Total Pageviews

Friday, October 19, 2012

விலங்குகள் அனர்த்தங்களை எதிர்வுகூறுமா... கடல்வாழ் உயிரினங்கள் சுனாமியை உணர்த்துமா?


ஆறறிவு என்று கூறப்படும் விலங்குகளான மனிதர்கள் தவிர ஏனைய விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறும் திறன் படைத்தது என்ற நம்பிக்கை எம்மில் பரவிக்கிடக்கின்றது. இது உண்மையா பொய்யா என்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது மீன்கள் அதிகளவில் பிடிபடுவதுடன் ஒரு சில பிரதேசங்களில் கடவாழ் (கடல் பாம்பு, காடலாமை, மீன்கள்) உயிரினங்கள் கரையொதுங்கின்றது.

இதனால் அப்பகுதி மக்களிடையே ஒரு வகையான அச்சம் காணப்படுகின்றது. 2004இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னரும் இவ்வாறே அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கியதுடன் ஏராளமான மீன்களும் பிடிக்கப்பட்டது. இதனால் மீண்டுமொரு சுனாமி எம்மை நோக்கி வருகிறதா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே நிலவுகின்றது. அதுவொரு வகையில் நியாமும் கூட.

ஏனெனில் அப்பகுதி மக்களே ஏற்கனவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அதிகளவு உயிர்கள் மற்றும் உடைமைளை இழந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம். (ஆனாலும் அவர்களின் நிலைமைகளை படம் பிடித்து வேறு பிரதேசத்தினை போல் சித்திரித்து உலக நாடுகளுக்கு காட்டினார் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மின்னல் நாயகனும் என்பது வேறு கதை. அப்பகுதி மக்களுக்காவது உதவினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது! ஐயய்யோ நமக்கெதுக்கு அரசியல்... ஒரு ஆதங்கத்தில் பேசித் தொலைச்சிட்டன்)

சரி அப்படியானால் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சுனாமி, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அபாயச் சங்குகளா என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

அவ்வாறெனில் பல சந்தர்ப்பங்களில் விலங்குகளின் செயற்பாடுகள் அனர்த்தங்களை எச்சரிப்பதாக அமைந்துவிடுகிறதே அது ஏன்? 2004ஆம் ஏற்பட்ட சுனாமியின் போது கடலோரத்தில் இருந்த பல விலங்குகள் உயிர்பிழைத்திருந்தது ஏன்? இவற்றையெல்லாம் விட சுனாமியை எச்சரிப்பது போல சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் கடலை விலத்திய விலங்குகளின் நகர்வுகள், ஏராளமான மீன்கள் கரையை வந்தடைந்தது போன்றவை ஏற்படக்காரணம் என்ன? என்ற ஏராளமான கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் தேடலின் முடிவுகள் இவ்வாறு அமைகிறது.
கரையொதுங்கிய மீன்கள்

விலங்குகளால் காலநிலை மாற்றங்களை உணர்ந்துகொள்ள முடியும். இதனால் சூடு, குளிர், அமுக்கம், மனிதர்களுக்கு கேட்கமுடியாத சத்தங்கள், வாயுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என பலவற்றை உணரக்கூடிய ஆற்றல் உண்டு. இவை ஒவ்வொரு வகையான இனங்களுக்கும் வித்தியாசப்படும்.

இவ்வாறான மாற்றங்களை உணரும் சந்தர்ப்பங்களில் குறித்த விலங்குகள் தங்களுக்கு ஏதுவான வாழும் சூழல் இல்லை என்பதை புரிந்துகொண்டு இடம்பெயர ஆரம்பிக்கும். தவிர விலங்குகளுக்கு அனர்த்தங்களை உணரக்கூடிய எந்தவித விஷேட சக்திகளும் இல்லை என்பதே உண்மை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களின் விளக்கங்களும் நியாயமாகவே உள்ளன. ஏனெனில் எமது வீடுகளில் மேல் நோக்கி எறும்புகள் பயணிக்கும் போது மழை வரப்போகிறது என்று எதிர்வுகூறுவார்கள் சில வேளைகளில் மழை வரலாம் வராமலும் போகலாம் ஆனால் எறும்புகள் எறிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே காலநிலை மாற்றத்தினை உணர்ந்துகொண்ட எறும்புகள், தமது பாதுகாப்பை உறுதி செய்கிறதே தவிர மழை வருவதை அவை உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

இதே போலவே கடலிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவே கரையை நோக்கி அவை படையெடுக்க ஆரம்பித்திருக்கிறதே அன்றி சுனாமி அல்லது வேறு அனர்த்தங்களுக்கான எச்சரிக்கை அல்ல என்பது உறுதி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உயிருடன் மீன்கள் கரையை நோக்கி...

மேலும் கடலில் ஏற்படுகின்ற எண்ணெய்க்கசிவு, சிறியளவிலான நில அதிர்வுகள் போன்ற காரணிகளும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இதனால் இறந்தும் கடல் வாழ் உயிரினங்கள் கரையொதுங்க வாய்ப்புக்கள் உள்ளது. அத்துடன் உயிருடன் உள்ளவை கரையை நோக்கி நகரும் இந்நிலையே மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் சிக்கக் காரணமாகின்றது.

எனவே மீன்கள் அதிகளவில் கிடைப்பது மற்றும் கரையொதுங்குவது தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் வதந்திகள் மூலம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்போம் நாம்.

மொட்டு வெடிச்சாலும் சரி கள்ளன் குதிச்சாலும் சரி நாய் குரைக்கத்தான் செய்யும். ஆனால் அது பேய், பிசாசுக்களை பார்த்துத்தான் குரைக்கின்றது என்ற மூடநம்பிக்கைளில் எம்மவர்கள் மூழ்கியது போன்று மீன்கள் கரையொதுங்கினால் சுனாமி வரும் என்ற மூடநம்பிக்கை ஏற்படாமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் சுனாமி ஏற்படுதவதற்கு முன்னர் மீன்கள் கரையொதுங்கலாம் ஆனால் மீன்கள் கரையொதுங்கும் போதெல்லாம் சுனாமி ஏற்படாது.

குறிப்பு : படங்கள் யாவும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் (காத்தான்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, காரைதீவு) இடம்பெற்றவை.

காரைதீவு பிரதேசத்தில் பிடிபட்ட மீன்கள்


காத்தான்குடியில் கரையொதுங்கிய ஆமை




Can animals predict the natural disaster?


Most of us believing that animals can predict the natural disaster excluding 6 sense animal of human. Researchers have been trying to clarify that is it true or not for a long time.  This is the right time to concentrate on it as dead sea life such as tortoise, new kind of strange fishes, sea snakes washing up on shore in eastern part of Sri Lanka.

After the tsunami when fisherman catch unusual amount of fish that makes people afraid of natural disaster in this region.