ஒவ்வொரு உயிரும் உலகில் உயிருடன் வாழ ஒட்சிசன் என்ற வாயுவை நம்பியிருக்க வேண்டி இருக்கின்றது. ஆனாலும் சுவாசித்து உயிர் வாழ வழிசெய்யும் அந்த மூச்சுக் காற்று உண்மையில் யாருக்கு சொந்தம்? அது போலவே நீரூம் அமைந்திருந்தால் என்ன என எண்ணத் தோன்றுகின்றது.
ஏனெனில் நிலங்களைத் துண்டாடிய மனிதர்களால் நதிகளையும் அதில் பாயும் நீரையும் பிரிக்க முடியாமல் அவற்றின் மீதான சர்ச்சைகளினால் பல்வேறு நாடு கள் பிரிந்து சர்ச்சைகளை ஏற்படுத்துவதே மேற்படி எண்ணம் உதிக்க காரமாகின்றது.
பூமியில் குறித்த சில காலப்பகுதிகளில் கண்டங்கள், நாடுகள் என மனிதர் களின் அரசியல் ஆசைகள், நிலத்தின் மீதான மோகம் மற்றும் வேறு பல தேவைகளாலும் புவியிலமைந்த நிலங்கள் துண்டாடப்பட்டன.
இருப்பினும், நிலத்தை சொந்தமாக்கி எல்லைக்கோடிட்டு பிரிக்க முடிந்தாலும், எல்லைக் கோடுகளைத் தாண்டி பாயும் ஆறுகளை சாதாரணமாக மனிதனின் ஆசைக்கு சாதகமாக பிரித்திட முடியவில்லை. இதனால் நாடுகள் பல ஒன்றி ணைந்து காணப்பட்டபோது எமது நாட்டின் நதியாக இருந்தது. அதுவே நாடுகள் பிரிந்ததும் எனது நாட்டு நதியென உரிமை கோர வேண்டி ஏற்பட்டது. இதுவே நதிகள் மீதான சர்ச்சைக்கு வித்திட்டது.
தற்போது உலகளில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக தோற்றம் பெற்றுள்ளது நீர். எனவே ஜீவநதிகளை யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. விளைவு நாடுகளிடையே சச்சரவுகளையும் சண்டைகளையும் ஏற்படுத்துகிறது.
இனி ஓர் உலகப் போர் ஏற்படுமேயானால் அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் சமூக அறிஞர்களும் கூறிவருகின்றார்கள். உண்மையில் இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இன்று காணப்படுகிறது.
முன்னொரு காலத்தில் கோடை காலங்களில் வீட்டுகளுக்கு வெளியே குடங்களில் நீர் நிரப்பி வைப்பார்களாம் தாகத்தில் வரும் வழிப்போக்கர்களுக்காக. இன்றும் வீடுகளுக்கு வெளியே குடங்கள் உள்ளன. ஆனால் இவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது வழிப்போக்கர்களை அல்ல நீரின் வருகையை.
இது வீடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையில் 'அனைவருக்கும் போதுமான நீர் உள்ளது' எனத்தெரிவித்திருந்தது. ஆனாலும் தவறான நிர்வாகம், அரசியல் பின்னணியே தனி நபருக்கான நீரின் அளவை மட்டுபடுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனாலேயே பல்வேறு நாடுகளுக்கு குறுக்காக பாயும் நதிகளினால் உருவான சர்ச்சைகள் பூதாகரமாக மாறி வருகின்றது.
இந்தியா என பெயர் வரக் காரணமாக அமைந்த சிந்து நதியே இன்று பாகிஸ்தானில் தானே பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்ந நதி காஷ்மீர் ஊடாகவும் செல்கின்றது. காஷ்மீரில் ஓடும் முக்கிய 6 நதிகளில் 3 நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதி 3 நதிகளுக்காக இரு நாடுகளும் முட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் தைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் துருக்கிக்கும் சிரியாவுக்குமிடையே என பல நாடுகளிடையே நதிகளுக்காக பிரச்சினைகள் நிலவுகின்றன. இதில் பிரதானமாக குறிப்பிடக்கூடிய மிக முக்கியமான நதியாக விளங்குவது உலகின் அதி நீளமான நைல் நதியும் ஒன்றாகும்.
ஆபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரிக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்த உலகின் அதி நீளமான நைல் நதிக்காகவும் குறித்த நாடுகளிடையே பல வருடங்களாக பிணக்குகள் காணப்பட்டு வருகின்றது.
66670 கி.மீ நீளமான இந்த ஜீவநதியில் 11 நாடுகள் தங்கியுள்ளன. ஆனாலும் சூடான், புருண்டி, ருவாண்டா, கொங்கோ, தன்சானியா, கென்யா, உகண்டா, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய 9 நாடுகளே பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் குறிப்பாக நைல் நதியின் பிரதான நீர் மூலத்தினை எகிப்து மற்றும் சூடான் ஆகிய இரு நாடுகள் பெறுகின்றன.
ஆனால் நதியின் இரு பிரிவுகளான வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகிய இரண்டு பகுதிகள் முறையே கிழக்கு ஆபிரிக்கா (றுவண்டா அல்லது புருண்டி) மற்றும் எத்தியோப்பியா ஆகிய இடங்களில் உற்பத்தியாகின்றது.
இதனால் மின்சாரம், வயல் நிலங்களுக்கான நீர் என முதன்மையான நீர் தேவைகளை அதிகளவில் எகிப்தும் சூடானும் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நீல நதியின் குறுக்காக அணை ஒன்றினை மின் உற்பத்திக்காக அமைப்பதற்கு எத்தியோப்பியா நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக கடந்த வாரம் அணை கட்டப்படவுள்ள குறித்த நதி ஓடும் திசையை மாற்றும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்கு இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலக நாடுகளே இந்த அணையை கட்ட உதவுவதனால் இத்திட்டத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக முக்கிய கடல் மார்க்கமான பாதைகளில் ஒன்றான சுயஸ் கால்வாயை மூடி போக்குவரத்துத் தடையை ஏற்படுத்த எகிப்து தீர்மானித்துள்ளது.
இவ்வாறு சுயஸ் கால்வாயை மூடும் பட்சத்தில் கடல் மார்க்கமான போக்கு வரத்துகள் சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச நாடுகளிடையே பிணக் குகள் உருவாக வாய்ப்பாகலாம் என பர வலான கருத்துகள் வெளியாகின்றன. இது போலவே ஏனைய நதிகளுக்கான போராட்டங்களும் நாடுகளுக்கிடையில் பாரியளவில் வெடிக்கலாம்.
ஆனாலும் நதிகள் பாய்கின்ற அதே வேகத்தில் சர்ச்சைகளும் பாய்ந்து கொண் டேதான் இருக்கிறது.
- அமானுல்லா எம். றிஷாத்