Total Pageviews

Friday, November 23, 2012

சோதனைக் களத்தில் சாதனை படைக்கும் Facebook


தேவைகளை உணர்ந்து அவற்றினை நிறைவுசெய்து வெற்றி காண்பது ஒரு ரகம் என்றால் புதிதாக ஒரு தேவையை உருவாக்கி அதனை நிறைவேற்றி வெற்றிகொள்வது இன்னொரு ரகம். இதில் இரண்டாவது ரகமே இப்போது உலகையே தன் சுவற்றில் எழுத வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கும் வெற்றி நாயகன் Facebook.

இன்றைய நாட்களில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியில் ஆள் பாதி என்றால் மீதி ஆடையல்ல பேஸ்புக் என்பது போல் தன்னை மாற்றிகொண்டுள்ளது. ஏனெனில் இன்று பலரது தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது இந்த Facebook. இதற்கு நாளாந்தம் சமூக வலைத்தளங்களினை நாடி வரும் புதியவர்களின் வருகையே சாட்சியாகின்றது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் பயனர்களின் எண்ணிகை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதமளவில் 800 மில்லியன் பயனர்களை கொண்டிருந்த பேஸ்புக்கானது இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் உலகிலுள்ள 7 பில்லியன் மக்களில் 1 பில்லியனை தன் பயனர்களாக மாற்றியுள்ளது என்றால் இதன் வளர்ச்சி எத்தகையது என உணரமுடிகின்றதல்லவா?.

இத்தனைக்கும் பேஸ்புக்குக்கு போட்டியெனக் கருதும் Twitter மற்றும் Google Plus ஆகியவற்றில் முறையே 100, 130 மில்லியன் பயனாளர்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் குறுகிய காலத்தில் இவ்வாறானதொரு பாரிய சாதனைமிகு இலக்கினை அடைந்திருப்பதற்கு காரணம் சமூக இணையத்தளங்களில் எதனை மக்கள் விரும்பி எதிர்பார்க்கின்றனர் என தெரிந்து அதற்கேற்ற வகையில் செயற்படுவதுடன் சமூக வலைத்தளங்களின் தேவைகளை மக்களிடையேயும் அதேவேளை வர்த்தகத்தில் சமூகவலைத்தளங்களின் பங்கு என்னவென்பததை வியாபர ரீதியாக விளிப்புணர்வை ஏற்படுத்தியதுமே எனலாம்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்த பலரும் இப்பொழுது தங்களது ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பேஸ்புக் ஒவ்வொருவரிடத்தில் தன்னை நியாயப்படுத்திக் கொண்டுள்ளது. அது வாணிபமாக இருந்தாலும் சரி என்பதை இன்று ஒவ்வொரு விளம்பரங்களிலுமுள்ள பேஸ்புக்கின் லோகோ தெரியப்படுத்துகிறது.

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் எமக்கு இருக்கும் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் பேஸ்புக் போன்ற ஒரு நல்ல நண்பன் இப்போதைக்கு அவசியம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தினசரி நடைபெறும் நிகழ்வுகளை அனைவரிடமும் கூறி மகிழவோ ஆறுதலடையவோ முக்கிய விடயங்களை நாட்குறிப்புப் புத்தகத்தில் (னுயைசல) எழுதவோ பரபரப்பான எமது வாழ்க்கையில் அவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்பதென்பது அரிதாகவே உள்ளது.

இதற்காகவே 'டைம் லைன்' எனும் புதிய முறையினை கடந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தியது பேஸ்புக். இதில் ஆண்டு வாரியாக பயனாளர்களின் செயற்பாடுகள் பதிவாகும். இதனால் பயனாளி தன்னுடைய நினைவுகளை இலகுவில் மீட்டுப்பார்க்கக்கூடியதாக உள்ளது.

இருப்பினும் இம்முறையில் தற்போது மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் எதிர்மறை விமர்சனங்கள் அத்தனையையும் மீறி தற்போது பலரும் டைம் லைன் பக்கம் படையெடுப்பதை தடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. மாற்றம் ஒன்றுதானே மாற்றமில்லாது அந்த வகையில் டைம் லைனைத் தொடர்ந்து விரைவில் புதியதொரு செயற்பாட்டையும் அறிமுகம் செய்யவுள்ளது பேஸ்புக்.

