அமெரிக்காவில் இருதய கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்குப் பதிலாக ரோபோ ஒன்று பாடசாலைக்கு சென்று படித்து வருகின்றது.
அமெரிக்காவில் சவூத் கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரைச் சேர்ந்தவள் லெஸி (9). இவள் அங்குள்ள ஒரு தனியார் பாடசாலையில் படித்து வருகிறாள். பிறவியிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் சரிவர பாடசாலைக்கு செல்ல முடியவில்லை.
இதனால் பாடங்கள் பாதிக்காமல் இருக்க அவரது பெற்றோர் அவளுக்கு புதுவிதமான ரோபோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். தற்போது, அந்த ரோபோதான் லெஸிக்கு பதிலாக பாடசாலைக்கு சென்று பாடங்களை படித்து வருகிறது. 'வி.ஜி.ஓ.' என அழைக்கப்படும் இந்த ரோபோ 4 அடி உயரமும், 18 இறாத்தல் எடையும் கொண்டது.
இதன் முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் கெமரா மற்றும் இணைய வசதியும் உள்ளது. பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் மவுஸ் மூலம் இயக்குகிறாள்.
வகுப்பறைக்கு செல்லும் ரோபோ வின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிகிறது. அதே வேளை, வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடியோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஒளிபரப்பும். அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களையும் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.
இதை வைத்து வீட்டில் இருந்தபடியே பாடம் படித்து பரீட்சை எழுதி வருகிறாள். இந்த ரோபோவுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு 'இளவரசி வி.ஜி.ஓ.' என அன்புடன் பெயரிட்டு இருக்கிறாள்.
By: Metronews.lk