐ வெற்றிகரமாக ஏவியதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக தீட்டிய திட்டம் என்பதுடன் தானே உலக வல்லரசு என்பதை நிரூபிக்கவும் மட்டுமே நோக்காகக்கொண்டு சூட்சுமமாக உருவாக்கப்பட்ட குறித்த திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் அது பூமிக்கு பேராபத்தாக முடியலாம் என்பதை பின்னர் உணர்ந்துகொண்ட அமெரிக்கா "Project A119" திட்டத்தை கைவிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி அமெரிக்க அரசாங்கம் இத்திட்டத்திற்கு நேரடியாக எந்த உதவிகளையும் வழங்கியதில்லை ஆனால் மறைமுகமாக ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவுவது போல ஊக்குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து லியோனார்ட் ரெய்பெல் உண்மையை வெளியிட்ட ஊடகங்கள் அமெரிக்க விமானப்படையினை தொடர்பு கொண்டு "Project A119" குறித்து கருத்துக்கள் கேட்டபோது விமானப்படையோ கருத்துக் கூறமுடியாது என்று தெரிவித்ததாக அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள் எதிர்க் கடையை எதிரிக் கடையாக மாற்றி பொறாமையில் அழிக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை அமெரிக்கா அப்போதும் சரி இப்போதும் சரி உணர்ந்துகொள்ளவில்லை என்பதை எப்போதாவது உணர்ந்துகொண்டால் அது இந்த பூமியையும் தாண்டி சூரியக் குடும்பத்திற்கே நன்மை பயக்கும் என்பது நிதர்சனம்.
இன்றுவரை அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் நடந்துகொண்டே தான் இருக்கிறது. சோவியத் யூனியனை கூறுபோட்ட அமெரிக்காவால் இன்று ரஷ்யாவை விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பின் தள்ளிவிட முடிந்துள்ளது என்னவோ உண்மைதான் என்றாலும் அணு குண்டு உற்பத்தியில் ரஷ்யாவே முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தடுக்க ஏதாவது முயற்சிகள் மேற்கொண்(டிருந்தால்)டால் நிலைமை என்னவாகும் அது உலகப் போராக இருக்காது உலக முடிவின் போராக அமைந்துவிடும் என்பது போல மக்களிடையே பல சந்தேகங்களை அமெரிக்கா மீது ஏற்படுத்த காரணமாக அமைந்துவிட்ட "Project A119" திட்டம் உலக நாடுகளிடையேயும் தற்போது சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு வெளிவராத உண்மைகள் இன்னும் எத்தனை நாசாவை சுற்றி வருகின்றது என்பதை தெரிந்தவர்கள் தெரியப்படுத்தாமல் இறந்திருப்பார்கள் இருந்துகொண்டிருப்பார்கள்? என்பதும் பலரது கேள்வியாக உள்ளதனை உணரமுடிகின்றது.
எனவே மலர்ந்துள்ள இவ்வாண்டினை விட்டுச்சென்ற ஆண்டு உண்மையை வெளிக்கொணர்ந்து வரவேற்றதில் மேலும் பல உண்மைகள் தெரியரும் ஆண்டாக இவ்வாண்டு அமையுமா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்!
-அமானுல்லா எம். றிஷாத்