விமர்சனங்களாலும் வணிக ரீதியாகவும் மட்டுமன்றி விஜயின் அரசியல் தலைவர் கனவுக்கும் தலைவலியாக அமைந்த தலைவா திரைப்படத்தினைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளிடையே இளைய தளபதி விஜய் மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ளது 'ஜில்லா'.
தலைவாவில் இழந்ததை ஜில்லாவில் நிலைநிறுத்த தீயா வேலை செய்யணும் என்பதை காட்டும் வகையில் இளைய தளபதியில் வரும் 'தி' இல் தீ எரிந்தவாறு படம் ஆரம்பமாகின்றது.
பின்னரே தெரிகிறது படம் பார்க்க வந்த எமது காசுக்கு வைத்த தீ அதுவென்பது. இன்னும் தடவைதான் ஏமாறப்போகின்றோமோ?
சிவனிடம் (மோகன்லால்) வேலை செய்யும் சக்தியின் (விஜய்) அப்பா பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட அந்த இடத்திலிருந்து காக்கியை வெறுக்கும் நாயகன், வளர்ப்புத் தந்தை சிவன், அவரது மனைவி, மகள், மகன் மீது பாசத்தை கொட்டி வளர்கிறார்.
தவறு எனத் தெரியாமலேயே தவறுக்கு துணை போகிறார் சக்தி. ஒரு கட்டத்தில் சிவன் தனது குற்றச் செயல்களை தடையின்றி மேற்கொள்ள காக்கி என்றாலே வெறுக்கும் சக்திக்கு பொலிஸ் வேலையை வாங்கிக் கொடுக்கிறார். பின்னர் அந்த பொலிஸ் வேலையே சிவனுக்கு எமனாகிறது.
குற்றங்கள் அதிகரிக்கிறது பலர் பலியாகக் காரணமாகின்றார் சிவன். தவறுக்கு துணை போவதை உணர்ந்து தந்தைiயும் திருத்தி எதிரிகளிடமிருந்து குடும்பத்தையும் நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சுவாரஷ்யமில்லாத ஓட்டைத் திரைக்கதையில் பொறுமையை சோதிக்கிறார் இயக்குநர் நேசன்.
ஆரவாரமாக விஜய்யை வரவேற்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ஆரம்பமே நம்ப மறுக்கும் காட்சியுடன் கல் வீசும் சிறு வயது விஜய்க்கு கைதட்டல் வரவேற்பு இல்லாதது ரசிகர்களின் ரசனை உயர்ந்திருப்பதை தெளிவுபடுத்துவதாய் அமைந்தது.
திரைக்கதையினால் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். மதுரையில் கதை நகர்ந்தாலும் மதுரை (மீனாட்சி கோவிலைத் தவிர) வாசனை எங்கும் தெரியவில்லை. பரப்பான காட்சிகள், திருப்பங்கள் என நினைக்கும் காட்சிகள் திரையில் வருவதற்கு முன்பே எளிதாக கண்டுபிடித்து கூச்சலிடுகின்றனர் ரசிகர்கள்.
முதல் பாதியில் நகைச்சுவையுடன் கரையேறி இடைவேளையில் சூடு பிடித்தது. 2 ஆம் பாதி ஆர்வமாக அமர்ந்தால் மீண்டும் முதலிருந்து ஆரம்பமாகி சண்டை... சண்டை... சண்டை... என தவள்கிறது. இடையில நடுவுல வழக்கமான மானே தானே போட்டுக்கங்க!
படம் முடிந்துவிட்டதாக நினைத்து ரசிகர்கள் எழுந்த பின்னர் சுமார் 5 நமிடங்களுக்கு மேல் படம் நீள்கிறது. (கண்ணக் கட்டுதே...!)
தீனாவையும் விஜயின் பழைய படங்கள் உடை, நடை போன்றவை ஞாபகத்துக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். ஓவர் நைட்டில் ஓபாவாகிறது போல ஒரே நேரத்தில் மதுரையிலுள்ள ரௌடிகளை ஜஸ்ட் லைக் தட் என அள்ளுகிறார். நாயகனின் செயல் ரசிகர்களை கொல்கிறது. படத்தில் இருக்கும் லொஜிக் ஓட்டைகளை சொல்லப்போன ஓட்டையில கொஞ்சமும் படத்தை காணோம் என்றுதான் வரும்.
