Total Pageviews

Tuesday, May 21, 2013

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களுக்கு பயிற்சி


குரோஷிய நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணிவெடிகளை கண்டுபிக்க தேனீக்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான குரோஷியாவிற்கும், செர்பிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 1991ல் நடந்த போரின்போது, ஏறக்குறைய, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், கண்ணிவெடியில் சிக்கி, 2,500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சண்டையின்போது, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த சூழலில், மிர்ஜனா பிலிபோவிக் என்பவர், தன் ஆண் நண்பருடன் குரோஷிய நகர் ஒன்றில், மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கண்ணிவெடி வெடித்ததில், அவரது நண்பர் அதே இடத்தில் பலியானார். மிர்ஜனாவின் இடது கால் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து, ஏறக்குறைய, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களை பயன்படுத்த, குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, தேனீக்களின் நடத்தைகளை பற்றி நன்கு அறிந்தவரும், தேனீக்களின் நிபுணருமான நிகோலா கிசெக், சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களுடன், ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில், ஆலோசனை நடத்தினார். அப்போது, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நிகோலா கிசெக் கூறுகையில், தேனீக்கள், நறுமணத்தை முகர்வதில் அபாரத்திறமை கொண்டவை. எனவே, அவற்றிற்கு, கண்ணிவெடிகளின் மணம் குறித்து பயிற்சி அளிக்கும் போது, அவற்றால் கண்ணிவெடிகளை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும். தேனீக்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் உணவுடன், கண்ணிவெடியின் நறுமணம் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். அப்போது, அவற்றால் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும்.

இது ஒன்றும் அவ்வளவு கடினமான செயல் அல்ல ஆனால், ஆயிரக்கணக்கான தேனீக்களுக்கு பயிற்சி அளிப்பதுதான், சற்று சவாலான காரியம் என தெடரிவித்துள்ளார்.