கோட் சூட், கூளிங் கிளாஸ் என நகரத்தில் வில்லத் தனமாக சுற்றிக்கிட்டு இருந்த அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையில் பாசக்கார அண்ணனாக கிராமத்தில் வீர(ம்) நடை போடுகிறார்.
தம்பிக்களுக்காக வாழ்கிற அண்ணன் விநாயகம் (அஜித்). அண்ணனுக்கு வாழ்க்கை ஏற்படத்தத் துடிக்கும் 4 தம்பிகள். இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் எதிரிகளுக்கு சாப்பாடு போட்டு காயம் ஏற்படுத்தி வாழ்கிறார்கள்.
இந்த பாசமான குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டுவிடும் என்பதால் திருமணம் செய்யாமலேயே தானும் தம்பிகளுமாக இருக்கும் விநாயகத்தின் வாழ்க்கையில் கோப்பெரும் தேவியை (தமன்னா) இணைக்க தம்பிகளும் இவர்கள் கூடவே இருக்கும் சட்டத்தரணியாக வரும் சந்தானமும் முயற்சிக்கிறார்கள்.
தமன்னா - அஜித் ஒருவருக்கு ஒருவர் காதல் கொள்கிறார்கள். முன் ஜாமின் எடுத்து தப்பு செய்யும் அஜித் குடும்பமும் அமைதிக்காகவே வாழும் தமன்னாவின் குடும்பமும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான பதைபதைப்பும் பாசமும் என கலந்து விருந்து படைக்கிறது மீதிக் கதை.
90களில் வந்த கதையாகவும் ஹரியின் சாயலாகவும் இருந்தாலும் ரசிக்கும் படி படமாக்கி ரசிகர்களிடம் ஷபாஸ் பெறுகிறார் இயக்குநர் சிவா.
முதல் பாதி முழுவதும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார் சந்தானம். விரசம் இல்லாத வசனங்கள் திருப்தி. அலுப்பில்லாமல் நகர்கிறது. இடைவேளையில் பரபரக்கும் சண்டைக் காட்சியுடன் எதிர்பார்ப்பும் எகிறுகிறது.
பிற் பாதியில் சண்டை, குடும்பப் பாசம், நகைச்சுவை என அதிரடியாக படம் வேகமெடுக்கிறது. முற்பதியிலிருந்த வேகம் சற்றே குறைந்தது போல் ஓர் உணர்வு. நீண்ட இடைவேளைக்கு பின்னர் சீ சென்டர் மற்றும் குடும்பங்களை கவர்கிறதொரு அஜித் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவா.
படத்தினை பிரேம் பை பிரேமாக அஜித்துக்காக உருவாக்கி இருந்தாலும் வீணாக அஜித் புகழ்பாடமல் பார்த்திருப்பது வரவேற்கத்தக்கது. முடிஞ்சா என்ன தாண்டி தொட்றா பார்க்கலாம் என சவால் விடும் காட்சி, தொழில் போட்டி எதிரியிடம் பேசும் இடம், வில்லன்கள் தம்பிகளை துரத்திவர ஆர்ப்பாட்டமில்லாமல் ஊஞ்சல் ஆடும் அஜித் என பல இடங்களில் அஜித்துக்கான மாஸ் காட்சிகளையும் படத்தின் லொஜிக் மீறல்களை மறைக்கும் விதமான வேகமான திரைக்கதை அமைப்பிலும் இயக்குநர் வென்றிருக்கிறார்.
அஜித்தின் நரை முடிக்கும் ஒரு காரணத்தை வைத்து திருப்திப்படுத்துகிறார். அஜித் ரசிகனாகவே வீரம் படத்தை தான் எடுத்ததாக கூறிய சிறுத்தை சிவா இனி வீரம் சிவா என அழைக்கப்பட்டாலும் ஆச்சரிமில்லை.
படத்தில் ஒரு சில காட்சிகைத் தவிர அனைத்து காட்சிகளிலும் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் அஜித் உச்சமாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் அதிரடியாக ஆர்ப்பாட்டம் செய்து பிற்பாதியில் அமைதியாக அதிரடி காட்டுகிறார்.
மதுரை மண் வாசனையை மறக்காமல் தமிழிலேயே படம் முழுவதும் பேசுகிறார். காதல், பாசம் என உருக்கம் காட்டுகிறார். மாட்டு வண்டி, வேஷ்டி சட்டையிலும் அஜித் கச்சிதமாப் பொருந்துகிறார். பல இடங்களில் பாசத்தாலும் வருடுகிறார். மொத்தத்தில் புது அவதாரத்தில் மிளிர்கிறார்.
தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனிஸ், சந்தோக் என அனைவரும் படம் முழுவதும் வருகிறார்கள். விதார்த் மற்றும் பாலாவுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். இறுதிவரை அண்ணனை ஏமாற்றாமலும் இறக்காமல் இருப்பது மகிழச்சி.
என்றென்றும் புன்னகையைத் தொடர்ந்து வீரத்திலும் மீண்டெழுந்துள்ளார். டைமிங்கில் டைவடிக்கிறார். தம்பி ராமையாவுடன் தன் பங்கிற்கு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.
3 வருட இடைவெளிக்கு பிறகு நாயகி தமன்னா ரசிக்க வைக்கிறார். பாடலுக்கு மட்டுமன்றி நடிக்க அதிக வாய்ப்பு. காதல் காட்சிகளில் அஜித்துக்கு சேலையுடன் வரும் தமன்னாவை ரசிக்கலாம்.
பாடல்கள் காட்சிகளையும் கிராமத்தில் இயல்பாக காட்டியிருக்கலாம். வெளிநாட்டில் நடக்கும் பாடல் காட்களில் தமன்னா - அஜித் டூயட் குறைபாடுதான்.
நாசர் வழக்கம்போல பாத்திரத்தின் தேவையை உணர்த்துகிறார். வில்லன்களாக வரும் பிரதீப் ராவத் நல்ல தேர்வுதான். ஆனாலும் வழக்கம்போல விறைப்பாக வந்து சிரிப்பாகிப் போகிறார். ரசிக்கலாம். அத்துல் குல்கர்னி கொலை வெறியாக அலைகிறார். அவினாஸ் சிறுத்தையை தொடர்கிறார்.
இவர்கள் தவிர தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி அஜித்தின் கூடப்பிறக்காத தம்பியாக வந்து கண்கலங்க வைக்கிறார். ரமேஷ் கண்ணா, இளவரசு, மயில்சாமி, தேவதர்ஷினி, அபினயா, மனோசித்ரா, வித்யூலேகா என பலர் பாத்திரத்தின் தெரிவுகளாக உள்ளனர். அஜிதுடன் நெருங்கிப் பழகும் அந்த குழந்தை திணிக்கப்படாத பாசம் நெகிழ்ச்சி.
படத்தில் பல லொஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் அஜித்தும் திரைக்கதை மூலம் சிவா மறைத்ததில் நிச்சயம் வெற்றி.
பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை துள்ள வைக்கிறது. மாஸ் படத்துக்கு தேவையானது. முதல் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஏனையவை பெரிதாக ஈர்க்கவில்லை. பாஸ் மார்க் வாங்குகிறார் டி.எஸ்.பி.
பாடல் வரிகளில் விவேகா தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
கிராமத்தை ரம்மியமாகவும் அதிரடியாகவும் காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. காசி விஸ்வநாத்தின் எடிட்டிங் படத்தின் வேகத்தை அதிகரிப்பதில் பக்க பலமாகவுள்ளது.
சண்டைக் காட்சிகளில் சில்வா பலரையும் பறக்கவிட்டுள்ளார். டூப் இல்லாத அஜித்தின் ரயில் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது.
பன்ச் வசனங்கள் இல்லை. ஆனால் வசனங்கள் பன்ச்சாகவுள்ளது. பரதனின் வரிகளுக்கு அஜித் சிறப்பாக உயிர்கொடுத்துள்ளார். குறிப்பாக உழைக்கிற ஜாதிடா..., சோறு போட்டா தாய் சொல்லிக்கொடுத்தா தகப்பன் போன்ற பல வசனங்கள் நச் நகரம்.
பொங்கல் ஜல்லிக் கட்டில் காளையாக குதித்துள்ளது வீரம் படத்தில் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினியை காட்டிவிட்டு அஜித்தின் 'வீரம்' படத்துக்கு வரும் நாகி ரெட்டியின் விஜய ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் ஏதோ சொல்லாமல் சொல்லிவிட்டது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏ, பீ, சீ என அனைத்து சென்டர்களிலும் புதியதோர் அவதாரத்தில் அஜித்தை வீர நடை போடச் செய்துள்ள இந்த வீரம்.
-ஏ.எம்.ஆர்