Total Pageviews

Tuesday, May 28, 2013

வர்த்தக மயமாகியுள்ள கிரிக்கெட்டில் மலிந்து வரும் ஊழல்

22 வீரர்கள் குறித்த சில விதிகளுக்கு உட்பட்டு எல்லைக்கோடு, பந்து, விக்கெட், துடுப்பு மட்டை போன்றவற்றைக்கொண்டு  திறமைகளை வெளிப்படுத்தி  விளையாடி,11 பேர் வெற்றிபெற பல்லாயிரம் பேர் திருப்தியுடன் மகிழ்வுறும் கிரிக்கெட்,  சில காலத்திற்கு முன்பு வரையில் கனவான்களின் விளையாட்டாக விளையாடப்பட்டது.

சில காலத்திற்கு முன்பு வரையிலா, இப்போதும் கிரிக்கெட் எனும் விளையாட்டு விளையாடப்படுகிறதுதானே என்று கேட்டால்  ஏமாற்றம் மட்டுமே எமக்கு பதிலாய் அமையும்.

உண்மையில் கிரிக்கெட் என்ற விளையாட்டு, வர்த்தக மயமாக மாறி பல காலமாகிவிட்டது. ஆனால் அந்த கொடுமையை பேசி முடிப்பதற்குள் சூதாக மாறிவிட்டமையே கிரிக்கெட்டை விளையாட்டாகவும் புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, இருபதுக்கு20, ஐ. பி.எல் என அமைய வேண்டிய கிரிக்கெட்டின் தரம் அப்படியே தலை கீழாக இன்று மாறியுள்ளது. அத்தனைக்கும் காரணம் பணம் என்ற ஒரு விடயம் மட்டுமே.

உலகின் சனத்தொகை அதிகமான பகுதியான ஆசியாவிலேயே கிரிக்கெட் விளையாட்டு சொர்க்கமாகவும் அதில் பங்குபெறும் வீரர்கள் கடவுளாக மாற்றம் பெற்றனர்.


இதனை நன்கு உணர்ந்துகொண்ட வர்த்தக நிறுவனங்கள் மெதுவாக கிரிக்கெட்டினுள் நுழைந்தன. ரசிகர்களின் கிரிக்கெட்டின் கடவுள்களையும் நாயகர்களையும் கொண்டு விளம்பரங்களை த் தயாரித்தன.

மக்கள் அன்றாடம் விழித்தது முதல் உறங்கும் வரையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் கிரிக்கெட்டும் அது சார்ந்த வர்த்தக நிறுவனங்களுமே தீர்மானித்ததன.

இதற்காக ஏற்கனவே எம்முள் தூங்கியும் விழித்தும் இருக்கும் இனத் துவேசத்தையும் பிரதேச வாதத்தையும் தூண்டிவிட்டார்கள். விளைவு அரசியலிலும் தாக்கம் செலுத்தும் அளவிற்கு போனது நிலைமை. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எல்லைகளில் நடைபெறும் போர்களாக பார்க்கப்பட்டது. அதன் வெற்றி போரின் வெற்றியாக ரசிகர்களிடத்தில் கொண்டாடப்பட்டது.

அதுபோலவே இலங்கை , இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் அரசியல் பழிவாங்கல்களாகவும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வாகவும் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர். உண்மையில் இவற்றில் வெற்றியும் பெற்றார்கள். அப்பாவி ரசிகர்கள் அல்ல அடங்காத ஆசை கொண்ட வர்த்தகர்களும் கிரிக்கெட் வீரர்களுமே.

இதனால் எந்த நாட்டு கிரிக்கெட் சபை இலாபமடைந்ததோ இல்லையோ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மேலும் பணம் கொழிக்கும் சபையாக மாறியது. கூடவே கிரிக்கெட்டும் வர்தகமாக மாற ஆரம்பித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் சபையின் செல்வாக்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் அதிகரித்தது.

இதற்கெல்லாம் காணிக்கையாக இந்திய, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களதேஷ் உள்ளிட்ட நாடுகளிலுள்ள ரசிகர்களின் பொன்னான நேரமும் பணமும் பறிபோனது. இது தலையை தடவி கண்ணை பிடுங்கிய கதையானது.

இந்நிலையில் வெறிபிடித்த ரசிகர்களின் பணத்தை மேலும் கொள்ளையடிக்க வந்தது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஆதரவின்றி கபில்தேவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐ. சி.எல் (இன்டியன் கிரிக்கெட் லீக்) என்ற அமைப்பு. இதனை கிரிக்கெட் துரோமாக அறிவித்த இந்திய கிரிக்கெட் சபை, ஐ.சி.எல்.லைவிட பெரிய வியாபார யுக்தியுடன் ஆரம்பித்ததே இந்த ஐ.பி.எல்.

கொள்ளை இலாபம் ஈட்டுவதை மட்டும் இலக்காக கொண்டு இந்த அமைப்பை உருவாக்கிய லலித் மோடி, 2008ஆம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி போட்டிகளுடன் தனது திட்டங்களையும் செயற்படுத்த ஆரம்பித்தார்.