பேஸ்புக்கில் நீண்ட கால குறைபாடாக பலரும் அலுத்துக்கொள்ளும் விடயங்களில் பிரதானமாவொன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான தெரிவு பட்டன் இல்லாமையே.
இதற்கு தீர்வாக பேஸ்புக்கில் விருப்பமான தகவல்கள் அல்லது புகைப்படங்களை 'லைக்' என்ற வாசகத்தை தேர்வு செய்து, விருப்பத்தை தெரிவிப்பது போல வோவ், லவ், பூம் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கான தெரிவு பட்டனையும் விரைவில் அறிமுகம் செய்யப்போகிறது.

மேலும் கணனிகளில் வைரஸ் பரவுவது போல பேஸ்புக்கிலும் பல்வேறு வகையான வைரஸ்கள் உலா வருகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக தாக்கும் பேஸ்புக் வோர்ம் எனப்படும் வைரஸ் தாக்கம்.

இது பேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. காரணம் இவ்வைரஸ் பயனாளர்களின் கடவுச்சொல்லை மாற்றியமைத்துவிடுகிறது. குறித்த இந்த வைரஸினால் இதுவரையில் 100 ஆயிரம் பயனாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் ஒவ்வொருவரையும் உளவு பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து மக்களிடையே காணப்படுகின்றது.  ரகசியங்கள் எதனையும் பாதுகாக்க முடியவில்லை எனவும் எரிச்சலடைகின்றனர். ஒரு முறை பேஸ்புக் ஸ்தாபகர் ஷக்கர்பேர்க்கின் தனிப்பட்ட படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வாறானதொரு வைரஸ் பிரச்சினை நிச்சயமாக பேஸ்புக்கிற்கு பெரியதொரு தலைவலியாயாகவே இருக்கும்.

இதுபோதாதென்று பேஸ்புக்கிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சில ஆய்வுகள் கருத்து வெளியிட்டு வருகின்றது.

எங்கேயும் எப்போதும் சதா பேஸ்புக் என்று இருப்பவர்கள் மன ரீதியான பல எதிர்மறை மாற்றங்களை சந்திப்பதாகவும் இதில் பெரியவர்களை விட சிறியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கபட்டுள்ளது. மேலும், பேஸ்புக் எல்லோரையும் பேஸ்புக் அடிமையாகவே மாற்றுகிறது எனறும் தெரிவிக்கப்படுகிறது.

மனநல நிபுணர்கள் கூறுவதை பார்த்தால் நாமக்கு தெரிந்த பேஸ்(முகம்)புக்கிற்கு இன்னொரு முகம் இருப்பது போல தெரிகிறதே.

சாதரணமாக மாணவ, மாணவிகள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இதனை பேஸ்புக் மேனியா என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல பேஸ்புக்கும் நஞ்சுதான் என்பதனையே இந்த ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றது. எனவே தகவல் பரிமாற்றத்திற்காக உருவான பேஸ்புக்கினை தேவைக்கேற்ப பயன்படுத்துவதே நல்லது.

என்னதான் பேஸ்புக் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அதன் வளர்ச்சியானது தற்போது ஜே (J)வடிவிலேயே உள்ளது. இதேவேளை பேஸ்புக் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவுக் கொடி பிடிக்கவும் பெரும் கூட்டமே இருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறனவர்களின் கருத்துக்களும் மறுப்பதற்கில்லை என்றே தோன்றுகின்றது. குறிப்பாக ஏராளமான மனிதர்களின் மனங்களில் ஒரு நல்ல விடயத்தை விதைத்திருப்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தக் கடினமான விடயங்களில் ஒன்று 'அடுத்தவரை பாராட்டி அங்கீகரிப்பது'. இதனை எந்தவொரு முன்னோடியினாலும் மனித மனங்களில் புகுத்த முடிவதில்லை.
ஆனால் பேஸ்புக்கோ சாத்தியமற்ற அந்த மனமாற்றத்தினை எம்மிடையே சாதாரணமாக ஏற்படுத்திருப்பதினை ஒவ்வொருவரினதும் பேஸ்புக் சுவரிலுள்ள Status, Photos மற்றும் இதர விடயங்களில் விழுந்துள்ள 'Likes' உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதுமட்டுமன்றி சில ஆய்வுகளும் பேஸ்புக்கின் பக்கமாக உள்ளது. எங்ரி பேட் மற்றும் சமூகவலைத்தளங்கள் என்பன தொடர்ச்சியாக அலுவலகங்களில் வேலைசெய்பவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் அவை மூளையை சுறுப்பாக்கச் செய்வதுடன் வேலைசெய்வோரை உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகவும் அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது. எனவே பேஸ்புக்கில் எங்கரி பேட் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

