கோடை காலத்தில் அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் சுவீடன் நாட்டின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிர வண்டிச் சாரதிகள் பாவாடையுடன் வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
சுவீடன் நாட்டின் தலைநகரிலுள்ள ரொஸ்லகஸ்பனன் புகையிரத சேவையில் பணியுரியும் 11 பேர் கொண்ட சாரதிக் குழுவொன்றே இவ்வாறு வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
தற்போது சுவீடனில் கோடை காலம் என்பதால் அதிக வெப்பம் காரணமாக காற்சட்டை அணிந்து பணிபுரிவது எரிச்சலூட்டுகிறதாம். ஆனாலும் அரைக் காற்சட்டை அணிந்து பணிக்கு வருவதை புகையிரத நிறுவனம் தடை செய்துள்ளது. இதனை எதிர்க்கும் முகமாவே குறித்த சாரதிக் குழு பாவாடையுடன் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இது தொடர்பில் குறித்த சாரதிகள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கோடை காலம் நெருங்கும் போதும் நாங்கள் பாவாடை அணிவதாக கூறுவோம். ஏனெனில் கோடை காலத்தில் நிலவும் கடும் வெப்பநிலையில் அரைக்காற்சட்டை அணியவே விரும்புவோம். ஆனால் அது முடியாது. எனவே பாவாடை அணிந்துள்ளோம். இது மிகவும் வசதியாக உள்ளது.
நாங்கள் இவ்வாறு பணிக்கு வருகின்றபோது பயணிகள் எங்களை உற்றுப் பார்க்கிறார்கள் இருப்பினும் எவரும் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாவாடையுடன் பணி புரியும் சாரதிகள் அவர்கள் பாவாடையுடன் பணிபுரிவதை புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
By AM.Rizath | Metronews.lk