இதில் பிரதேச ரீதியான அணிகளை உருவாக்கியதில் ஒரே நாடென இணைந்திருந்த ரசிகர்கள் பிரதேச மற்றும் மொழி ரீதியாக மேலும் பிளவுபட்டதில் ஐ.பி.எல் என்ற வணிக சினிமா, இந்தியா தாண்டி தொடர்ச்சியாக வெற்றியை ருசித்தது.


விளைவு குறித்த செல்வந்தர்கள், தரகர்கள், மற்றும் வீரர்களால் கிரிக்கெட் ரசிகர்களின் பணங்களை அட்டையாக உறுஞ்சுவதற்கு வழிவகுக்கப்பட்டது.

போட்டியில் எவர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்களுக்கு தோல்வியே இல்லை என்ற நிலைமை உருவானது.

இதனை மறைக்க கவர்ச்சிப்பெண்களின் ஆட்டம், பொலிவூட் நடிகர்கள் மற்றும் நடிகைகள், வெளிநாட்டு பாடகர்கள் மற்றும் பாடகிகள் என கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமன்றி பொதுவானவர்களையும் ஈர்க்கும் கழியாட்டங்கள் மூலம் ஐ.பி.எல் மேலும் பிரபலமடைந்தது.

ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் ஓரளவு உணர்த்தும் வகையில் ஐ.பி.எல் இல் ஸ்பொட் பிக்ஸிங், மெட்ச் பிக்ஸிங், பாலியல் சர்ச்சைகள் என வரிசையாக பிரச்சினைகள் வர ஐ.பி.எல்லில் இருக்கும் சூழ்ச்சிகளும் வெளியில் தெரியவந்தது. மக்களும் கதையை உணர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து அரசியல், கலாசாரம், விளையாட்டு துறைகளிலிருந்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தன. இருப்பினும் பணம் பாதளம் வரையல்லவா பாயும்? ஐ.பி.எல் போட்டிகள் தொடர்ந்தும் நடைபெற்றன. ஆனாலும் சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் ஸ்பொட் பிக்ஸிங்கில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைதாகினர்.

இதனால் ஐ.பி.எல் இனை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் இதுவென கருத்துக்கள் வலுத்தது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐ.பி.எல் தொடரினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை இணையத்தளம், ஆர்ப்பாட்டம் மற்றும்  சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய, ஸ்ரீசாந்துடன், அன்கீட் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர்  சூதாட்ட முகவர்களுக்கு சாதகமாக ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களுடன் குறைந்தபட்சம் 11 சூதாட்ட முகவர்கள், பொலிவூட் நடிகர் வின்டு தாரா சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ இன் தலைவரான என். ஸ்ரீனிவாசன் இது தொடர்பில் கூறுகையில், "இந்த ஊழல் விவகாரத்தில் இந்திய டெஸ்ட் அணி  வீரர் ஸ்ரீசாந்த் மாட்டியிருப்பதைப் பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஊழலால் ஐ.பி.எல். போட்டியை நிறுத்தி விட வாய்ப்பு இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஒரு வீரர் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார் என்பது என்னைப் போலவே, ஏனையவர்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. இதற்காக ஒட்டு மொத்த போட்டியும் ஊழல் என்று அர்த்தமாகி விடாது. ஐ.பி.எல். போட்டியை நிறுத்த வேண்டும் என்று நான் கருதவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.பி.எல் தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ரசிகர்களால் முன்வைக்கப்படும் கேள்விகள் இவ்வாறு உள்ளன:

இந்திய மதிப்பில் 10 கோடி முதற் பரிசை தட்டிச் செல்ல ஒவ்வொரு அணியும் சுமார் 1500 கோடிவரை செலவு செய்வது எதற்காக?
கிரிக்கெட்டினை அழிக்கும் ஐ.பி.எல் இற்கு பி.சி.சி.ஐ இன் பலம்வாய்ந்த ஆதரவு எதற்காக?
ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து "மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா?
ஐ.பி.எல் இல் குற்றம் செய்தார் என தெரிவிக்கப்பட்ட உடனே முழுமையாக நிரூபிக்கப்படாமலேயே அவசரமாக தடை விதி க்கக்கோருவது எதற்காக?
என இன்னும் ஏராளமான கேள்விகளை எழுப்பி இணையத்தளங்களினூடாக ஐ.பி.எல் மீது மண்ணை வாரி இறைக்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.


5 வருடத்திற்கு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு மட்டும் வருமானம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறு பணத்தை அள்ளித் தரும் தங்க முட்டையிடும் வாத்தான ஐ.பி.எல்இனை இப்போதைக்கு விட்டுத்தர சி.பி.பி.ஐயும் தயாராக இல்லை என்பதே உண்மை.

"முடிவு" என்ற விடயம் இறுதிவரை தெரியாமலிருப்பதே அதன் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் மெட்ச் பிக்ஸிங் மற்றும் ஸ்பொட் பிக்ஸிங் போன்றவற்றால், முடிவு தெரிந்த பரீட்சை போன்று அமைந்துள்ள போட்டிக ளில் இளைஞர்களும் சிறுவர்களும் நேரத்தையும் பணத்தையும் கரியாக்கும் செயற்பாடுகள் இனியும் வேண்டுமா? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரை 23.05.2013ஆம் திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.