கம்ப்ளீட் அக்டர் மோகன்லால் கம்பளீட்டாக வீணடிக்கப்பட்டுள்ளார். கேரளத்து தமிழில் சிவன்டா சிவன்டா என கத்துகிறார் அதுவே படத்துக்கு எமன்டா... என எதிரொலிக்கிறது. ஏராளமான காட்சிகளில் தோன்றினாலும் ஜில்லாவில் பெரிய சக்தியாக சிவன் இருப்பதாக சொல்லாவிட்டால் புரியாது. விஜய்க்கு சமமாக காட்சிகள் அமைப்பதில் ஏற்பட்ட தடுமாற்றமாற்றம் போல தெரிகிறது.
படத்தினை தனது ரசிகர்களுக்காக மட்டுமே விஜய் தாங்கிப்பிடிக்கிறார். தாடியில் மாற்றம் செய்திருப்பது திருப்தி. ஒரு சில காட்சிகளில் முகபாவனையும் ரசிக்க முடிகிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோசம். முதல் பாதியில் வரும் பாடல் வசனங்களிலும் காட்சிகளிலும் பலரைச் சீண்டுகிறார்.
விஜய் பொலிஸாக வருவதே கெக்கப்புக்க கெக்கப்புக்க சிரிப்பு வர நாயகி காஜல் அகர்வால் பொலிஸாக (சிரிப்பு பொலிஸ்?) கிச்சுக்கி மூட்டுகிறார். 3 பாட்டுக்கும் 4 சீனுக்கு வந்துபோகிறார். சூரி படத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் பலவற்றுக்கு திரையரங்கில் சிரிப்பலை. இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். போதாக் குறையாக விஜயின் பின்புறத்தை காஜலும் காஜலின் பின்புறத்தை விஜயும் தடவுவது விரசம். ஜோக்காமா...
வில்லனும் விஜயும் துரத்தும் காட்சியில் ஒரு சில விநாடிகள் மட்டும் பதபதைக்க வைக்கும் ஒர காட்சி தவிர நடிக்க வாய்ப்பில்லை. பின்னால் நின்று செல்கிறார். வில்லனாக சம்பத் நல்ல தேர்வு. பொருத்தமாக இருக்கிறார். அத்துடன் பிரதீப் ராவத், பூர்ணிமா, நிவேதா, தம்பி ராமையா, ஆர்.கே என பலர் வந்து போகிறார்கள். இவர்கள் தவிர படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரியின் மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் பாடலொன்றுக்கு ஆடிச்செல்கிறார்கள்.
பாடல்கள் ஹிட்டடித்தாலும் திரையில் கண்டாக்கி மட்டுமே ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசை அசத்தல். வசனங்கள் பல இடங்களில் இயல்பாக உள்ளமை ஆறுதலளிக்கிறது. ஒளிப்பதிவு படத்துக்கு பலமாகவுள்ளது. படம் முழுவதும் வண்ண மயமாக உள்ளது. எடிட்டிங் இன்னும் கவனித்து கத்தரித்திருக்கலாம்.
சில்வாவின் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகவுள்ளது. விஜய் அடித்து நொறுக்குகிறார். தலைவா பிரச்சினையில் கைகட்டி பேசியது போல நின்றுகொண்டு விஜய் போடும் சண்டை அரசியல் பன்ச். (அதான் நிஜத்தில பம்முறிங்களே அப்புறம் எதுக்கு வெட்டி சீன்) ஒப்பனையில் விஜயின் முகத்தில் பொங்கலுக்கு வெள்ளையடித்தது அப்பட்டமாக தெரிகிறது. ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது.
யானை இரண்டை பூனை சுமந்தது போல் இரு மாநில சுப்பர் ஸ்டார்களை சுமந்து செல்லத் தடுமாறிய இயக்குநர் நேசன் படத்தின் நேர்த்தியை தவறவிட்டதில் தீவிர விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிறது இந்த ஜில்லா.
எனக்கு பயமில்லை என்ற சீன்களை கவனமாக மறக்காமல் வைத்து அடுத்தவனை சீண்டி நிஜத்தில் அடிவாங்குவதற்கு பதிலாக நல்ல கதைகள் தேர்ந்தெடுப்பதில் மறக்காமல் கவனம் செலுத்தலாங்கண்ண....
சுறாவுக்கு சில படி மேலேயும் தலைவாவுக்கு பல படி கீழேயுமுள்ள இந்த ஜில்லா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது நல்லா!
இந்த பதிவை ஈயடிச்சா தயதுசெய்து இந்த வலைத்தள முகவரியையும் கொடுங்க... http://aachariyam.blogspot.com/2014/01/blog-post.html
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்தான்...
விஜயும் நேசனும் சேர்ந்தா தமாஸுடா...
படம் பார்க்கிற நாங்க லூஸுடா...
-ஏ.எம்.ஆர்