வழக்கம்போல இதற்கும் சில எதிர்மறை கருத்துக்களை வெளியிடுவோர் இல்லாமலில்லை. சமூகவலைத்தளங்களின் பயன்கள் தெரியாமலும் புரியாமலும் பேஸ்புக் பயன்படுத்துதையே குற்றம் என்கிற அலுவலங்கள் இன்றும் இருக்கிறது இவர்களுக்கு இது தெரியுமா இல்லை புரியுமா?
இவற்றை எல்லாம் மிஞ்சும் விதமாக, பேஸ்புக்கிலுள்ள 'LIKE' இனை உணர்ச்சிகரமானதாக மாற்றும் பொருட்டு ஜெக்கட் ஒன்றினை அமெரிக்காவின் மெசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன் செயற்பாடுகள் என்னவெனில், பேஸ்புக்கில் நமது நண்பர்களில் ஒருவர் நாம் பகிரும் எதாவது ஒரு விடயத்தினை 'லைக்' செய்யும் போது நாம் அணிந்திருக்கும் 'ஜெக்கட்' காற்றினால் நிரப்பப்பட்டு எம்மை அந்நண்பர் அணைப்பது போன்றதொரு உணர்வைத் தரும்.

தொடர்ந்து நாம் அந்த ஜெக்கட்டினை மீண்டும் அணைக்கும் போது அந்நபர் அந்த ஜெக்கட்டினை அணிந்திருந்தால் அவருக்கும் அத்தகைய உணர்வை இந்த ஜெக்கட் வழங்குமென இதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் 'லைக்' இனை சாதாரணமானதொரு விடயமாகப் பார்க்காமல் அதனை உணர்ச்சிபூர்வமான நம்மை ஊக்குவிக்கும், அன்பை வெளிப்படுத்தும் ஒரு விடயமாக மாற்றுவதற்காகவே இந்த ஜெக்கட்டினைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பலவகையில் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுடன் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது பேஸ்புக். அதாவது கடந்த மே மாதம் அமெரிக்கப்பங்குச் சந்தையிலும் கால்பதித்தது. வெற்றி முகத்திலுள்ள பேஸ்புக்கிற்கு இதுவும் வெற்றியளிக்கும் என்றே பல பங்குச் சந்தை வல்லுனர்கள் அப்போது கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் இன்றுவரையில் அவ்வப்போது இதற்கு வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.

பங்குச் சந்தையில் பேஸ்புக்கின் வரவு குறித்து அதன் உரிமையாளர் மார்க் ஷக்கர்பேர்க் கூறுகையில், நாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக சேவைகளை விரிவுபடுத்தவில்லை சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவே பணம் சம்பாதிக்கிறோம் என்றார் இதிலிருந்தே நாம் பேஸ்புக்கின் வளர்ச்சியையும் பல திட்டங்கள் அதன் கைவசம் உள்ளதனையும் புரிந்துகொள்ளமுடியும்.

மேலும், தற்போது இணையம் பயன்படுத்தும் அனைவரையும் பேஸ்புக்கில் இணைப்பதனை பிரதானமான இலக்காகக் கொண்டே தனது எட்டாவது பிறந்த நாளிலிருந்து பேஸ்புக் செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் சோதனைகள் பல கடந்து சாதனைகளையும் இமாலாய இலக்குகளையும் நோக்கி பயணிக்க காரணம் தற்போதைய தலைமுறையானது தொழில்நுட்பத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளமையே.

எனவே இந்த பேஸ்புக்கின் மூலம் சிறப்பான தகவல் பரிமாற்றங்கள் நடந்தால் அவை வரவேற்புக்குரியவையே! ஏனெனில் இந்த தகவல் பாரிமாற்ற வழக்கமே பேஸ்புக்கினை உருவாக்கி உலகிலேயே கவனித்தக்க மனிதர்களில் ஒருவராக 28 வயதேயான மார்க் ஷக்கர்பேர்க்கை மாற்றியுள்ளது.

-அமானுல்லா எம். றிஷாத்