Total Pageviews

Friday, June 21, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சுந்தர் சி.
நட்சத்திரங்கள் - சித்தார்த், ஹன்சிகா, சந்தானம்
ஒளிப்பதிவு - கோபி
எடிட்டிங் - பிரவீன் - ஸ்ரீகாந்த்

காதலில் சொதப்புவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுவதற்கு பதில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் காதலில் வெற்றிபெற எப்படி தீயா வேலைசெய்யணும் என்பதை சித்தார்த்துடன் இணைந்துந்து சந்தானம் கலகலப்பூட்டுவதே 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் கதை.

பரம்பரை பரையா காதல் திருமணம் செய்த குடும்பத்தில் பிறந்த குமார், சிறு வயதிலிருந்தே பெண்களென்றெலாலே நாமக்கு சரிப்பட்டு வராது என ஒதுங்கியிருக்கிறார். இவர் எப்படி காதலில் தீயா வேலை செய்து காதலியை கரம் பிடிக்கிறார் என்பதை அரங்கமே சிரிக்கும் திரைக்கதையில் சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

கலகலப்பு படத்தின் அதேபாணியில் இவருதாங்க இவரு என்ற அறிமுகத்தோடு படம் ஆரம்பாவது முதல் சிரிப்பலையும் ஆரம்பமாகிறது. ஐ.டி நிறுவனமொன்றில் அப்பாவியாக நாயகன் குமாரு வேலைபார்க்கிறார். அவரை அடப்பாவியாக மாற்ற சஞ்சனாவாக வேலைக்கு புதிதாக இணைகிறார் ஹன்சிகா.

அதுவரையில் ஐ.டி நிறுவனத்தை சுற்றி வந்த கதை சஞ்சனாவையும் குமாரையும் கூடவே சந்தானத்தையும் சுற்றத் தொடங்குகிறது. வழக்கம்போல பார்த்த நொடியிலேயே பாடல் ஒன்றையில் கனவில் பாடி காதலில் விழுகிறார் நாயகன்.

பின்னர் எப்படி சஞ்சனாவை காதலிக்க வைப்பது என்ற ஒரே சிந்தனையில் சுற்றுகிறார். இதற்காக காதலில் சேர்க்கிறது பிரிக்கிறது என சல்மான்கானுக்கே திட்டம் கொடுப்பதையே தொழிலாக செய்யும் சந்தானத்திடம் செல்கிறார் குமார்.

இந்த இடத்தில் மோக்கியா என்ற பாத்திரத்தில் அறிமுகமாகும் சந்தானத்திற்கு திரையரங்கில் கிடைக்கும் கைதட்டல் வரவேற்பு அடங்க சில நிமிடங்களாகின்றது. ஆனால் நாயகன் சித்தார்த் அறிமுகமகும் காட்சி குண்டூசி விழுந்தா கேட்கிற அளவுக்குக்குதான் இருந்தது. அதற்கேற்ப சந்தானத்தின் அறிமுகமும் அதற்கேற்றாற் போல நாயகன் ரேஞ்சுக்கே உள்ளது.

இனி என்ன சந்தானத்தின் கல கல சிரிப்புடன் குமாரு காலில் வெற்றியடைகிறார். அப்போது பெரிய திருப்பமாக தனது திட்டத்தில் குமாரு காதல் வலையில் விழுந்த சஞ்சனா தனது தங்கை என்பது தெரியவருகிறது. பின்னர் இவர்களது காதலை எப்படியாவது பிரிக்கணும் என தீயா வேலை செய்கிறார் சந்தானம்.

இவற்றையெல்லாம் தாண்டி குமார் எப்படி காதலியை கரம்பிடித்து சுபம் போடுகிறார்கள் என்பதே மீதிக்கதை. கதை என்பதை விட திரைக்கதையே இங்கு படத்தினை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. படத்தில் குறைகளும் உண்டு ஆனால் அவையும் ரசிகர்களின் சிரிப்பில் மறைந்தே விடுகிறது. அதுவே இயக்குனர் சுந்தர் சி.யின் வெற்றியும் கூட.

படத்தின் நாயகன் சித்தார்த் தேவையான அளவுக்கு நடித்து ரசிகர்களை தன்பங்கிற்கு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அதேபோல நாயகி கவர்ச்சி உத்தரவாதமாக இளைஞர்களை கிறங்கடிப்பதோடு பாத்திரத்திற்கு பொருந்திப்போகிறார். கணேஷ் வெங்கட் ராமன், தேவதர்ஷினி, பாஸ்கி, சித்ரா லக்ஷமன் என ஏனைய பாத்திரங்களும் அளவாக நடித்து அளவுக்கதிமாக சிரிப்பை ஏற்படுத்த உதவுகிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரையும் தாண்டி நிற்கிறார் சந்தானம். நீண்ட நாட்களின் பின்னர் இரட்டை அர்த்த வசனங்களை மிக மிக குறைத்துப் பேசி முகஞ்சுழிக்க வைக்காமல் சிரிக்க வைக்கிறார்.

பாடத்திற்கு தேவையான பின்னணி இசை. படத்துடன் இணைந்து பாடல்கள் என்றாலும் பெரிதாக மனதில் நிற்கும்படி இல்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு நன்று. அதேபோல பிரவீன் - ஸ்ரீகாந்த் எடிட்டிங்கும் படத்தினை சிரிப்பூட்டுவதாக சிறப்பாக உள்ளது.
ஆர்ப்பாட்டமாக வந்து அடங்கிப்போகிற படங்களுக்கு மத்தியில் அமைதியாக வந்து அசத்தியிருக்கிறது இந்த தீயா வேலை செய்யணும் குமாரு.

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அக்மார்க் சுந்தர் சி. படமாக உருவாக்க தீயா வேலை செய்திருக்கிறார் சுந்தர் சி.

மொத்தத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு... வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற குமாரு.

-அமானுல்லா எம். றிஷாத்